காலாவின் மகன்!‘வெண்ணிலா கபடி குழு’வில் ‘கபடி’ டீம் கேப்டனாக வரும் நித்தீஷை நினைவிருக்கிறதா?

மதுரைக்காரர். ‘கூத்துப்பட்டறை’ மாணவரான இவர் சுனாமி வந்த நாட்களில் சுனாமி விழிப்புணர்வு நாடகங்களை ‘கூத்துப்பட்டறை’ மூலம் வீதிநாடகமாக அரங்கேற்றியவர். அதே நாடகத்தில் இவருடன் சேர்ந்து நடித்தவர்தான் இப்போது பிரபல நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி. இருவருக்கும் ‘புதுப்பேட்டை’ படத்தில் வாய்ப்பு கொடுத்து நடிகராக கணக்கை துவக்கி வைத்தவர் இயக்குநர் செல்வராகவன்.

தொடர்ந்து ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘சிந்தனை செய்’, ‘ஹரிதாஸ்’, ‘மாவீரன் கிட்டு’, ‘ராணி’, ‘நேற்று இன்று’  என நித்தீஷ் நடித்த அனைத்துப் படங்களிலும் இவருடைய கேரக்டர் பேசப்படும் கேரக்டர்களாகவே அமைந்தன.

இவர் ஹீரோவாக நடித்த ‘பற’, ‘கவாத்து’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. ‘வெண்ணிலா கபடி குழு-2’ படத்திலும் பேசப்படும் கேரக்டரில் நடித்துள்ளாராம். ‘காலா’ படத்தில் 40 நாட்கள் ரஜினியின் மகனாக நடித்துள்ளார்.

‘காலா’ பட அனுபவத்தைப் பற்றிக் கேட்டால், ‘‘அது மிராக்கிள் டேஸ்’’ என்று பரவசமாகச் சொல்கிறார்.‘‘ரஞ்சித்தை ரொம்ப நாட்களாக ஃபாலோ பண்றேன். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி வொர்க் ஷாப் நடத்தினார். 20 நாட்கள் கலந்துகொண்டேன். வொர்க் ஷாப்பே ஷூட்டிங் போல நடக்கும். ‘காலா’வில் நடித்த அத்தனை நடிகர்களுமே வொர்க் ஷாப்பில் கலந்து கொண்ட பின்னரே படத்தில் நடித்தார்கள்.

‘காலா’ ஃபர்ஸ்ட் டே ஷூட்டிங்ல எனக்கு என்ன கேரக்டர்னே தெரியல. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ரஞ்சித், ‘‘நீதான் ரஜினியோட மூத்த மகன்’’னு சொன்னார். அப்படியே ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன்.ஷூட்டிங் வந்த ரஜினி சார் ‘‘ஹாய்... ஹாய்... எப்படி இருக்கீங்க. இப்போ என்னென்ன படம் போயிட்டு இருக்கு”ன்னு தோளில் கைவச்சுக் கேட்டார். ‘காலா’ அனுபவம் இப்போ வரைக்கும் மனச விட்டு அகலமாட்டேங்குது. நடித்த 40 நாட்களில் ரஜினி சாரின் நடிப்பு, எளிமை, ஷார்ப்னஸ் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ரஜினி சாரோ நானா படேகர் நடிப்பதை வியந்து பார்ப்பார்.

கடைசி ஷெட்யூல், கடைசி நாள் படப்பிடிப்பில் காலை ஏழு மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்த அவர், அடுத்த நாள் காலை ஆறு மணி வரை புகையிலும், புழுதியிலும் உட்கார்ந்தே இருந்தார். அதனால்தான் இன்னைக்கும் சூப்பர் ஸ்டாராக நிலைத்து நிற்கிறார்’’ என்று ரஜினியின் புகழ்பாடும் நித்தீஷ், ‘‘எனக்கு  ஸ்கோப் இருக்கும் எந்த படத்திலும் நடிக்கத் தயார்’’ என்கிறார்.

- எஸ்