எப்படி கட்டிப்புடிச்சி நடிப்பாங்க?



பிலிமாயணம் 41

“சினிமா நடிகன் வெளி உலகத்துக்கு முகத்ைத காட்டக்கூடாது. நடிகன் முகத்தை மக்கள் நேரில் பார்த்தால் சினிமா மீதிருக்கும் மோகம் குறைந்துவிடும்” என்பார் எம்.ஆர்.ராதா.ஆனால் -இன்றைக்கு நிலைமை தலைகீழ். இன்றைய இளைஞர்கள் சினிமா தொழில்நுட்பத்தை மிகத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

எது புளூமேட்டில் எடுக்கப்பட்டுள்ளது, இந்த சண்டைக் காட்சிக்கு அகிலா கிரேன் பயன்படுத்தியிருக்கிறார்கள், இதற்கு டிராலி பயன்படுத்தியிருக்கிறார்கள், இது ரெட் ஒன் கேமரா, இது 5டி கேமரா ஷாட் என அக்குவேறு ஆணிவேறாக தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். இனி ரசிகனை தொழில்நுட்பம் கொண்டு ஏமாற்றமுடியாது. அதை நேர்த்தியாகச் செய்துதான் பாராட்டுப் பெறவேண்டும்.

அந்தக் காலத்தில் சினிமா தொழில்நுட்பம் மக்களுக்கு எட்டாக்கனி. எம்.ஜி.ஆர் கோட்டை மதில் சுவரில் இருந்து குதித்தால் நிஜமாகவே குதித்தார் என்றே நம்பினார்கள். ‘மாயா பஜார்’ படத்தில் ரங்காராவ் கல்யாண சமையல் சாதத்தை அள்ளி அள்ளித் தின்றால் நிஜமாகவே தின்றதாக நம்பினார்கள். அப்படியான ஒரு காலத்தில் எல்லா கிராமத்து ரசிகர்களுக்குமே மனசுக்குள் விடை காண முடியாத ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. நான்கு பேர் சேர்ந்து சினிமாவைப் பற்றிப் பேசினால்.

இந்தக் கேள்வி எழும், அவரவர் அதற்கான பதிலை இஷ்டத்துக்கு சொல்வார்கள்.“எப்படி ஆணும் பெண்ணும் இப்படி கட்டிப்பிடித்து, கட்டிலில் ஒன்றாகப் படுத்து, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து, கன்னம் உரசி, முத்தம் கொடுத்து நடிக்கிறார்கள். அவர்களுக்கு நிஜமாகவே உணர்ச்சி வராதா? வெட்கம் இருக்காதா? அது மாதிரியான நேரத்தில் உடல் ரீதியாக ஏற்படும் ரசவாதம் அவர்களுக்கு ஏற்படாதா?” என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்விக்கு ஒவ்ெவாருவரும் ஒரு பதிலை வைத்திருப்பார்கள். அந்தப் பதில்களில் சில வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு ஆபாசமாகக்கூட இருக்கும்.

கட்டிப் பிடிக்கும் இருவருக்கும் இடையி–்ல் கண்ணாடி போன்ற தடுப்பு வைத்திருப்பார்கள்; அடுத்தவர் உடல் படாதபடி தங்களின் உடைக்குள் கனத்த துணி அணிந்திருப்பார்கள்; கேமராவை ஆன் செய்து விட்டு எல்லோரும் போய்விடுவார்கள்; உணர்ச்சி ஏற்படாமல் இருக்க ஊசி போட்டுக் கொள்வார்கள்.... இப்படி பல பதில்கள் உலவும். அது நடிப்பு என்பதையும், அந்தக் காட்சி எடுக்கும்போது மிக அருகில் பலபேர் நிற்பார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

எங்கள் பகுதியில் அப்போது கே.பாலசந்தர் இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்தப் படத்தில் ராஜேஷ், சரிதாதான் ஹீரோ, ஹீரோயின் என்றாலும், கோபி-அகல்யா என்ற இளம் ஜோடிகளும் நடித்திருந்தார்கள்.
‘புதிர் போட்டு பேசுனது போதுமடி தங்கம் நம் காதல் புதராகக் கூடாதடி...’ என்ற பாடலை இருவரும் பாடுவார்கள். காதலி புதிர்போட அதற்கு காதலன் விடை அளிப்பது மாதிரியான பாடல் அது.

ஊருக்கு அருகில் உள்ள திருமலைக்கோவிலில் படப்பிடிப்பு நடந்தது. அது பாடல் காட்சி என்பதால் நிச்சயம் இருவரும் கட்டிப்பிடித்து பாடுவார்கள். அது எப்படி நடக்கிறது என்பதைக் காணும் ஆவல் எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்தது. நீண்ட நாள் மனதில் ஓடிக் கொண்டிருந்த கேள்விக்கும் பதில் கிடைக்கும் என்பதால் கிளம்பிப் போனோம்.

கோவில் கோபுரம் பின்னணியாக இருக்க... அதன் முன்னால் கோபியும், அகல்யாவும் நின்று கொண்டிருந்தார்கள். கே.பாலசந்தர் ஒரு நாற்காலி போட்டு மரத்தின் நிழல் ஒன்றில் அமர்ந்திருந்தார். டான்ஸ் மாஸ்டர் மூவ்ெமன்ட் சொல்லிக் கொடுத்தார். பாடல் ஒலிக்க... காதலியின் புதிருக்கான பதிலைச் சொல்லியபடியே அவரது இரட்டை சடைையயும் முன்னுக்கு இழுத்து அவரது கழுத்தை இறுக்கி செல்லமாகக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது அந்த மூவ்மென்ட்.

பாடல் ஒலிக்க, கோபி வாயசைத்துக் கொண்டே அகல்யாவின் இரட்டை சடையை இழுத்துக் கட்டுவார். அது அவிழ்ந்து விழும், அல்லது முடிச்சு சரியாக விழாது, அல்லது அவர் முடிச்சு போடுவதற்குள் பாடல் வரி முடிந்துவிடும். அல்லது வரி முடியும் முன்பே முடிச்சு போட்டு விடுவார். இப்படியே ஒரு பத்து டேக் வரை போனது.

அதுவரை பொறுமையாக இருந்த கே.பாலசந்தர் விறு விறுவென எழுந்து சென்று கோபியைப் பார்த்து, ‘முண்டம் முண்டம், ஒரு சடையைப் பிடிச்சு முடிச்சு போட முடியலையா?’ என்றபடி பாடலை ஒலிக்க விட்டு அவர் அகல்யாக கழுத்தில் சடை முடிச்சு போட்டுக் காட்டினார். கோபி கண்கலங்க அதிர்ந்துபோய் நின்றார். அதன் பிறகான ஷாட் சரியாக முடிந்து அகல்யாவைக் கட்டிப்பிடித்தார்.

டேக் ஓகே என்று இயக்குனர் ெசான்னதும், பெரு மூச்சு விட்டபடி கோபியும், அகல்யாவும் தளர்ந்துேபாய் அமர்ந்தார்கள். “என்னடா இது ஒரு கட்டிபிடிக்கே இந்தப் பாடு படுறாங்க. நல்லாத்தான் எடுக்குறாங்கடே சினிமா. நம்மள விட்டாங்கன்னு வையேன் அந்தப் புள்ளையே அப்படியே இழுத்துப் பிடிச்சு...” என்றபடியே கிளம்பினோம்.

(பிலிம் ஓட்டுவோம்)