ஜெமினி ரசிகன்!பிலிமாயணம் 39

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சக்கரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மூன்றாவதாகவும் ஒருவர் ரசிகர்களிடம் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் பட்டியலில் ஜெமினி கணேசனும் இருந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி அளவுக்கு ரசிகர் பலம் இல்லாவிட்டாலும் தாய்க்குலங்களின் ஆதரவு ஜெமினிக்கு கணிசமாகவே இருந்து வந்திருக்கிறது.

ஜெமினிக்கும் ரசிகர் மன்றங்கள் ஏராளமாக இயங்கின. எனினும் முன்னவர்கள் மாதிரி இல்லாமல் இவர் ரசிகர்களை ஒருங்கிணைப்பது மாதிரியான விஷயங்களில் அக்கறை எதுவும் காட்டியதாகத் தெரியவில்லை. அவருடைய ரசிகர் மன்றம் பற்றி யாராவது அவரிடம் சொன்னால் ‘ஓஹோ அப்படியா?’ என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாராம்.

ஜெமினி ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அலுவலகம் அமைத்துக் கொள்ள மாட்டார்கள், ஜெமினி பிறந்த நாளுக்கு அன்னதானம் செய்ய மாட்டார்கள், ெகாண்டாட மாட்டார்கள். படம் ரிலீசாகும் தியேட்டரில் தோரணம் கட்ட மாட்டார்கள், கோஷம் போட மாட்டார்கள். கவுண்டரில் முண்டியடித்து வியர்வை வழிய டிக்கெட் எடுக்கமாட்டார்கள். முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் ஜெமினி கணேசனின் தீவிர ரசிகர்களாக இருப்பார்கள்.

ஜெமினியின் ரசிகர்கள் பெரும்பாலும் அவரின் குணாதிசயங்களை ஒத்திருப்பார்கள். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பார்கள். பெண்களை கவித்துவமாக ரசிப்பவர்களாக இருப்பார்கள், சில்க் ஜிப்பா, வெள்ளை வேட்டி, வரையப்பட்ட அரும்பு மீசையுமாக கிட்டத்தட்ட அவர் சாயலில் இருப்பார்கள்.

ஜெமினி படம் ரிலீசானால் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக கிளம்பிப் போய் படத்தைப் பார்த்துவிட்டு திரும்புவார்கள். படம் பிடித்து விட்டால் திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள். ஆனால் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். பெரும்பாலும் நடுத்தர வயதினராக இருப்பார்கள்.

இப்படியான ஜெமினி ரசிகர்கள் சிலரை எனக்குத் தெரியும். எனது தங்கப்பா மாமா தீவிரமான ஜெமினி ரசிகர். என்னைக்கூட ஒன்றிரண்டு ஜெமினி படங்களுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அவருக்கு எம்.ஜி.ஆர், சிவாஜியைப் பிடிக்காது. “அவர்கள் மேக்கப்பால் அழகைக் கூட்டிக் காட்டுகிறவர்கள் ஜெமினிதான் இயல்பான அழகுடையவர். சரித்திர, புராணப் படங்கள் தவிர சமூகப் படங்களில் அவர் அதீத மேக்கப் போட்டு நடிப்பதில்லை. வில்லனாகக்கூட அதிக படங்களில் நடித்ததில்லை.

எம்.ஜி.ஆருக்குத்தான் பெண் ரசிகைகள் அதிகம் என்பார்கள். ஆனால் உண்மையில் ஜெமினிக்குத்தான் அதிகம். காரணம், எம்.ஜி.ஆரின் அழகு திகட்டும், ஜெமினி அழகு ரசிக்க வைக்கும்” என்பார்.அவருடைய நடிப்பின் நுட்பமான பகுதிகளைச் சுட்டிக் காட்டிச் ெசால்வார்.

“இரு கோடுகள் படத்தில் குமாஸ்தாவாக இருக்கும் ஜெமினி தன் முன்னாள் மனைவியை கலெக்டராக சந்திக்கிறபோது ஒருவித நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அப்படியொரு நடிப்பை எந்த நடிகனாலும் கொடுக்க முடியாது. மிகை நடிப்பு கோலோச்சிய காலத்தில் யதார்த்த நடிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்தவர் அவர்” என்பார்.

அது உண்மைதான் என்பதை பிற்காலத்தில் நானே உணர்ந்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் படமும், சிவாஜி படமும் 100வது நாளை தாம்தூம் என கொண்டாடிக் கொண்டிருக்கும்போது ஜெமினி படம் சத்தமே இல்லாமல் 100 நாளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும்.

இப்போதும் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ரசிகர் மன்றங்கள் இருப்பதைப் போல ஜெமினி கணேசனுக்கும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. ஜெமினி கணேசனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் காலத்தை வென்ற கலைஞன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்