த்ரில்லராக ரெடியாகும் சில்க்!



தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கெட்டிக்காரர் நடிகரும் கேமராமேனுமான நடராஜ். அந்த வரிசையில் நட்டி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சில்க்’. இந்தப் படத்தை ‘அம்புலி 3டி’ படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் இயக்குகிறார்கள்.

‘‘இது தனித்துவமான த்ரில்லர் கதை. படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியைக்  கொண்டது.இந்தக் கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்குத் தான் காத்திருந்தேன் என்றார். படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அருண்மணி ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார்.

‘அம்புலி’ படத்தை நேரடி 3 டி படமாக எடுத்த போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திலும் அதுபோல் ஏராளமான சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.  நிச்சயமாக இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்’’ என்கிறார்கள் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரீஷ்.

- எஸ்ரா