திரும்பிப் பார்க்கிறேன்!திடீர் தொடர் 1

நடிகர் திலகம் சிவாஜிகணேசனை மட்டுமே பதினான்கு படங்களில் இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன். மொத்தம் ஐம்பத்தெட்டு படங்கள் இயக்கிய இவர்தான் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஜோடிகளில் ஒன்றான சிவாஜி - ஜெயலலிதா காம்பினேஷனை ‘கலாட்டா கல்யாணம்’ மூலமாக உருவாக்கியவர்.

தொடர்ச்சியாக ‘சுமதி என் சுந்தரி’, ‘ராஜா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களையும் இதே ஜோடியை வைத்து இயக்கியவர். இந்திப் படங்களை தமிழில் ரீமேக் செய்வதில் கில்லாடி. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை கன்னடத்தில் எடுத்தவரும் இவர்தான்.

கமல்ஹாசன் துணை பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை ஹீரோவாக்கி ‘மாலை சூடவா’ எடுத்தவர். அதுபோலவே ரஜினியை ‘கர்ஜனை’யில் ஹீரோவாக இயக்கினார். பிரபுவை ‘சங்கிலி’யில் அறிமுகம் செய்தார். கடைசியாக 1989ல் சத்யராஜை வைத்து ‘சின்னப்பதாஸ்’ இயக்கினார்.

ஜெய்சங்கர், சோ ஆகியோரின் நெருங்கிய நண்பர். திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை ‘குறிஞ்சி மலர்’ டிவி தொடருக்காக இயக்கியவரும் சி.வி.ராஜேந்திரன்தான்.அதன் பிறகு இயக்கத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு பிரபுவை வைத்து ‘வியட்நாம் காலனி’, சிவாஜி - விஜய் இணைந்து நடித்த ‘ஒன்ஸ்மோர்’ ஆகிய படங்களை தயாரித்தார். இயக்குநர் ஸ்ரீதரின் உறவினரான இவர் சமீபத்தில் தன் 81வது வயதில் காலமானார்.

அவர் காலமாவதற்கு சில நாட்கள் முன்பாகத்தான் ‘வண்ணத்திரை’க்கு அவருடைய அனுபவங்களை தொடராக எழுத வேண்டுமென்று கேட்டிருந்தோம். மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டவர், தன்னுடைய அண்ணன் ஸ்ரீதர் தன் வாழ்க்கையை எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்கிற தலைப்பிலேயே எழுதப் போவதாகச் சொன்னார். எழுதத் தொடங்குவதற்கு முன்பாக என்னென்ன எழுதப் போகிறார் என்பதை ‘குங்குமம்’ குழுமத்தின் தலைமை நிருபர் மை.பாரதிராஜாவிடம் சுருக்கமாகப் பேசியிருந்தார்.

விரைவில் தொடர் ஆரம்பிக்க இருந்த நிலையில் அவருடைய திடீர் மரணம் நம்மை அதிர்ச்சிக்கும், வருத்தத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. அவர் பேசியதை அவர் தொனியிலேயே மினி தொடராகக் கொடுக்கிறோம், அவர் ஆசைப்பட்ட ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்கிற தலைப்புடனேயே...

“ஒரு காலத்துலே சிவாஜியண்ணன் படம் நடிக்கிறாருன்னாலே, ‘ஏ.சி.திருலோகசந்தரை கூப்பிடு. அவர் பிசியா இருந்தா ராஜேந்திரனைக் கூப்பிடு’ன்னு சொல்லிடுவாரு. எங்களை மாதிரி சில இயக்குநர்களோட வேலை செய்யுறது அவருக்கு ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கும். அதனாலேதான் அவர் படத்துக்கு நாங்க அடிக்கடி கமிட் ஆயிடுவோம்.

இப்போ இருக்கிற சினிமா வேற, அந்தக் காலத்து சினிமா வேற. படப்பிடிப்புலே கேரவன் மாதிரி வசதியெல்லாம் வரும்னு நாங்கள்லாம் நினைச்சுக்கூட பார்த்ததில்லை. மிகக்கடுமையான உழைப்பிலேதான் ஒவ்வொரு படமும் தயார் ஆச்சி. சிவாஜியண்ணனெல்லாம் மேக்கப் போட்டு அப்படியே வெயிலில் வெந்துடுவாரு.

ஆனா -கேமராவுக்கு முன்னாடி வந்துட்டாருன்னா உழைப்போட அலுப்பு கொஞ்சம்கூட முகத்துலே தென்படாத அளவுக்கு கேரக்டராவே மாறிடுவாரு.அப்போவெல்லாம் ஷூட்டிங் பிரேக்கெல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்கும்.

படத்துலே வேலை செய்யுறவங்க பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் பாகுபாடெல்லாம் இல்லாமே எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து ஜாலியா பேசிக்கிட்டிருப்போம். ஒருத்தரை ஒருத்தரு பர்சனலா புரிஞ்சுக்க அந்த மாதிரி பேச்சுகள் எங்களுக்கு உதவிச்சி. எல்லாரும் அண்ணன், தம்பியா ஒரே குடும்பமா உணர்ந்தோம்.

சிவாஜியண்ணன் அப்போ அவர் நடிச்சிக்கிட்டிருக்கிற மத்த படங்களைப் பத்திக்கூட எங்ககிட்டே மனசுவிட்டுப் பேசுவார். ஒருமுறை மிகப்பெரிய டைரக்டர் ஒருத்தரைக் குறிப்பிட்டு, ‘அந்தப் பயலுக்கு தெனாவட்டு அதிகமாயிடிச்சி. தப்பு தப்பா ஷாட் வைக்கிறாண்டா...’ என்று சொன்னார். ‘நீங்க அங்கேயே சொல்லி சரி பண்ணியிருக்கலாமேண்ணே?’ன்னு கேட்டா, ‘ச்சே... ச்சே... அது தப்பு.

என் வேலையை நான் சரியா செஞ்சுட்டேன். அவன் வேலையை அவன் செய்யலைங்கிறதை படத்தைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும். அவன் வேலையில் நான் தலையிட மாட்டேன்’னு சொன்னாரு. இதுதான் சிவாஜியண்ணன். உரிமையோடு அவர் திட்டினாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் எல்லோரும் இருந்தோம். அந்த உயர்ந்த இடத்தில் இருந்தும்கூட, அவருடைய செல்வாக்கை எப்போதுமே அவர் யாரிடமும் செலுத்தியதில்லை.

டைரக்டர், கேமராமேன், மேக்கப்மேன் என்று எல்லா டெக்னீஷியன்களுக்கும் ரொம்பவே மரியாதை கொடுப்பார். பொதுவாக பெரிய ஹீரோக்கள் தங்களுடைய வசனம் என்னவென்பதை இயக்குநரிடம் கேட்டுக்கொண்டு, அவர்கள் விருப்பப்படி நடிப்பார்கள்.ஆனால் -சிவாஜியோ இயக்குநர்களிடம் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

அதுபோலவே கேமராமேனிடம் எவ்வகையான ஒளியமைப்பை வைக்கிறார்கள், அதற்கு தான் எப்படியெல்லாம் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்பார். ஒளிப்பதிவாளர் அமைத்த லைட்டிங்குக்கு ஏற்ப தன்னுடைய உடை அமைந்திருக்கிறதா என்பதையெல்லாம் ஒன்றுக்கு பத்து முறை சரிபார்த்துக் கொள்வார்.

அதனால்தான் சிவாஜியுடன் பணிபுரிந்தவர்கள் அத்தனை பேருக்கும் திரையுலகில் நல்ல மரியாதை கிடைத்தது. ‘சிவாஜி படத்துலே வேலை பார்த்தவன்’ என்கிற ஒரு அறிமுகமே போதும். இந்தியத் திரையுலகமே நமக்கு மரியாதை செலுத்தும்.

அப்படிப்பட்ட மகத்தான ஆளுமையை பதினான்கு படங்களில் இயக்கிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்றால், அது இறைவனின் கருணையே தவிர வேறென்ன?

எழுத்தாக்கம் : மை.பாரதிராஜா
படங்கள் : ஆர்.சந்திரசேகர்
பழைய படங்கள்
உதவி : ஞானம்


(திரும்பிப் பார்ப்போம்)

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்