செம போத ஆகாத



மது மங்கை மயக்கம்!

காதல் தோல்வியில் துவண்டு விழும் இளைஞன் அதர்வா. நண்பர் கருணாகரனுடன் குடித்துக் குடித்தே தன்னுடைய புண்பட்ட நெஞ்சுக்கு புனுகு போட்டுக் கொள்கிறார். அதுமாதிரியான ஒரு நிறைபோதையில் இருக்கும்போது, காதல் தோல்வியிலிருந்து மீள அதர்வாவுக்கு ஐடியா கொடுக்கிறார் கருணாகரன். ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்கிற பாணியில் ‘கன்னி கழிந்துவிட்டால்’ காதல் தோல்வி வலியிலிருந்து மீளலாம் என்கிறார்.

இதற்காக கருணாகரனே ஒரு மலையாள அயிட்டத்தையும் ஏற்பாடு செய்கிறார். அதர்வா தங்கியிருக்கும் பிளாட்டுக்கு அனைகா சோட்டி அம்சமாக வருகிறார். முதல் முறையாக ‘தரிசனம்’ காண ஆவலாகக் காத்திருக்கும் அதர்வாவுக்கு ஏகப்பட்ட தடைகள் பிளாட்டில் உருவாகின்றன. அந்தத் தடைகளையெல்லாம் மீறி அனைகாவை அணைக்க வரும்போது அதிர்ச்சி. யாரோ அனைகாவைக் கொலை செய்து விட்டிருக்கிறார்கள்.

சட்டென்று போதை தெளிந்து, கொலைப்பழியில் இருந்து மீளுவதற்கு அதர்வாவும், கருணாகரனும் எடுக்கும் கலகல முயற்சிகளே ‘செம போதை ஆகாதே’.சாஃப்ட்வேர் இளைஞன் வேடத்துக்கு அதர்வா அட்டகாசமாகப் பொருந்துகிறார். போதையில் புலம்புவதும், காதலி மிஸ்டியிடம் பதுங்குவதும், கருணாகரனை ஏய்ப்பதும், கொலை செய்யப்பட்ட அனைகாவைக் கண்டு அச்சப்படுவதுமாக நவரச நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

காதலியாக வரும் மிஸ்டிக்கு பெரிய வேலையில்லை. குடும்பப் பாங்காக வந்து போகிறார். ஒரு சில காட்சிகளே உயிரோடு வந்திருந்தாலும் அனைகாதான் இளைஞர்களின் கரகோஷத்தை அள்ளுகிறார். அவர் கொஞ்சிப் பேசும் மலையாளத் தமிழுக்கு அதர்வா மட்டுமின்றி ஒட்டுமொத்த தியேட்டரே கிறங்குகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அவர் ‘கவர்ச்சிகரமான’ பிணமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

காமெடிக்கு கருணாகரன் மொத்த குத்தகை எடுத்துக் கொண்டார். துணைக்கு தேவதர்ஷினி, சேட்டன், மனோபாலா என்று காமெடி ஏரியாகளை கட்டுகிறது. எனினும், ஓவர் காமெடியே த்ரில்லர் படத்துக்கு ஆதாரமான வேகத்தைக் குறைப்பது பெரிய மைனஸ்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், கோபி அமர்நாத்தின் கேமராவும் படத்துக்கு பெரிய பலம். பிரவீன் கே.எல். எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கறார் காட்டியிருக்கலாம்.ஒட்டுமொத்தமாக சொல்லப் போனால் பிரபா ஒயின்ஸில் விடிய விடிய சரக் கடித்த போதை யைப் படம் தருகிறது.