சீமானோட தங்கச்சி! சுபப்ரியா பரவசம்“என்னாலே இன்னமும் நம்ப முடியலை. சீமான், ஒரு அரசியல் கட்சியோட தலைவர். பெரிய சினிமா டைரக்டர். அவரே என் நடிப்பைப் பாராட்டிட்டாரு” என்று துள்ளிக் குதித்துக் கொண்டே இருக்கிறார் சுபப்ரியா. இயக்குநர் களஞ்சியம் உருவாக்கியிருக்கும் ‘முந்திரிக்காடு’ படத்தின் ஹீரோயின் இவர்தான். உழைக்கும் மக்களின் வாழ்வியல் சார்ந்த படைப்பாக இதை செதுக்கியிருக்கிறார் களஞ்சியம்.

சுபப்ரியாவுக்கு இதுதான் முதல் படம். அவரது தந்தையும் சினிமாக்காரர்தான். ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். சினிமா குடும்பம் என்பதாலேயே சிறு வயதிலிருந்தே நடிப்பு மீது ஆசை. குழந்தையாக இருந்தபோதே பிரபல நடிகைகளைப் போல போஸ் கொடுப்பது, வசனம் பேசுவது என்று படுசுட்டியாக இருந்தாராம்.

வீட்டுக்கு வரும் அப்பாவின் நண்பர்கள், “இவ நிச்சயமா பெரிய நடிகையா வருவா” என்று சொல்லிச் சொல்லியே ஆசைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள். பள்ளியிலும் கூடப் படிப்பவர்கள், “உனக்கு சினிமாதான் லாயக்கு” என்று ஜாலியாகக் கலாய்ப்பார்களாம்.

பள்ளிப் படிப்பு முடிந்ததுமே சினிமாதான் என்று முடிவெடுத்து விட்டார். தன்னை ஹீரோயினாக தயார்படுத்திக் கொள்ள ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம். பரதம், வெஸ்டர்ன் டான்ஸ், சிலம்பம், நடிப்புப் பயிற்சி என்று சினிமாவுக்குத் தேவையான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டே வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார்.

இவரது தோற்றத்தையும், ஆர்வத்தையும் பார்த்ததுமே, “நீதாம்மா என்னோட ‘முந்திரிக்காடு’ ஹீரோயின்” என்று சொல்லி வாய்ப்பு கொடுத்திருக்கிறார் களஞ்சியம். மேலும், அந்தப் படத்துக்கு தமிழ் பேசக்கூடிய நாயகிதான் வேண்டுமென்று களஞ்சியம் பிடிவாதமாக இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.“முதல் பட அனுபவம் எப்படி?” என்று சுபப்ரியாவிடம் கேட்டோம்.

“மறக்க முடியாத அனுபவம் சார். ஹீரோயின்னாலே கேரவனில் ஜாலியா உட்கார்ந்து மேக்கப் போட்டுக்கிட்டு, இங்கிலீஷ் நாவல் படிச்சிக்கிட்டு படக்குழுவினரிடம் பந்தா காட்டிக்கிட்டு இருக்கலாம்னு நெனைச்சேன். கல், முள், காடுன்னு என்னை நடக்க வெச்சி பெண்டு நிமித்திட்டாரு டைரக்டர். எத்தனை இடத்தில் சறுக்கி விழுந்தேன், என்னோட பாதத்துலே எவ்வளவு முள் குத்தியிருக்கு, கை கால் சிராய்ப்பு, காயமெல்லாம் கணக்கு வழக்கே கிடையாது. சின்னச் சின்ன விபத்தெல்லாம் கூட நடந்தது.

களஞ்சியம் சார்கிட்டே நிறைய கத்துக்க முடிஞ்சது. தன்னோட சிஷ்யைன்னு அவருக்கு அன்பு இருந்தாலும், ஷூட்டிங்கில் ரொம்ப கடுமையாக நடந்துப்பாரு. அவர் எதிர்பார்க்கிற நடிப்பு கிடைக்கிற வரைக்கும் விடமாட்டார்.

அந்தப் படத்துலே நடிச்சு முடிச்சப்போ எனக்கு பத்து படம் நடிச்சிட்ட அனுபவமும், தெம்பும் கிடைச்சது. படத்தைப் பார்க்கிறப்போதான் நான் பட்ட கஷ்டமெல்லாம் வீண் போகலைன்னு மகிழ்ச்சியா இருந்தது. இந்தப் படம் நிச்சயம் பேசப்படும். விருதுகளையும் குவிக்கும்.”

“சீமான்?”

“அவரும் படத்துலே முக்கியமான ரோல் பண்ணியிருக்காரு. ‘தங்கச்சி, தங்கச்சி’ன்னு அவ்வளவு பாசமா நடந்துக்கிட்டாரு. ஒவ்வொரு நாளும் அக்கறையோடு விசாரிப்பார். நான் நல்லா நடிச்சா பாராட்டுவார். ரொம்ப சிம்பிள். சட்டுன்னு தரையில் உட்கார்ந்துடுவாரு. தொழிலாளிகளோடு தொழிலாளியா ரொம்பவே அன்னியோன்யமா பழகுவாரு.”

 சுபப்ரியாவுக்கு தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளும் சரளம். ‘அறம்’ படத்தில் நயன்தாரா ஏற்று நடித்ததைப் போன்ற கம்பீரமான, கண்ணியமான பாத்திரங்களில் ஜொலிக்க வேண்டும் என்பது அவர் கனவாம்.

- எஸ்ரா