முந்துது முந்தல்!



கோடம்பாக்கத்தில் இப்போது ஆச்சரியமாக பேசிக்கொள்கிற விஷயமாக ஆகியிருக்கிறது ‘முந்தல்’.பெரிய பெரிய படங்களே வார இறுதியைத் தாண்டுவதற்குள் தண்ணீர் குடிக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘முந்தல்’, ஐம்பது நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது பலரது புருவத்தை உயர்த்தியிருக்கிறது.

ஸ்டன்ட் கலைஞர் ஜெயந்த், இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். ஹீரோவாக அப்பு கிருஷ்ணா என்கிற புதுமுகம் நடித்திருக்கிறார். சித்த மருத்துவத்தின் சிறப்புகளையும், அதை அபகரிக்க நினைக்கும் வணிக சூழ்ச்சிகளையும் எடுத்துச் சொல்லும் இந்தத் திரைப்படம், வெறுமனே ஆவணப்படமாக மாறாமல் டிராவல் அட்வெஞ்ச்சர் படமாகவும் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

திரையுலக வேலை நிறுத்தம் முடிந்தவுடனேயே ‘முந்தல்’ வெளியானது. அதற்குப் பிறகு வெளிவந்த பெரிய படங்கள் சிலதேகூட பொட்டிக்குள் அடங்கிவிட்ட நிலையில், ஐம்பது நாட்களைக் கடந்தும் பல அரங்குகளில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கிராமப்புற அரங்குகளில் ‘முந்தல்’ படத்துக்கு நல்ல வரவேற்பு. அறிமுக ஹீரோ, புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்களோடு, தனக்கு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் படத்தை இயக்கிய ஜெயந்துக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

‘‘நான் இயக்கிய முதல் படமான ‘முந்தல்’ 50வது நாளைக் கடந்திருப்பது ஒரு இயக்குநராக எனக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. தற்போதைய தமிழ்ச் சினிமா சூழலில் ஒரு படம் இரண்டு வாரங்களைத் தாண்டி ஓடினாலே வெற்றியாகக் கருதப்படும் நிலையில், ‘முந்தல்’ 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பதை மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன்.

சமீபத்தில் இயக்குநர்கள் சங்கம் சார்பில் இயக்குநர்களுக்கு இந்தப் படத்தை திரையிட்டேன். கம்போடியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருப்பது குறித்து விக்ரமன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல இயக்குநர்கள் பாராட்டியதோடு, இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் இந்தியில் ரீமேக் செய்தால் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று ஆலோசனையும் கொடுத்தார்கள்.

மூத்த இயக்குநர்களின் பாராட்டு மற்றும் படத்தின் வெற்றியால் அடுத்த படத்தை பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளேன். தற்போது மூன்று பெரிய நடிகர்களிடம் கதை சொல்லியுள்ளேன். கால்ஷீட் போன்ற முதல் கட்ட வேலைகள் முடிந்தது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்’’ என்கிறார் ஸ்டன்ட் ஜெயந்த்.

- எஸ்