நடிகனாக இருப்பது கிஃப்ட்! விஜய் ஆண்டனி சொல்கிறார்சவுண்ட் என்ஜினியராக சினிமாவுக்கு வந்தார். படிப்படியாக தொழில் கற்று இசையமைப்பாளர் ஆனார். தயாரிப்பு, நடிப்பு என்று ஒரே சமயத்தில் களமிறங்கினார். இப்போது நடிகராக விஜய் ஆண்டனி செம பிஸி. ‘காளி’, ‘திமிரு பிடிச்சவன்’ என்று வரிசையாக இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் மாஸ் சப்ஜெக்ட்தான்.

“ரஜினி நடிச்ச டைட்டில். ‘காளி’ எப்படி வந்திருக்காரு?”

“ரொம்ப சூப்பரா ரெடியாயிட்டார். இந்த காளி வித்தியாசமானவன். அந்த வித்தியாசம் இருந்ததால்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். அதுக்காக பெரிய வித்தியாசம் இருக்கும் என்று கற்பனை பண்ணிக்க வேண்டாம். ஜேம்ஸ் கேமரூனிலிருந்து ஸ்பீல்பெர்க், கே.பாலசந்தர், பாரதிராஜா வரை எல்லாரும் வித்தியாசமான கதைகளை சொல்லிவிட்டார்கள்.

அவங்களையெல்லாம் தாண்டி நாங்க புதுசா சொல்லியிருக்கிறோம் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் கதையில் சின்னச் சின்னதாக வித்தியாசங்கள் இருக்கும். அது பெரியளவில் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போடவில்லை என்றாலும் வேல்யூவான படமாக இருக்கும். அந்த விஷயங்கள் எனக்கு சாதகமாகத் தோன்றியது. சிலருக்கு அது பிடிக்காமலும் போகலாம். ஏன்னா, நான் நானாக இருந்து இந்தப் படத்தை பண்ணினேன்.”

“உங்க கேரக்டர் எல்லாம் ரொம்ப அழுத்தமா இருக்கே?”

“ஜாலியா பண்ணுற மாதிரி கேரக்டர்ஸ் வந்தாலும் பண்ணுவேன் பாஸ். அந்த ஸ்பேஸ் என்னவோ எனக்கு ரொம்ப அரிதாகத்தான் அமையும் போலிருக்கு. ‘பிச்சைக்காரன்’ படத்தில் அம்மா மரணப் படுக்கையில் இருப்பார். அந்தச் சூழலில் ஹீரோ ஜாலியாக இருக்கமுடியாது. ‘சைத்தான்’ படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவனாக பண்ணியிருப்பேன். ‘எமன்’ வேறு ஒரு களம். ஒவ்வொரு கதையிலும் என்னோட கேரக்டர் அப்படி.

என்னாலும் கலகலப்பான வேடங்களில் நடிக்கமுடியும். கதையை மீறி பண்ணக்கூடாது என்றுதான் அடக்கி வாசிக்கிறேன். எனக்கு கதை முக்கியம். என் கேரக்டர் முக்கியம். கதையைத் தாண்டி எதுவும் திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.”
“உங்க கதைத்தேர்வெல்லாம் பிரமாதம்...”

“நன்றி. ஒரு கதை பண்ணும் போது அந்த படைப்பாளி அந்த கதையை அவரே ரசிக்கணும். இயக்குநர் கிருத்திகா உதயநிதி ‘காளி’ கதை சொல்லும்போது அவர் கதை மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவருடைய உறுதித் தன்மையும் தெரிந்தது. சவுண்ட் என்ஜினியர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், எடிட்டர், நடிகர் என்று நான் பல தளங்களில் இயங்கினாலும் ஒரு ஆடியன்ஸ் பார்வையில்தான் கதை கேட்கிறேன்.

டெக்னீஷியனாக கதை கேட்பதற்கும் ஆடியன்ஸாக கதை கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. டெக்னீஷியனாக கதை கேட்கும்போது சில நிமிடங்களிலேயே கதையின் நிறை குறைகளை பட்டியல் போட்டுவிடலாம். அதற்குமேல் கதை கேட்கும் ஆர்வம் குறைந்துவிடும். ஆனால் ஆடியன்ஸ் பார்வையில் கதை கேட்கும்போது என்னால் மூன்று மணி நேரம் தொடர்ந்து கதை கேட்கமுடிகிறது. ‘காளி’யில் புதுமை இருக்கிறது. அதுதான் படத்தோட பலம். கதைக்குள் மூணு கதை இருக்கு. மூணு கதை இருந்தாலும் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும்.”

“பெண் இயக்குநருக்கும் ஆண் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?”

“இயக்குநர் என்று வந்துவிட்டபிறகு ஆண் இயக்குநர், பெண் இயக்குநர் என்ற பேதம் இல்லை. உங்க கேள்வியே தப்புங்கிறது என்னோட தாழ்மையான அபிப்ராயம். இந்தப் படம் பண்ணும் போது பெண் இயக்குநர் படம் தேவையா என்று சிலர் கேட்டார்கள். கதைக்கும் எனக்கும்தான் சம்பந்தம். இயக்குநர் ஆணா, பெண்ணா என்பது ஆடியன்ஸுக்கும்கூட தேவையில்லாத தகவல்.

‘காளி’ படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா உள்பட நான்கு பெண்கள் இருக்கிறார்கள். காஸ்டியூம்ஸ் பார்க்கிறவர் ஒரு பெண்தான். பெண் உதவி இயக்குநர், பெண் நடன இயக்குநர் என்று ஏராளமான பெண்களின் பங்களிப்பு இந்தப் படத்தில் இருக்கிறது. ‘காளி’ என்ற கதையில் நான் இருக்கிறேன். மற்றபடி பெண் இயக்குநர், பெண் தயாரிப்பாளர் என்றெல்லாம் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை.”

“அடுத்து?”

“நிறைய பிராஜக்ட்ஸ் பேச்சு ஓடிக்கிட்டிருக்கு. ‘திமிரு பிடிச்சவன்’ படப்பிடிப்பு முடிஞ்சிடிச்சி. இதில் போலீஸா வர்றேன். பொதுவா போலீஸ் படம் பண்ணும்போது நிஜ போலீஸ் அதிகாரிகளை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நான் யாரையும் எடுக்கவில்லை. ஏன்னா, ஒவ்வொருவரின் உடல்வாகு என்பது வேறு வேறு.

மற்றவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று எடுத்துக்கொண்டோம் என்றால் நம்மை நாமே குறைவாக மதிப்பீடு செய்கிறோம்; தன்னம்பிக்கை இல்லை என்று அர்த்தம். ரோட்ல நிறைய போலீஸ்காரர்களைப் பார்க்கிறோம். எல்லாரும் தங்களை அல்பசீனோவாக நினைத்துக் கொள்வதில்லை. டிராபிக் போலீஸ், சட்டம் ஒழுங்கு போலீஸ் என்று யாராக இருந்தாலும் ஒவ்வொருவரும் அவங்க அவங்க வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

பொதுவா நான் குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் ஆவரேஜ் உடல் எடையை மெயின்டெயின் பண்ணுவேன். ‘திமிரு பிடிச்சவன்’ போலீஸ் கதை என்பதால் உடற்பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். புஜங்களில்  சதைப் பிடிப்பு இருக்கும் படியாக பார்த்துக் கொள்கிறேன். பெர்ஃபாமன்ஸைப் பொறுத்தவரை என் லிமிட் எதுவோ அதைப் பண்ணியிருக்கிறேன்.

அடுத்து ‘மூடர் கூடம்’ நவீன் படம் மாஸ் கதை. சேலஞ்சிங்கான படமாக இருக்கும். தவிர அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ படமும் பண்றேன். ‘திருடன்’ என்ற படமும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் நட்புக்காக முதலும் கடைசியுமாக பண்ணியிருக்கிறேன்.”
“உங்களுக்கு விக்ரம், சூர்யா மாதிரி கெட்-அப் ஆசை இருக்கிறதா?”

“அப்படி ஒரு ஐடியா சுத்தமா இல்லை. கதை பிடித்து கதைக்குத் தேவையாக இருந்தால் எந்தளவுக்கு வேண்டுமானலும் கூன் போடலாம். ஆனால் கூன் போட்டு நடிக்கணும், ஊமையனாக நடிக்கணும், கண் இல்லாதவனாக நடிக்கணும் என்று கதை கேட்பதில்லை. கதை டிமாண்ட் பண்ணினால் என்ன கெட்டப் வேண்டுமானாலும் பண்ணுவேன். பொதுவா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் கதைகளைக் கேட்கிறேன்.”

“பாலிவுட் படங்களில் நடிக்கும் முயற்சி எந்தளவுக்கு இருக்கிறது?”

“இப்போது தமிழில் கமிட்மென்ட்ஸ் அதிகமாக இருக்கிறது. பொறுப்புகள் கூடியுள்ளது. மற்றபடி பாலிவுட் மட்டுமில்ல, ஹாலிவுட்டிலும் என்னால் நடிக்கமுடியும். ஒரே மைனஸ் - மொழி தெரியாதது.தமிழ்ப் படம் எடுக்கும் பட்ஜெட்டில் ஆங்கிலப் படமே எடுக்கலாம். சமீபத்தில் ‘A Quiet Place’, ‘Don’t Breathe’ போன்ற படங்கள் வெளிவந்தது. நல்ல ஹிட்.

இந்தப் படங்களுக்கு சில தமிழ்ப் படங்களின் பட்ஜெட்டை விட குறைவுதான். மொழி தெரியலைன்னாலும் அதில் நடிப்பது பெரிது இல்லை. எல்லாத்தையும் தாண்டி வியாபாரம் இருக்கிறது. ஹாலிவுட் படம் எடுத்தால் எனக்கு வார்னர் பிரதர்ஸ் தொடர்பு இருக்கவேண்டும். அதேபோல்தான் இந்திப் படங்களில் நடிப்பது எளிது. ஆனால் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பது கடினம்.

இந்தி உட்பட பிற மொழியில் படம் எடுக்க நான் தயார். தெரிந்த இண்டஸ்ட்ரியில் கற்றுக் கொள்ளவே நிறைய விஷயங்கள் இருப்பதால் இப்போதைய கவனம் முழுவதும் தமிழில் மட்டுமே.என்னுடைய படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் வருகிறது. மொழி தெரியாததால் அந்த வாய்ப்புகளை மறுத்துவிடுகிறேன். ஏன்னா தமிழைப் பொறுத்தவரை எனக்கு மொழியும் தெரியும், டெக்னிக்கல் விஷயங்களும் தெரியும் என்பதால் என்னால் இறங்கி வேலை செய்ய முடிகிறது.”

“நடிகர்-இசையமைப்பாளர் எந்த ஜாப் பிடித்திருக்கிறது?”

“நடிகராக இருப்பது பிடித்திருக்கிறது. நடிகராக இருக்கும் போது யார் என்று தெரியாமலேயே மக்களுக்கு என்னைப் பிடிக்கிறது. தெரிகிறது. மியூசிக் டைரக்டராக இருக்கும்போது அந்தப் பாடல் பிடிக்கும் என்ற அளவில்தான் ரிலேஷன்ஷிப் இருக்கும். நடிகனாக இருக்கும்போது மக்கள் அன்பு காட்டுகிறார்கள். அது இறைவன் கொடுத்த கிஃப்ட்.

ஏர்போர்ட் போன்ற பொது இடங்களில் பத்தாயிரம் கோடி உள்ளவரையும் என்னையும் ஒன்றாகப் பார்க்கும் போது மக்கள் என்னை அடையாளம் கண்டு நலம் விசாரிக்கிறார்கள். நடிகனாக இருக்கும் போது அந்த அங்கீகாரம் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. பத்தாயிரம் கோடி வைத்திருப்பவருக்கு அது கிடைப்பதில்லை.

பணம் வாங்கிக் கொடுக்க முடியாத ஒரு அங்கீகாரத்தை நடிப்பு வாங்கிக் கொடுத்துவிடுகிறது. நடிகர் கொஞ்சம் உழைப்பைக் கொடுத்தாலே போதும். மியூசிக் டைரக்டருக்கு படம் துவங்கியது முதல் ரிலீஸ் வரை வேலைப் பளு அதிகம்.”“உங்கள் வெப்சைட்டில் பாடல்களை இலவசமாகத் தருகிறீர்களே! நஷ்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?”

“நான் போடும் பாடல்கள் மூன்றாவது நாளில் பைரஸியாக மட்டமான குவாலிட்டியுடன் வருகிறது. குவாலிட்டிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் டே அண்ட் நைட் பார்க்காமல் உழைக்கிறேன். அது பறிபோவதால் குவாலிட்டியுடன் நானே இலவசமாகக் கொடுத்துவிடுகிறேன். எது எப்படியோ, மக்களிடம் போய்ச் சேருவதால் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

நானே இசைக் கம்பெனி ஓனராக இருப்பதால் பல்வேறு சமூக வலைத்தளங்களில் நினைத்த நேரத்தில் பதிவிட முடிகிறது. குறிப்பிட்ட நிறுவனத்துக்கு கொடுக்கும்போது என் பாடல்கள் குறிப்பிட்ட எல்லையோடு சுருங்கிவிடுகிறது.பண இழப்பாக இருந்தாலும் நோக்கம் நிறைவேறுகிறது. என்னுடைய இணையதளமான www.vijayantony.com என்ற இணையத்தில் நான் இசையமைக்கும் பாடல்களை இலவசமாகக் கேட்பதோடு டவுன்லோடும் செய்துகொள்ளலாம்.”

- சுரேஷ்ராஜா