பேசக் கூடாது!



பேசவே கூடாது. சின்ன சப்தம்கூட உங்களிடமிருந்து வெளிப்படக்கூடாது. ஒரு தும்மல் போட்டால்கூட செத்துப் போய் விடுவீர்கள்.

உங்களால் வாழமுடியுமா?

இதுதான் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘A Quiet Place’ ஹாலிவுட் படத்தின் கதை. தொண்ணூற்றி ஐந்து நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் வசனங்கள் மொத்தமாக மூன்று நிமிடங்களுக்கு இடம் பிடித்திருந்தாலே அதிகம்தான். மற்றபடி படத்தில் இடம்பெறும் பாத்திரங்கள் சைகை பாஷையில்தான் பேசிக் கொள்கிறார்கள்.

2020ல் நடக்கும் கதை.வித்தியாசமான உயிரினங்கள் தோன்றி, மனித இனத்தையே அழிக்கின்றன. அந்த உயிரினங்களுக்கு அதீதமான கேட்கும் திறன் உண்டு. ஆனால், பார்வை கொஞ்சம் மட்டுதான். சின்ன சப்தத்தை மனிதர்கள் ஏற்படுத்தினால்கூட அவற்றுக்குக் கேட்டு, உடனே வந்து வேட்டையாடிவிடும். இவ்வகையில் உலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள், இந்த விசித்திர விலங்குகளால் இறந்துவிடுகிறார்கள்.

இதில் தப்பிப் பிழைத்த ஒரு குடும்பம், பேச்சை மறந்து எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதே கதை.இந்தக் கதையை ஒன்றரை மணி நேர திரில்லராக மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் ஜான் கார்சின்ஸ்கி. படத்தில் ஹீரோவாகவும் அவரே நடித்திருக்கிறார்.

அவருடைய காதல் மனைவி எமிலி பிளண்ட்தான் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் இயக்குநர் நடிப்பதாக இல்லையாம். இயக்குநரின் மனைவிதான் ஹீரோயின். கதையைக் கேட்ட ஹீரோயின், தனக்கு ஹீரோவாக தன்னுடைய கணவரே நடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துதான் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வாய்விட்டு அழவேண்டிய, மனம் விட்டுச் சிரிக்கவேண்டிய சந்தர்ப்பங்களைக்கூட மனிதர்கள் சைகை மொழியில்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்சியாக்கியிருக்கும் இடமெல்லாம் அற்புதம். குறிப்பாக படத்தின் ஹீரோ குடும்பத்துக்காக தன்னை கிளைமேக்ஸில் தியாகம் செய்கிறார்.

அவர் இறந்துவிட்டதற்காக அவரது குழந்தைகளும், மனைவியும் சத்தமே வராமல் அழும் காட்சி அநியாய நெகிழ்ச்சி.உலகமெங்கும் விமர்சகர்கள் கொண்டாடி வரும் இந்தப் படம் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. சர்வதேச விருதுகளை அள்ளிக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா ரசிகர்கள் எவருமே தவறவிடக்கூடாத படம்.

யுவகிருஷ்ணா