இருட்டு அறையில் முரட்டு குத்து



கன்னிப்பையன்களை வேட்டையாடும் காமப்பேய்!

‘வண்ணத்திரை’யின் வெறித்தனமான வாசகர் என்றால் இது உங்களுக்கான படம். நம் இதழின் ‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதியை இரண்டு மணி நேரப் படமாக எடுத்தது போலிருக்கிறது.‘கலாச்சாரத்துக்கு எதிரான படம்’, ‘வயசுப் பசங்களை கெடுக்கிறது’, ‘சமூகத்துக்கு சீர்கேடு’ என்றெல்லாம் விதவிதமான எதிர்விமர்சனங்களை இந்நேரம் கேட்டிருப்பீர்கள். எதையும் நம்பாதீர்கள். ஏதோ சமூகத்தையே தங்கள் தலையின் மீது சுமப்பவர்கள் மாதிரி இதுமாதிரி யோக்கியம் பேசுபவர்கள் பெரும்பாலும் நடிக்கிறார்கள்.

ஆன்மீகத்தையும், அறத்தையும் சமூகத்துக்குப் போதித்துக் கொண்டிருந்த சாமியார் ஆசுராம் பாபா, ஒரு சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். ‘பி’ கிரேடு படங்களாக ஷகீலாவை இயக்கிய இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ ஒருவர்கூட தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததில்லை என்று ஷகீலாவே சொல்கிறார். வெறும் வாயில் ஒழுக்கத்தை மென்று கொண்டிருப்பவர்களுக்கும், செக்ஸை வெளிப்படையாகப் பேசினாலும் செயல்பாடுகளில் நேர்மையாக இருப்பவர்களுக்குமான அடிப்படை வித்தியாசம் இதுதான். ஓக்கே. படத்துக்கு வருவோம்.

Strictly for adult audience.

வசனங்கள் எதுவும் இரட்டை அர்த்தம்  தொனிக்கும் வகையில் எழுதப்படவில்லை. எல்லாமே நேரடிதான். திருவல்லிக்கேணி  மேன்ஷன் மாடிகளின் குட்டைச் சுவரில் அமர்ந்து பேச்சுலர்கள் பேசுவது மாதிரி  பச்சையாகவேதான் எழுதப்பட்டிருக்கின்றன. உங்களுக்கும் அம்மாதிரி வேடிக்கைப்  பேச்சுகளில் ஆர்வம் இருந்தால், படத்தைப் பார்க்கலாம். இல்லையேல்,  ஆடிமாசத்துக்கு ஏதாவது அம்மன் படம் வெளியாகும் வரை காத்திருக்கலாம்.

ஏகப்பட்ட பெண்களிடம் ரிலேஷன்ஷிப் வைத்திருக்கும் கவுதம் கார்த்திக்குக்கு, ஒரு தொடர்புகூட கல்யாணம் வரை போகவில்லை. ஏகப்பட்ட பெண்களைப் பார்த்து, எல்லோருமே கவுதமின் முந்தைய டிராக் ரெக்கார்டு காரணமாக நிராகரிக்கிறார்கள். வைபவி சாண்டில்யாவின் அப்பா மட்டும் வித்தியாசமான கண்டிஷன் போடுகிறார். தன் மகளை ‘திருப்திப்படுத்தக்கூடிய’ ஆண்மகனாக இருந்தால் ஓக்கே என்கிறார். வைபவியும் கவுதமிடம் ‘பழகிப் பார்த்துவிட்டு’ கல்யாணம் செய்துகொள்ளலாம் என்கிறார்.

‘பழகிப் பார்ப்பதற்காக’ மஜாதேசமான தாய்லாந்தின் குஜால்நகரமான பட்டாயாவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். துணைக்கு நாயகனின் நண்பன் ஷாராவும், அவருடைய கேர்ள் ஃபிரண்ட் யாஷிகா ஆனந்தும் செல்கிறார்கள். இவர்கள் தங்கும் பங்களா ஒருமாதிரி ‘சந்திரமுகி’ பங்களா. இங்கே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த செம கட்டையான சந்திரிகா ரவி, கன்னி கழியாமலேயே இறந்திருக்கிறார்.

ஒரு கன்னிப் பையனோடு உடல்ரீதியாக இணைந்து ‘சாந்தி’யடைய பேயாகக் காத்திருக்கிறார். ‘பழகிப் பார்க்க’ வந்த கவுதமும், ஷாராவும் கன்னிப் பையன்கள்தான்.ஆனால் -சந்திரிகா ரவியோடு உல்லாசமாக இருக்கும் கன்னிப் பையனும் செத்துவிடுவான் என்பது கண்டிஷன். மேலும், அந்த கன்னிப் பையன் தாமாக முன்வந்து சந்திரிகாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது அடிப்படை விதி.

இந்தப் பேயின் காமவெறியில் இருந்து கவுதமும், ஷாராவும் தப்பிக்க நினைக்கிறார்கள். சோதனை மேல் சோதனையாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பாலசரவணன் ஆகிய மேலும் இரண்டு கன்னிப் பையன்களும் சூழ்நிலை காரணமாக இங்கே வந்து சிக்கிக் கொள்கிறார்கள். ராஜேந்திரன் மீது மோகம் கொண்ட ஓரினச் சேர்க்கை விரும்பியான கருணாகரனும் வந்து சேர்ந்துகொள்கிறார்.

பேயிடமிருந்து தப்பிக்க கன்னிப் பையன்கள் அனைவரும் கன்னி கழிவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. ஆனால், தத்தமது காதலிகளோடு சேரவிடாமல் அவர்களை பேய் தடுக்கிறது. இந்தச் சிக்கல் எப்படி தீர்ந்தது என்பதே கிளுகிளு திரைக்கதை.பலவிதமான மனஉளைச்சல்களில் சிக்கிச் சுழன்றுகொண்டிருப்பவர்கள், மனம்விட்டுச் சிரிக்க தியேட்டருக்குப் போகலாம். ‘டிஷ்யூ பேப்பர் கொண்டு வாருங்கள்’  என்று இயக்குநர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

மூன்று ஹீரோயின்களும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி மாரத்தான் ஓட, படத்தைத் திரையிட்ட தியேட்டர்களில் ஒவ்வொரு ஷோ முடிந்ததும் அரங்கங்களைக் கழுவித்தள்ளி சாம்பிராணி போட்டு சுத்தப்படுத்துகிறார்களாம். இருட்டு அறையில் முரட்டு வசூல் நடந்துகொண்டிருக்கிறது. ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடும் தயாரிப்பாளரின் தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.

இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, ஒளிப்பதிவாளர் பாலு, எடிட்டர் பிரசன்னா என்று டெக்னிக்கல் டீமைச் சேர்ந்த ஒவ்வொருவருமே போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களைச் சூடேற்றியிருக்கிறார்கள்.

காமத்தைப்பற்றி கல்மிஷம் இல்லாமல் பேசுவது என்பது மன வக்கிரங்களுக்கு வடிகால். அதற்கான களமே அமையாமல் போய்விடுபவனின் மனம்தான் குப்பைகள் சேர்ந்து, வக்கிரமான செயல்பாடுகளுக்குக் காரணமாகிறது. வாய் விட்டுப் பேசக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன், காமத்தை ஜஸ்ட்-லைக்-தட் கடந்துவிடுவான். அதற்கான களமாகத்தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ அமைந்திருக்கிறது.