வளைகாப் போடு படபூஜை!



‘கயல்’ சந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு’. நாயகி அஞ்சு குரியன். இசை அச்சு ராஜாமணி. ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மகாவிஷ்ணு இயக்குகிறார்.
சமீபத்தில் இதன் தொடக்க விழா பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமாக அமைந்திருந்தது. விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது என்பதுதான் விழாவின் ஹைலைட். விழா முடிந்ததும் இயக்குநர் மகாவிஷ்ணுவிடம் பேசினோம்.

‘‘கடந்த பல ஆண்டுகளாக நான் சன் டிவியில் இருந்தேன். சினிமாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில் 1000 பேரிடமாவது கதை சொல்லியிருப்பேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. காரணம், தப்பான கதை, தப்பான படக் குழு, தப்பான மேனேஜர் என்று அமைந்ததால்தான்.

ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை. எனக்கு அப்படி அமைந்துள்ள படம்தான் ‘நான் செய்த குறும்பு’. இதை ரொமான்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று சொல்லலாம். இது பட்ஜெட் படமாக இருந்தாலும் நம்ப முடியாத அளவுக்கு ரிச் குவாலிட்டி இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்துவிட்டு ட்விட்டரில் பலவிதமான கருத்துக்கள் வந்தன.

சிலர் அந்த மாதிரியான படமாக இருக்குமோ என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. இது சுரேஷ் கிருஷ்ணா சாரின் ‘ஆஹா’ படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும்படி இருக்கும். பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை ஆண்களும் அனுபவித்தால்தான் பெண்களின் வலி தெரியும் என்பதை யதார்த்தமாகச் சொல்லியுள்ளேன்.

இது பெண்களின் மகத்துவத்தைச் சொல்லும் படம் என்பதற்காக துவக்க விழாவில் வளைகாப்பு நடத்தினோம். கதையிலும் பெண்களுக்கான முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு ஆண்கள் பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதை அதிகரிக்கும்’’ என்றார்.

- எஸ்