இட்லிபேத்திக்காக விபரீத முடிவு எடுக்கும் பாட்டி!

பேத்தியைப் படிக்கவைக்கும் சரண்யா, மருமகளால் துரத்தப்பட்ட கல்பனா, திருமணமாகாத முதிர்கன்னி கோவைசரளா -  மூவரும் ஒரே வீட்டில் வசிக்கும் தோழிகள். சரண்யாவின் பேத்திக்கு திடீரென அறுவை சிகிச்சைக்காக ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. தோழிகள் தங்கள் கையிருப்புடன் வெளியேயும் கடன் வாங்கி சரண்யாவுக்கு உதவுகிறார்கள்.

பணத்தை பேங்கில் டெபாசிட் செய்யப் போகும்போது நடக்கும் கொள்ளையில் இவர்களது பணமும் பறிபோகிறது. இவர்களது பணத்துக்குப் பொறுப்பேற்க வங்கி மறுக்கிறது. தொலைத்த இடத்திலேயே பணத்தை கண்டெடுக்க மூவரும் இணைந்து எடுக்கும் அதிரடி முடிவுதான் ‘இட்லி’.

கிரைம் த்ரில்லரா, காமெடிபடமா என்கிற குழப்பத்தில் இயக்குநர் வித்யாதரன் இருந்திருக்கிறார். அந்த பலவீனம் திரைக்கதையில் தெரிந்தாலும் சரண்யா, கல்பனா, கோவைசரளா கூட்டணி சமாளித்து படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி. வழக்கமான டபுள் மீனிங் சேட்டைகளால் அதிரவைக்கிறார்.

ஹரி கே.கே. இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், அந்தக் குறையை பின்னணி இசையில் தீர்த்திருக்கிறார். பாரதி கண்ணன், படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார்.கெட்டி சட்னியோடு பரிமாறியிருந்தால், இட்லி இன்னும் சுவையாக இருந்திருக்கும்.