நண்பருக்காக வசனம் எழுதினேன்!‘சிலந்தி’ ஆதி, ‘வண்ணத்துப்பூச்சி’ ராசி அழகப்பன் போன்றவர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தவமணி பாலகிருஷ்ணன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் படம் ‘பேய் எல்லாம் பாவம்’.

‘‘இயக்குநர் கே.பாலசந்தர் பிறந்த திருக்கண்டீஸ்வரத்தில்தான் நானும் பிறந்தேன். ‘பேய் எல்லாம் பாவம்’ படத்தின் இயக்குநர் தீபக் நாராயணனும் நானும் நண்பர்கள். தீபக் நாராயணன், ‘நான் எப்போது படம் இயக்கினாலும் நீதான் கதை திரைக்கதை வசனம் எழுத வேண்டும்’ என்று கூறினார். இனியும் இந்த உறவு இப்படியே தொடரும்.

ஒரு  வீட்டில் நடக்கும் பேய்களைப் பற்றிய காமெடி திரில்லர்தான் ‘பேய் எல்லாம் பாவம்’. பேய்ப் படங்களிலிருந்து மாறுபட்ட படமாக இருக்கும். தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரித்துள்ளார். புதுமுகம் அரசு நாயகனாகவும், புதுமுகம் டோனா சங்கர் நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் காமெடியில்  அப்புக்குட்டி, ‘கதகளி’ படத்தில் போலீஸ் வேடத்தில் மிரட்டிய ஜித் ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு பிரசாந்த். இசை நவீன் ஷங்கர். எடிட்டிங் அருண்தாமஸ். இந்தப் படம் ஒரு ரைட்டராக எனக்கு பெரிய அடையாளத்தைக் கொடுக்கும்’’ என்கிறார் தவமணி பாலகிருஷ்ணன்.

- எஸ்