தம்பி உடையான் வாய்ப்புக்கு அஞ்சான்!



ஏ.ஆர்.கே.ராஜராஜா மற்றும் லாரன்ஸ் ஆகியோரிடம் சினிமா பாடம் கற்றவர் உலகேசு குமார். கதை சொல்லப்போகும்போது தம்பி விஜயராகவனையும் உடன் அழைத்துச் செல்வார். அண்ணன் கதை சொல்லும் அழகைப் பார்த்த தம்பிக்கு தானே படம் தயாரிக்கும் எண்ணம் வந்தது. அன்னை திரைக்களம் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ‘அச்சம் கொல்லும்’ படத்தை உலகேசு குமாரின் உருவாக்கத்தில் தொடங்கிவிட்டார்.

தமிழகத்தையே உலுக்கிய ஒரு வழக்கை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட கதைக்கு சிறைதான் கதைக்களம். திருடனைப் பிடிக்க திருடனிடமே வாய்ப்பு கொடுத்தால்  என்ன ஆகும் என்பது கதைக்கரு. படத்தில் திலீபன் என்கிற அகதி பாத்திரத்தில் நடிக்கிறார் உலகேசு குமார்.இந்த ஏற்பாடுகள் நடக்கும் நேரத்திலேயே நண்பர்களின் இயக்கத்தில் ‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன’, ‘சிவப்பு சேவல்’ படங்களில் நடிகராக அறிமுகமாகிவிட்டார் உலகேசு.

இதற்கிடையில் மொழிமாற்றுப் படங்களில் அனுபவம் மிக்க ராஜராஜாவின் ஆலோசனைப்படி ‘குந்தி’ மொழிமாற்றம் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் அம்மன் நேரடிப் படங்களைத் தயாரிக்கிறது அன்னை திரைக்களம்.‘குந்தி’ படத்தில் பூர்ணா, கிஷோர் நடித்துள்ளனர். தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஒரு பேய் தனது குழந்தைகளைக் கொல்லத் துடித்துக்கொண்டிருக்க, அந்தப் பேயிடமிருந்து எப்படி குழந்தைகளைக் காப்பாற்றினார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

“முப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும். இதுவரை பேய்ப் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தில் பூர்ணா தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படம் அவரது திரையுலக வாழ்க்கை யில் ஒரு மைல்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. விரைவில் அனைவரையும் பயத்தில் உறைய வைக்க வருகிறாள் எங்கள் குந்தி” என்கிறார் மொழிமாற்றம் செய்து தந்திருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா.

இந்தப் படத்துக்கான டீஸரை வெளியிட்ட டி.ராஜேந்தர், ஏ.ஆர்.கே ராஜராஜா மற்றும் உலகேசு குமாரைப் பாராட்டியுள்ளார். ‘குந்தி தடை வென்று வருவாள் முந்தி’ என்பது அவர் வாக்கு. அண்ணனுக்காக படத்தயாரிப்பில் இறங்கிய விஜயராகவனுக்குத் துணையாக இணைத்தயாரிப்பாளராக களம்  இறங்கியிருக்கிறார் சா.ப. கார்த்திராம்.தமிழ் உணர்வுக்கு பங்கம் வராத வகையில் படம் இயக்குவேன் என உறுதி கூறும் உலகேசு குமார் ‘அச்சம் கொல்லும்’ படையுடன்  காலத்துக்குத் தயாராகிவிட்டார்.

- நெல்பா