வண்ணத்திரை நடுப்பக்கத்துக்கு போஸ் கொடுக்கமாட்டேன்!



அனிஷா அம்ரோஸ் அறிவிப்பு

வழக்கமாக கேரளாவிலிருந்து அழகிகளை இறக்குமதி செய்யும் வழக்கம் கொண்டது கோலிவுட். வழக்கத்துக்கு மாறாக டோலிவுட்டிலிருந்து ஒரு பியூட்டி குயீனை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அனிஷா அம்ரோஸ். ‘வஞ்சகர் உலகம்’ மூலம் அறிமுகமாகும் வஞ்சியை ஒரு பொன்மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

“எங்க சென்னை செட் ஆயிடிச்சா?”

“ரொம்ப நல்லா இருக்கு. தமிழர்களோட விருந்தோம்பல் சூப்பர். எல்லாரும் அவங்க வீட்டு பொண்ணு மாதிரி என்னை ட்ரீட் பண்றாங்க. தமிழ் மண் வந்தாரை வாழவைக்கும் பூமி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இப்போதுதான் அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.”
“மூணே மூணு வார்த்தைகளில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்?”

“தன்னம்பிக்கை + துணிச்சல் + போராட்டக் குணம்.”“உங்க குடும்பப் பின்னணி?”

“அப்பாவுக்கு சொந்த ஊர் விசாகப்பட்டினம் - அம்மாவுக்கு வட இந்தியா. நான் வளர்ந்தது, படித்தது எல்லாமே ஒடிசாவில்தான். எங்க குடும்பத்துக்கும், கல்வித்துறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. குடும்பத்திலும் பட்டதாரிகள் அதிகம். விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவில் எங்களுக்கு சொந்தமாகப் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. அப்பாவும், தங்கையும்தான் இதன் நிர்வாகத்தை எல்லாம் பார்த்துக் கொள்கிறார்கள்.”
“கல்வியாளரான உங்கள் அப்பா எப்படி உங்களை நடிக்க சம்மதித்தார்?”

“சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற திட்டம் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை. எஜுகேஷனல் பேக்கிரவுண்ட் ஃபேமிலி என்பதால் எனக்கும் நிறைய படிக்கும் எண்ணம்தான் அதிகமாக இருந்தது. எம்பிஏ முடித்ததும் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கைக்கு அடங்காத அளவு சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. சும்மா இருக்கும் நேரங்களில் என் போட்டோஸை ஃபேஸ்புக்கில் அப்லோட் பண்ணுவேன். லைக்குகள் குவியும். அதைப் பாத்துட்டுதான் என் முதல் தெலுங்குப் படம் ‘அலைஸ் ஜானகி’ வாய்ப்பு கிடைத்தது.

கடவுள் பக்தி அதிகம் உள்ள கிறிஸ்தவ குடும்பம். என்னுடைய திறமையை கடவுளுக்கும், கல்விச் சேவைக்கும் பயன்படுத்தவே எங்கள் குடும்பத்தார் விரும்பினார்கள். சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டால் காஸ்டிங் கவுச், கிசுகிசு, கான்ட்ரவர்ஸி போன்ற விஷயங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பது எனக்கும் தெரியும். இருப்பினும், கடவுள் புண்ணியத்தில் இதுவரை கண்ணியமாகவே நடத்தப்பட்டுள்ளேன். தெலுங்கில் நான் நடித்த படங்களும் மக்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்திருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு ஆரம்பத்தில் அதிருப்தி இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.”

“சினிமா அனுபவம் உங்களுக்கு எப்படி இருக்கிறது?”

“திரில்லிங்கா இருக்கு. பெரிய துறை என்பதால் நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிக்க முடிகிறது. சம்பளத்தைவிட இது பெரிய விஷயமில்லையா? வாழ்க்கையே சுவாரஸ்யமாகி விட்டது. ஆரம்பத்தில் கேமரா முன்பு நிற்கும்போது கொஞ்சம் கூச்சம் இருந்தது. சக நடிகர்களின், டெக்னீஷியன்களின் ஒத்துழைப்பால் இப்போது சுத்தமாக நெர்வஸ் இல்லை.”

“தமிழில் நீங்க நடிக்கிற ‘வஞ்சகர் உலகம்’ பத்தி சொல்லுங்களேன்?”

“தமிழில் ஏற்கனவே சில வாய்ப்புகள் வந்தது. ‘வஞ்சகர் உலகம்’ கதையைக் கேட்டதுமே மறுக்க முடியவில்லை. புதுமையான கோணத்தில் சிந்திப்பவர்களோடு டிராவல் செய்வது சேலஞ்சிங்கா இருக்கும். இயக்குநர் மனோஜ் பீதா சொன்ன கதை அப்படியொரு நம்பிக்கையைக் கொடுத்தது. ‘வஞ்சகர் உலகம்’ படம் ஒரு நாயகன், ஒரு நாயகின்னு வழக்கமான கதை இல்லை. குரு சோமசுந்தரம், ஜான்விஜய் என அனைவரின் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். வித்தியாசமான கேங்ஸ்டர் சப்ஜெக்ட், தமிழில் எப்பவுமே பெரிய வரவேற்பைப் பெறுவது வாடிக்கைதானே?”
“உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“சம்யுக்தா என்ற இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்டா வர்றேன். எனக்கான ஸ்கோப் ரொம்பவே இருக்கு. படத்துல ஒரு முக்கியமான காட்சியை ஆக்ரோஷமான நடுக் கடலில் எடுத்தார்கள். அந்தக் காட்சியில் பெரிய படகிலிருந்து மீனவர்கள் பயன்படுத்தும் சின்ன படகிற்கு நான் ஜம்ப் பண்ண வேண்டும். டூப் இல்லாமல் நடித்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் சுறாவுக்கு இரையாகியிருப்பேன்.”
“இயக்குநர் மனோஜ் பீதா?”

“அவருடைய சிந்தனை வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு இருக்கும். நியூயார்க் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். டைரக்‌ஷன் பற்றிய நாலெட்ஜ் நிறைய கொண்டவர். இன்டர்நெட்டுலே ஸ்கைப் மூலமாகத்தான் எனக்கு நர்ரேஷன் பண்ணினார். அப்போதே அவருடன் ஒர்க் பண்ண முடிவெடுத்துட்டேன்.”

“கேரக்டருக்காக ரிகர்சல் பண்ணும் பழக்கம் உண்டா?”

“ஒரு படத்தில் கமிட்டானதும் எனக்கான வசனங்களை மனசுக்குள் ஓட்டி ரிகர்சல் பண்ணிப்பார்ப்பேன். சில சமயம் நிலைக் கண்ணாடி முன் ரிகர்சல் பண்ணுவேன். மற்ற சமயங்களில் என் சக நடிகர்களுடன் சேர்ந்து ரிகர்சல் பண்ணுவேன்.”

“ஒரு படத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் உங்கள் மைண்ட்ல தோன்றும் முதல் விஷயம்?”

“நல்ல கேரக்டர் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுவேன். அதன் பிறகு 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் நடிக்க வேண்டும் என்று மனதில் முடிவு பண்ணிக்கொள்வேன்”“ஐ.டி கம்பெனியில் வேலை செய்துவந்த உங்களுக்கு நடிகையாக இருப்பது பிடித்துள்ளதா?”

“நிச்சயமாகப் பிடிச்சிருக்கு. ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது 9 டூ 5 டைமிங் வேலை பார்த்தா போதும். ஆனால், சினிமாவில் அது போன்று எதிர்பார்க்க முடியாது. சில சமயம் டே அண்ட் நைட் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கும். சில சமயம் இரண்டு மணி நேரத்திலும் வேலை முடிந்துவிடும். தற்போது என் கவனம் முழுதும் சினிமாவில் இருப்பதால் இந்த புரபஷனை அதிகமாக நேசிக்கிறேன்.”
“உங்கள் விஷ் லிஸ்ட்டில் இருக்கும் ஹீரோக்கள் யார்?”

“தமிழுக்கு இப்பத்தான் வந்திருக்கிறேன் என்பதால் இந்தக் கேள்விக்கு இப்போது என்னால் பதில் அளிக்க முடியவில்லை. விஜய், அஜித், சூர்யா மாதிரி பெரிய ஹீரோக்களோடு படம் பண்ணினால் நான் தெரியமாட்டேன். ‘வஞ்சகர் உலகம்’ மாதிரியான கதைகளில் ஹீரோயினாக நடிப்பவர்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். மற்றபடி விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றவர்களுடன் நடிக்க நான் ரெடிதான்.”
“உங்கள் அழகு ரகசியம்?”

“ரொம்ப சிம்பிள். நல்லா தூங்குவேன். அளவான உடற்பயிற்சி அல்லது
நடைப்பயிற்சி செய்வேன். வயித்துக்கு வஞ்சனை பண்ணாம நல்லா சாப்பிடுவேன்.”
“பிடிச்ச உணவு?”
“சிக்கன்.”

“சினிமாவைத் தவிர வேறென்ன பிடிக்கும்?”
“எப்பவுமே ஆண்ட்ராய்டு போன் கையில் இருக்கும். சோஷியல் மீடியாவில் எனக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். இது தானா சேர்ந்த கூட்டம்.”
“கிளாமர்?”

“உங்க ‘வண்ணத்திரை’ பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இன்னும் இந்தக் கேள்வியைக் கேட்கலையேன்னு ஆச்சரியப்பட்டுக்கிட்டு இருந்தேன். மறக்காம கேட்டிருக்கீங்க. எனக்கு கிளாமர் செட் ஆகாது. எனவே, ‘வண்ணத்திரை’ நடுப்பக்கத்துக்கு போஸ் கொடுக்கணும்னு வற்புறுத்தாதீங்க.”
“சினிமாவில் உங்கள் இன்ஸ்பிரேஷன்?”

“தி ஒன் அண்ட் ஒன்லி ஷாருக்கான். ஐந்து வயதிலிருந்தே நான் ஷாருக்கின் ரசிகை.”
“சினிமாவில் உங்கள் லட்சியம்?”“என் திறமையை எல்லோரும் அங்கீகரிக்கக்கூடிய அளவுக்கு வளர வேண்டும்.”

- சுரேஷ்ராஜா