அசுரவதம்வதம் செய்யத் துடிக்கும் ஹீரோ!

மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ரவுக்கு  நாயகன் சசிகுமார் போன் செய்து ஒரு வாரத்தில் சாகப் போகிறாய் என்று மிரட்டுகிறார். யார் என்று தெரியாத ஒருவர் போன் செய்து மிரட்டுவதால் வசுமித்ர பதட்டமடைகிறார்.

மறுநாள் கடை வாசலில் நிற்கும் சசிகுமார், வசுமித்ரவைக் கொலைவெறியோடு பார்க்க, இவன்தான் தன்னை மிரட்டியவன்  என்று தெரிந்து கொள்கிறார் வசுமித்ர. சசியின் மிரட்டலும் விரட்டலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பின்னர் தனது  தாதா  நண்பர்கள் மூலமாக சசிகுமாரைப் பிடிக்க முயற்சிக்கிறார் வசுமித்ர.

தப்பிப் பிழைப்பதற்காக வசுமித்ர பல்வேறு இடங்களுக்கு தனது ஜாகையை மாற்றுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு உயிரைத் தாங்கிப் பிடிக்க அலைகிறார்.

சசி எதற்காக வசுவைக் கொலை செய்ய விரட்டுகிறார், வசு எதற்காக ஓடி ஓடி ஒளிக்கிறார் என்பதை பார்வையாளர்களுக்குச் சொல்லாமலே அறுபது சதவீத படத்தை நகர்த்திவிடுகிறார் இயக்குநர். வசுமித்ராவைக் கொல்வதற்காக சசி ஏன் அலைகிறார் என்பதற்கான காரணம் தெரியவரும்போது, கண்களை ஈரமாக்கும் காட்சிகள் விரிகின்றன.

படம் முழுக்க சசிகுமாருக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை ஏ4 பக்கத்துக்குள் அடக்கிவிடலாம். பார்வையில் தெறிக்கும் மிரட்டலாலும் உடல்மொழியாலும் கனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு நேர்ந்துகொண்டிருக்கும் கொடுமையை செல்போன் மூலமாக கேட்டுக்கொண்டே வில்லனிடம் கெஞ்சும்போது பாசக்கார அப்பாவாக உயர்ந்து நிற்கிறார்.

வில்லனாக வரும் வசுமித்ரா, அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சசிகுமாருக்கு பயந்து ஓடும் காட்சிகளில்
மரணபயத்தை கண்களில் காட்டிக்கொண்டே நடமாடுகிறார். கதையின் மையப்புள்ளியாக வரும் சிறுமி அவைகா சிறிது நேரமே வந்தாலும் மனதுக்குள் நிற்கிறார்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கோவிந்த் மேனன் பின்னணி இசையில் துவம்சம் செய்திருக்கிறார். உருகவைக்கும் கதை, நிமிர வைக்கும் திரைக்கதை அமைத்து சமூக நோக்கோடும் படம் இயக்கியிருக்கிறார் மருது பாண்டியன்.