ஜருகண்டி... ஜருகண்டி...ஜெய் வந்துட்டாரு!சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகளாகவே ஏராளமான ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தவர் நடிகர் நிதின்சத்யா. இருந்தாலும் எப்போதும் சினிமா மீதான அவரது காதல் குறைந்ததே இல்லை. எனவேதான் இப்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார். தான் தயாரிக்கும் படத்தில் தானே ஹீரோவாக நடிப்பதுதான் நடிகர்களின் வழக்கம். இந்த வழக்கத்தையும் உடைத்திருக்கிறார் நிதின்.

யெஸ். ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை இயக்கும் பிச்சுமணி, வெங்கட்பிரபுவிடம் சினிமா பயின்றவர். படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் தீவிரமாக இருந்த இயக்குநரைச் சந்தித்தோம்.“தமிழில் படமெடுத்துட்டு தெலுங்குலே டைட்டிலா? ஏமி சார் நியாயம் இதி?”“தெய்வமே, நீங்க வேற மொழிப்போரைக் கிளப்பிடாதீங்க.

பாக்கிறவங்க எல்லாரும் இப்போ எங்கிட்டே கேட்கிற முதல் கேள்வியே இதுதான். அந்த விதத்தில் ஏதோ ஒரு வகையில் எங்கள் டைட்டில் மக்கள் மத்தியில் ரீச்சாகியிருப்பது சந்தோஷமாதான் இருக்கு. மத்தபடி டைட்டிலுக்கான விளக்கம் கொடுக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு. இந்தியாவைப் பொறுத்தவரை திருப்பதி செம ஃபேமஸ்.

லார்டு பாலாஜிதான் மாஸ். திருப்பதி போன எல்லாருக்குமே ‘ஜருகண்டி’ என்கிற தெலுங்குச் சொல்லுக்கு அர்த்தம் தெரியும். நாங்க எதுக்கு ‘ஜருகண்டி’ சொல்லுறோமுன்னு படத்தைப் பார்த்தீங்கன்னா புரியும். அதுக்கப்புறம் சொல்லுங்க, இந்த டைட்டில் நியாயமா இல்லையான்னு...”

“அப்படியென்ன அப்பாடக்கர் கதை?”

“ஹீரோ மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன். அஞ்சுக்கும் பத்துக்கும் அலையாம நிம்மதியா ஒரே கட்டமாக வாழ்க்கையில் செட்டிலாக ஆசைப்படுகிறான். சொந்தமாக தொழில் தொடங்க பேங்க் லோன் வாங்குறான். அது அவனுக்கு பிரச்சினையாக மாறி விடுகிறது. ஹீரோயின் தன் படிப்புக்கு ஏத்த வேலையைத் தேடும்போது சில பிரச்சினைகளைச் சந்திக்கிறார். ரோபோ ஷங்கர் கையில காசு அளவுக்கு அதிகமாக இருக்கும்.

அதிக பணம் வைத்திருக்கும் அவருக்கும் ஒரு சில பிரச்சனைகள் வரும். இந்த மூன்று கதாபாத்திரங்களும் எப்படி ஒரே புள்ளியில் இணைகிறார்கள் என்பதை கமர்ஷியல் ஃபார்முலாவில் சொல்லியுள்ளேன். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் நமக்கு தேவைன்னு வரும்போது நாம் பண்ணும் பிரச்சினையை நியாயப்படுத்துவோம். இதுதான் படத்தோட ஒரு பாராகிராப் கதை.”

“உங்க ஹீரோ ஜெய், எப்போ பார்த்தாலும் டிராஃபிக் போலீஸ்காரர்களோடு தன்னோட காரை வெச்சுக்கிட்டு போஸ் கொடுக்கிறாரே?”
“கொஞ்சம் ஜாலியான ஆளு சார். அதனாலேதான் சட்டத்துக்கு புடிக்க மாட்டேங்குது. அதை விடுங்க. சமீபத்தில் ஜெய் ஒரு ட்வீட் பண்ணினார். ‘ஜருகண்டி’ என் இதயத்துக்கு நெருக்கமான் படம் என்பதுதான் அது.

அப்படி ரொம்ப ரொம்ப ரசிச்சி ரசிச்சி... பிடிச்சி பிடிச்சி... இந்தப் படத்தை பண்ணியிருக்கிறார். அவருடைய கேரக்டர் பெயர் சத்யா. ஜெய்யோட முந்தைய படங்களில் அவருடைய கேரக்டரில் மெல்லிய சோகம் காணப்படும். அதை இந்தப் படத்தில் முழுக்க உடைத்திருக்கிறார். டோட்டலா தன் இமேஜை மாற்றிக் காட்டியிருக்கிறார்.

அதே மாதிரி அவருடைய ஒத்துழைப்பு பற்றியும் சொல்ல வேண்டும். படம் ஆரம்பித்த டே ஒன்லயிருந்து இப்ப வரைக்கும் மிகப்பெரிய சப்போர்ட் கொடுத்து வருகிறார். வெளியில அவரைச் சுத்தி சர்ச்சைகள், றெக்கை கட்டிப் பறந்தாலும் அவருடைய வேலையை மிகச் சரியாக எங்க படத்துக்காக செய்தார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு இயக்குநரா இல்லாம ஃப்ரெண்ட் மாதிரி பழகினார். என்னைப் பொறுத்தவரை ஜெய் பக்கா புரஃபஷனல் ஆர்ட்டிஸ்ட்.”

“ஹீரோயின் அழகா இருக்காங்களே?”

“ஆக்சுவலா இந்தப் படத்துக்காக மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், மடோனா செபாஸ்டின் என்று பெரிய ஹீரோயின் பார்க்கலாம் என்று தயாரிப்பாளர் சொன்னார். எனக்கு ஃப்ரெஷ் ஃபேஸ் இருந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. நாலைந்து பேர்கிட்ட  ஆடிஷன் பண்ணினோம். அதுல செலக்ட்டானவர்தான் ரெபா போனிகா ஜான். மலையாளத்துல அவர் நடிச்ச படங்கள் செம ஹிட்.

தமிழ்ல இதுதான் முதல் படம். நாங்கதான் தமிழில் அறிமுகப்படுத்துகிறோம். அவங்க கேரக்டர் பெயர் கீர்த்தி. இந்தப் படத்துக்குப் பிறகு அவங்களுக்கு தமிழ்ல நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். படத்துல அவருக்கான ஸ்பேஸ் நிறைய இருக்கும். சும்மா ரெண்டு மூணு சீன்ல சைட் அடிச்சிட்டு போற மாதிரி இல்லாம அவங்களைச் சுத்தியும் கதை நகரும். கதையில் அவருக்குன்னு தனியாக ஒரு போர்ஷன் இருக்கும். யாரோடவும் கம்பேர் பண்ண முடியாதளவுக்கு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.”

“வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“ரோபோ சங்கர் முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார். நாலைந்து டிராக்கிற்கு மட்டும் வந்து போகாமல் படம் முழுக்க காமெடியில் கலக்கி எடுத்திருக்கிறார். இது தவிர இளவரசு, டேனி, போஸ் வெங்கட் என்று படத்துல வரும் எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும். எந்த கேரக்டரையும் கதையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.”

“இசை?”

“ஜெய்யோட பிரதர் போபோசஷி பண்ணியிருக்கிறார். ஏற்கனவே ‘குளிர்’ போன்ற ஏராளமான படங்கள் பண்ணியிருக்கிறார். தேவா சார் ஃபேமிலி என்பதை மீண்டும் தன் வெரைட்டியான பாடல்களால் நிரூபித்திருக்கிறார். இந்தப் படத்தோட முதுகெலும்பு யார்னு கேட்டா கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர்.

நான் எதிர்பார்த்ததைவிட பிரமாதமான ரிசல்ட் கொடுத்தார். எடிட்டர் எல்.கே.பிரவீன், நேஷனல் அவார்ட் வின்னர். நீண்ட நாள் நண்பர். இந்த ஸ்கிப்ரிட் எப்போ என் மைண்ட்ல தோன்றியதோ அப்போதிலிருந்து அவரிடம் இந்தக் கதையைப் பற்றி சொல்வேன்.

ஷாட் பை ஷாட் சீன் டிவிஷன் பண்ணி ஸ்பாட்லேயே எடிட்டிங் வெர்ஷன் எப்படி இருக்கும்னு சொல்வார். தயாரிப்பாளர் நிதின் சத்யாவுக்கு ரொம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். முதல் முறை கதை சொல்லும்போதே அவர் இம்ப்ரஸானார். இன்னொரு தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரியும் ரொம்ப சப்போர்ட் பண்ணினார்.”

“உங்களைப்பத்தி சொல்லவேயில்லையே?”
“சொந்த ஊர் திருநெல்வேலி. ஐடிஐ முடித்துவிட்டு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தேன். எங்க குடும்பமும் சினிமா குடும்பம்தான். அப்பா விநியோகஸ்தர். சுப்பு பஞ்சு சார் மூலம் சினிமா தொடர்பு கிடைத்தது. ஜெயம் ரவி நடித்த ‘மழை’தான் நான் உதவி இயக்குநரா வேலை செய்த முதல் படம். இயக்குநர் வெங்கட் பிரபு நடிகராக இருந்த சமயத்திலிருந்து நண்பர்.

‘சென்னை - 600028’ டைரக்‌ட் பண்ணும்போது அசிஸ்டெண்ட்டா ஜாயின் பண்ணினேன். பா.ரஞ்சித்தும் அதில் உதவி இயக்குராக வேலை பார்த்தார். ‘மங்காத்தா’வுக்குப்பிறகு வெளியே வந்து படம் இயக்க வாய்ப்பு தேடினேன். நிதின் சத்யா என்மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரம்மாண்டமாக செலவு செய்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையைக் காப்பாத்தியிருக்கிறேன் என்று என் உள் மனசு சொல்லுது.”

- சுரேஷ்ராஜா