என் பெயர் சூர்யா



தேசபக்தி மசாலா!

`பசிச்சா நல்லா சாப்பிடுவேன்; தூக்கம் வந்தால் நல்லா தூங்குவேன்; கோபம் வந்தால் நல்லா அடிப்பேன்’ என்று போலீஸ் அதிகாரியிடமே  கெத்தாக சொல்லும் முரட்டுக் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.பள்ளியில் படிக்கும்போது ஒருவரை அடித்ததற்காக பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார். அப்பா அர்ஜுன் கண்டிப்பதால், வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்அல்லு. டெல்லிக்கு சென்று ராணுவத்தில் சேர்கிறார். கோபம் காரணமாக ஒழுங்கீனமாக நடக்கும் அவரை ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்ய முடிவு செய்கின்றனர்.

கடைசி வாய்ப்பாக பிரபல மனோநல மருத்துவரான அர்ஜுனிடம் இருந்து  நலமுடன் இருப்பதாக  சான்றிதழ் வாங்கி வரச் சொல்கின்றனர். 21 நாட்கள் எந்தப் பிரச்னையிலும் சிக்காமல், அடிதடிக்கு செல்லாமல் பொறுமையாக இருந்தால்  சான்றிதழ் தருவதாகக் கூறுகிறார் அர்ஜுன். சான்றிதழ் கிடைத்ததா, அவர் விரும்பிய பார்டர் பகுதிக்குச் சென்று ராணுவ சேவை செய்தாரா என்பதை விறுவிறு திரைக்கதையில் கொண்டு செல்கிறது படம்.
அல்லு அர்ஜுன் பண்பட்ட நடிப்பால் பாராட்டுகளை அள்ளுகிறார்.

நாயகி அனு இம்மானுவேல் கலகலப்பாக கவர்ச்சி வலம்  வருகிறார். அர்ஜுன் அமைதியான,  வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மகனுடன் மோதும் காட்சிகளில்  அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.வில்லன் கல்லா கதாபாத்திரத்தில், கம்பீரமான தோற்றத்தில் வரும் சரத்குமார் அமைதியான நடவடிக்கைகளால் மிரட்டுகிறார்.

கொல்ல வரும் தாதா கும்பலை, டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டபடியே சம்ஹாரம் செய்து, சபாஷ் வாங்குகிறார். அல்லுவின் அம்மா கதாபாத்திரத்தில் வரும் நதியா, பாசத்தை வெளிப்படுத்தும் காட்சியில் மிளிர்கிறார். சில காட்சிகளிலேயே வந்தாலும் சாய்குமார் வெளுத்துக் கட்டுகிறார். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் அன்வர் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.

விஷால் சேகரின் பின்னணி இசை,  ராஜிவ் ரவியின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பலம் சேர்க்கின்றன. பா.விஜய்யின் வரிகளில் தமிழ் விளையாடினாலும், தெலுங்குப்படம் என்பதை பாடல் காட்சிகள் வெளிச்சம் போடுகின்றன. தேச பக்தி, காதல், குடும்ப பாசம் என கலந்துகட்டி பரபரப்பாக இயக்கியிருக்கிறார் வம்சி.