சினிமா, இளைஞர்களைக் கெடுக்கிறதா?பிலிமாயணம் 48

கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா என்கிற கேள்விக்கு குத்துமதிப்பாகக்கூட விடை சொல்லமுடியாது. அதுவேதான் சினிமா, இளைஞர்களைக் கெடுக்கிறதா என்கிற கேள்விக்கும் விடை.ஒரு காலம் இருந்தது. அப்போது தங்கள் பிள்ளைகள் சினிமா பார்த்தால் கெட்டுப் போவார்கள் என்று பெற்றோர் பயந்தனர். சினிமா பார்ப்பது என்பதே சூதாட்டம், கேளிக்கை மாதிரி விலக்கப்பட்ட சமாச்சாரமாக இருந்தது.

கருப்பு, வெள்ளை காலத்தில் புராணப் படங்கள் முதலில் வந்தது. பின்னர் குடும்பப் பிரச்சினைகளைச் சொல்லும் குடும்பப்படங்கள். அதிகபட்சமாக சமூகப் பிரச்சினைகளை அலசும் ‘பராசக்தி’ மாதிரி ஒரு சில படங்கள். இவையெல்லாம் பெற்றோருக்கு பிரச்சினையில்லை. ‘காதல்’ என்கிற வார்த்தைதான் அவர்களைப் பதறச் செய்தது. சினிமாவில் ஹீரோ, ஹீரோயினைக் காதலிப்பதைக் கண்டு தங்கள் பிள்ளைகள் வழிதவறி விடுவார்கள் என்று அஞ்சினார்கள்.

 புராணப் படமாக இருந்தாலும், சரித்திரப் படமாக இருந்தாலும், சமூகப் படமாக இருந்தாலும் காதல் இல்லாமல் கதை சொல்லமுடியாது. அந்தக் காதலைக் கண்டுதான் தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போவார்கள் என்று அந்தக்கால பெற்றோர் கருதினார்கள்.கொஞ்சம் காலம் கழிந்த பிறகு படங்களில் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றன. கொலைகளைப் பின்னணியாகக் கொண்டு திகில் படங்கள் வெளிவந்தன. உறவுமுறைகளில் உள்ள சிக்கல்களைப் பேசிய படங்கள் எழுபதுகளில் ஏராளம். இந்தக் காலகட்டத்திலும்கூட சினிமாவைப் பார்த்தால் இளைஞர்கள் கெட்டுப்போவார்கள் என்ற கருத்து பட்டிமன்றங்கள் போன்ற பொதுமேடைகளில்கூட முன் வைக்கப்பட்டது.

விதவையைத் திருமணம் செய்யலாம் என்று சீர்திருத்தம் பேசியது சினிமா. நண்பனின் மனைவி மீது மையல் கொண்ட இளைஞனைக் காட்டியது சினிமா. குடும்பத்திற்காக பாலியல் தொழில் செய்த பெண்ணை ஹீரோயினாக முன்னிறுத்தியது சினிமா. அடக்குமுறை ஆண்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண்களை அடையாளம் காட்டியது சினிமா. இதையெல்லாம் கண்டு இளைஞர்கள், மரபை மீறிவிடுவார்களோ என்று பெற்றோருக்கு அச்சம்.

ஆனால் -தங்கள் பிள்ளைகளைக் கெடுப்பவர்களாக நம்பிய சினிமாக்காரர்களைத்தான் தங்களை ஆளுவதற்கு இதே பெற்றோர் வாக்களித்து அரியணை ஏற்றினார்கள் என்பதுதான் சுவாரஸ்யமான முரண்.தேசவிடுதலை, மொழிப்பற்று, சுயமரியாதை, சுய ஒழுக்கம், பெண் விடுதலை, தீண்டாமை எதிர்ப்பு, வெகுஜனத் திரள் புரட்சி, தொழிலாளர் உரிமை என்று சினிமா செய்த எத்தனையோ நல்ல காரியங்களை மறந்துவிட்டு, இன்னமும் கூட சினிமாவை இளைஞர்களைக் கெடுக்கும் ஊடகம் என்று நம்புவோர் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்.

சினிமா என்பது கலை வடிவம். அதற்கு தீவிரமும் உண்டு, பொழுதைப் போக்கச் செய்யும் வெகுஜன அம்சமும் உண்டு. எனினும், சினிமாவை பாலியலோடு தொடர்புபடுத்தி, அதை பெரிய குற்றச்சாட்டாக வைத்து அதன் அரிய சாதனைகளைப் புறம் தள்ளுவது எவ்வகையில் நியாயம்?

பத்து வயது குழந்தையில் தொடங்கி பல் விழுந்த முதியோர் வரை இன்று ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறார்கள். அதில் தெரியாத ஆபத்து, இரண்டரை மணி நேர சினிமாவில் இவர்களுக்கு எப்படித் தெரிகிறது?

சினிமாவுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. கலையும் தவறாக கையாளப்படுவது உண்டு. அது சினிமாவுக்கும் பொருந்தும். சினிமா என்றைக்குமே வெண்மை யான திரைதான். அதில் நாம் பூசும் வண்ணங்கள் எவை என்பதுதான் கேள்வி. படைப்பாளிகளும் சமூகத்தில் இருந்தே உருவாகிறார்கள். ஒருசிலர் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ குத்துகிறார்கள் என்பதற்காக அது கருந்திரை ஆகிவிடுமா?

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்