முரட்டு குத்து குத்தியது எப்படி?



இயக்குநர் தடாலடி!

“சோஷியல் நெட்வொர்க், டிவி விவாதங்கள்னு நிறைய பேரு கண்டிச்சிப் பேசினாங்க. ஊடகங்கள்கூட ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு விமர்சனம் எழுதுவதைத் தவிர்த்திச்சி. எனக்குத் தெரிஞ்சு நம்ம ‘வண்ணத்திரை’ மட்டும்தான் படத்தைப் பத்தி பாசிட்டிவ்வா எழுதுச்சி. சினிமா ஸ்ட்ரைக்கால் நொந்துபோயிருந்த திரையரங்குகளுக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி வந்தது இந்தப் படம்.

இப்படியொரு ஹிட் கிடைச்சிருக்கிறதே தெரியாதமாதிரி சினிமா பிரபலங்கள் பலரும் மவுனமாக இருக்கிறதையே எனக்கான அவார்டா நினைச்சுக்கிறேன்” என்று ஒருமாதிரி சூடாகத்தான் பேச ஆரம்பித்தார் இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். சூட்டோடு சூடாக அடுத்த படமான ‘கஜினிகாந்த்’ ரிலீஸ் வேலைகளில் பிஸியாகி விட்டார்.

“உங்களோட முந்தைய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் செம குத்து குத்துச்சி. ‘கஜினிகாந்த்’ அதேமாதிரி கும்மாங்குத்து குத்துமா?”
“என்னோட படத்துலே டபுள் மீனிங் இருக்குன்னு விமர்சிக்கிற நீங்கெல்லாமே டபுள் மீனிங்கில் கேள்வி கேட்டா எப்படி சார்? ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இரண்டுமே அடல்ட் காமெடி படங்கள்.

மூணாவதாக எடுத்திருக்கிற ‘கஜினிகாந்த்’, ஃபேமிலியோடு பார்க்கிற மாதிரியான சப்ஜெக்ட். என்னை எந்த ஜானருக்குள்ளும் அடைச்சிடாதீங்க. நான் எல்லா ஜானரும் செய்யணும்னுதான் ஆசைப்படுறேன். அதாவது, தெளிவா சொல்லிடறேன். எப்பவுமே எங்கிட்டே ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் படங்களை மட்டுமே எதிர்பார்க்காதீங்க...”“தலைப்பே சும்மா அதிருது. ‘கஜினிகாந்த்’ கதை என்ன?”

“ஆர்யாவுக்கு மைண்ட் டைவர்ஷன் பிராப்ளம் இருக்கு. அதாவது ஒரு வேலையை செஞ்சிக்கிட்டிருக்கப்போ, குறுக்கே இன்னொரு வேலை வந்தா முதலில் செஞ்சுக்கிட்டிருந்த வேலையை மறந்துடுவாரு. குழந்தைப் பருவத்திலிருந்தே இருக்கும் இந்தப் பிரச்சினையால் இளைஞரான பிறகு அவர் எதிர்கொள்கிற பிரச்சினைகள்தான் கதை. குறிப்பா காதலிக்கிறப்போ இந்த மறதித் தொல்லையால் விளையும் காமெடிகளும், சோகமும்தான் படத்தோட கதை.”“ஆர்யாவுக்குன்னு லட்டு மாதிரி சப்ஜெக்ட்....”

“ஆமாம். இந்தக் கதைக்கு என்னோட முதல் சாய்ஸ் அவர்தான். கடின உழைப்பாளி. கேரக்டருக்குத் தேவையான நடிப்பைக் கூட்டவும் செய்யாமல் குறைக்கவும் செய்யாமல் மிகச் சரியாகக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யாவின் ஒத்துழைப்பு அதிகம். நான் ஷாட் ஓக்கேன்னு ஒத்துக்கிட்டாலும், இன்னொரு முறை பெட்டராக பண்றேன் என்று கூடுதல் முயற்சி எடுத்து நடித்துக் கொடுத்தார். நான் ஐம்பது கேட்டால் ஐம்பத்தைந்து கொடுத்தார். ஆர்யா மாதிரி ஹீரோக்கள் என்னை மாதிரி வளரும் இயக்குநர்களுக்கு வரப்பிரசாதம்.”

“சாயிஷா?”

“கண்டிப்பா அவங்க அடுத்த லெவலுக்கு போற நேரம் வந்துடுச்சி. அவர் முன்னேறிச் செல்கிறார் என்பதற்கு உதாரணமா சமீபத்துல சூர்யா சார் படம் கமிட்டானதைச் சொல்லலாம். சூர்யா மட்டுமில்ல, விஜய், அஜித் படங்களில் நடிக்கக்கூடியளவுக்கு அவரிடம் திறமை இருக்கு. உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு அதிகமுள்ளவர். நேர நிர்வாக விஷயத்தில் சரியாக இருப்பார். அவங்க டயலாக் பேசும்போது தமிழ் தெரியாத பொண்ணு பேசுது என்ற எண்ணமே வராது. அப்படி உச்சரிப்பு சுத்தமா இருக்கும். உதட்டு அசைவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க.”

“உங்க படம்னாலே நட்சத்திரப் பட்டாளம் அதிகம்...”“ஆமாம். இதுலேயும் ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன், சம்பத், சதீஷ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. நிறைய பேர் இருந்தாலும் அவரவருக்கான முக்கியத்துவம் இருக்கும்.”“டெக்னீஷியன்ஸ்?”

“நான் பழசை மறக்கமாட்டேன். என்னோட முதல் இரண்டு படங்களில் எனக்கு வெற்றியைக் கொடுத்த அதே கூட்டணிதான் இந்தப் படத்துக்கும் உழைச்சிருக்காங்க. பல்லு ஒளிப்பதிவு பன்ணியிருக்கிறார். இசை பாலமுரளி பாலு. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படமும் ‘கஜினிகாந்த்’ படமும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பு நடந்தது. வேலை பயங்கர டென்ஷனா இருந்தாலும் அதை சுமையா கருதாம ஜாலியாத்தான் செஞ்சோம். ‘கஜினிகாந்த்’ சென்சார் அப்ளை பண்ணியிருக்கிறோம். இந்தப் பேட்டி வெளிவர்றப்போ சர்ட்டிஃபிகேட் வாங்கிடுவோம். நிச்சயமா ‘ஏ’வா இருக்காதுன்னு மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும்.”

“நெக்ஸ்ட்?”

“ஆர்யா, கவுதம் கார்த்திக்குன்னு ரெண்டு பேருக்கும் தலா ஒரு படம் பண்றதுக்கு பிளான் போயிக்கிட்டிருக்கு. தெலுங்குலேயும் கூப்பிடறாங்க. அப்புறம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தோட இரண்டாம் பாகம் வரும்னு வேற தயாரிப்பாளர் ரசிகர்களுக்கு உறுதி கொடுத்திருக்காரு. பிஸியா ஓடிக்கிட்டிருக்கேன்.”

“உங்களைப்பத்தி சொல்லவே இல்லையே?”

“பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது என்ஜினியரிங். ஸ்கூல் படிக்கும்போதே சினிமா என்னுடைய கனவாக இருந்தது. அப்போது சினிமாவுல என்ன பண்ணப் போறோம் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் சினிமாவில் சேர்ந்து ஏதாவது ஒரு துறையில் சாதிக்கணும் என்ற திட்டம் இருந்தது. ப்ளஸ் டூ படிக்கும்போதுதான்  டைரக்‌ஷன் ஆசை வந்தது.

அப்பா சினிமா தயாரிப்பு நிர்வாகி. நான் இண்டஸ்ட்ரிக்கு வந்தபோது அப்பா டிவி பக்கம் போயிட்டதால் என் சொந்த முயற்சியில்தான் இயக்குநரானேன். ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனிடம் உதவியாளரா சேர்ந்தேன். ‘இவன் வேற மாதிரி’ படத்தில் வேலை செய்தேன். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு நான் பண்ணிய முதல் படம்தான் ‘ஹர ஹர மஹாதேவகி’. இதுதான் நம்மளோட சுருக்கமான வரலாறு.”

“உங்க வீட்டுலே என்ன சொல்றாங்க?”

“போட்டு வாங்கறீங்களே பாஸூ? ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை குடும்பமாக மொத்தப் பேரும் பார்த்தோம். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை அப்பா, அம்மா தனியா பார்த்தாங்க. அண்ணன், அண்ணி தனியா பார்த்தாங்க. நானும் என் மனைவியும் தனியா பார்த்தோம். தனித்தனியா படம் பார்த்தாலும் எல்லாருக்கும் படம் பிடித்திருந்தது.

நிறை, குறைகளை என் ஃபேமிலியிலே வெளிப்படையாகச் சொன்னார்கள். ஏன்னா, வீட்ல உள்ளவங்கதான் வெளிப்படையா விமர்சனம் பண்ணுவாங்க. வெளியில் இருப்பவர்கள் ‘நாம் தவறா எடுத்துக்க வாய்ப்பு இருக்கு’ன்னு நெனைச்சி உண்மையைச் சொல்லமாட்டாங்க.”

“வயசுப் பசங்களை சீரழிக்கிறீங்கன்னு சீனியர்கள் சொல்றாங்களே?”

“என்னோட படம் எதிலும் பாலியல் வன்புணர்வு காட்சியில்லை. நான் யாரையாவது திருட சொல்லிக் கொடுக்கறேனா... இல்லைன்னா கொலை பண்ணா தப்பில்லைன்னு படம் எடுக்கிறேனா. அடல்ட் மூவின்னு வெளிப்படையா சொல்லி, 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான காமெடிப்படம்தான் எடுத்திருக்கேன். பார்த்த ரசிகர்கள் தங்களோட ஸ்ட்ரெஸ் குறைஞ்சதா சந்தோஷமா சொல்றாங்க. சமூகநோக்கோடு படம் எடுக்கிறதாவும், நான் தான் சமுதாயத்தை சீரழிக்கிறதா சொல்றவங்க தங்களையே கண்ணாடியில் பார்த்துக்கட்டும். சமூகத்தைத் திருத்தறது என்னோட வேலை கிடையாது. சமூகத்துக்கே தனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தரம் பிரிச்சி பார்க்கத் தெரியும்.”

“படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி டிஷ்யூ பேப்பர் எடுத்துட்டு வாங்கன்னு நீங்க சொல்றதெல்லாம் ஓவர் இல்லையா?”

“வாய் துடைக்க டிஷ்யூ பேப்பர் எடுத்து வாங்கன்னு சொன்னா தப்பா? உங்க ரூட்டுக்கே வர்றேன். இது என்ன படம்னு தெளிவாக விளம்பரப் படுத்தியாச்சி. அதைப் பார்க்க விரும்புறவங்க பார்த்திருக்காங்க. படமே பார்க்காம அல்லது பார்த்து ரசிச்சிட்டு வெளியே வந்து சமூகத்தையே இவங்கதான் தாங்குறமாதிரி பேசுறவங்களோட விவாதிக்க எனக்கு ஒண்ணுமில்லை. குறை சொல்லணும், வசைபாடணும்னு நினைக்கிறவங்க அதைத்தான் செய்வாங்க. அவங்க கிட்டே ஆரோக்கியமான விவாதம் சாத்தியமில்லை.”

“இதேமாதிரி சின்னக்கல்லு, பெத்த லாபம்னு லோ பட்ஜெட் படங்கள்தான் செய்வீங்களா?”

“அப்படியெல்லாம் இல்லை. விஜய், அஜித்தையெல்லாம் வெச்சி பிரும்மாண்ட படங்கள் இயக்கணும்னு எனக்கும் ஆசைதான். அவங்களுக்கு என் மேலே நம்பிக்கை வந்து என்னைக் கூப்பிட்டு படம் இயக்கச் சொல்லுமளவுக்கு அடுத்தடுத்து வரப்போகிற என்னோட படங்கள் இருக்கும்.”

“சினிமா தவிர உங்களுக்கு என்ன பிடிக்கும்?”

“பேசிக்கா நான் ஒரு அத்லெட். நல்லா ஃபுட்பால் ஆடுவேன். ரன்னிங்கில் 800, 1000 மீட்டர்களில் கலக்கியிருக்கேன். கீபோர்ட், கிடார் வாசிப்பேன். சூப்பரா டான்ஸ் ஆடுவேன். ஸ்கூல் படிக்கிறப்போ படிப்பைத் தவிர மத்த எல்லாத்திலேயும் நல்லா ஆர்வம் செலுத்தியிருக்கேன்.”

- சுரேஷ்ராஜா