அடிபடும் என்றார் பாலா... அடிபட்டுடிச்சா என்று கேட்டார் ஜோதிகா!



‘நாச்சியார்’ படத்தில் திருப்புமுனை கேரக்டரான சேட்ஜி வேடத்தில் நடித்தவர் தங்கமணி பிரபு. ‘பேட்டி’ என்று ஆரம்பித்ததுமே, “பாஸ், எனக்கு தொடர்ச்சியா பேசத் தெரியும். நடுநடுவுலே கேள்வி கேட்டீங்கன்னா திக்கிடும். நானே வாசகர்களிடம் நேரா பேசிக்கிறேனே...” என்று கேட்டார். மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

இதோ தங்கமணி பிரபு பேசுகிறார்.‘‘எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர். எங்கள் குடும்பத்தில் படிச்சவங்க அதிகம் பேர் இருக்கிறதால் என்னையும் மெக்கானிக்கல் என்ஜினியரிங், பிளாஸ்டிக் என்ஜினியரிங் என்று டிகிரி மேல் டிகிரி  படிக்க வைத்தார்கள். ஆறேழு வருஷங்கள் நல்ல பிள்ளை மாதிரி படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.

ஒரு கட்டத்தில் மெஷினும், மெஷின் மாதிரியான வாழ்க்கையும் போரடிக்க ஆரம்பித்ததால் மெதுவாக என் கவனத்தை சினிமாப் பக்கம் திருப்பினேன். எனக்கு சின்ன வயதிலிருந்து போட்டோகிராபி பிடிக்கும். அதுவும் எனக்கு சினிமா மீது சாஃப்ட் கார்னர் வருவதற்கு காரணமாக இருந்தது.

சன் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக ‘நம்ம நேரம்’ என்ற நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. கே.டிவியில் ‘எப்படி ஜெயித்தார்கள்’ என்ற நிகழ்ச்சி பண்ணினேன். க்ளிப்பிங்ஸ் இல்லாமல் வெளிவந்த அந்த நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.

சினிமா வேட்கை காரணமாக ஒரு நல்ல நாள் பார்த்து டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு இடப்பெயர்ச்சி செய்தேன். இயக்குநர் பி.வாசு சாரிடம் சில படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அவரிடமிருந்து வெளியே வந்தபிறகு விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில்தான் அரிதாரம் பூசும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. சினிமாவைப் பொறுத்தவரை கரு.பழனியப்பன் இயக்கிய ‘சதுரங்கம்’ படம்தான் என்னுடைய முதல் படம். அந்தப் படத்தில் நல்ல ரோல் கிடைத்தது. தொடர்ந்து விஜய் நடித்த ‘பைரவா’, ‘தரமணி’ உட்பட சில படங்களில் நடித்தேன்.

என்னுடைய குரல் தனித்துவமாக இருப்பதாக சில சினிமா நண்பர்கள் சொன்னதால் நேரடி தமிழ்ப் படங்கள், ஆங்கிலப் படங்களுக்கு டப்பிங் பேச ஆரம்பித்தேன். ‘பிச்சைக்காரன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’  போன்ற படங்களில் டப்பிங் பேசியிருக்கேன்.டப்பிங், விளம்பரப் படங்களில் பிஸியாக இருந்த சமயத்தில்தான் ஒரு நாள் தற்செயலாக என் நண்பரும் ஒளிப்பதிவாளருமான தேனி ஈஸ்வரைச் சந்தித்தேன்.

அவர்தான் என்னை பாலா சாரிடம் அழைத்துச் சென்றார். என்னை ஏற இறங்க பார்த்தவர், ‘அடிபடும்’ என்றார். ‘பரதேசி’ படத்தில் வில்லன் அடிவாங்கும் காட்சி ஞாபகத்துக்கு வந்து திகிலூட்டியது. மையமாக தலையாட்டினேன். ‘இந்தி தெரியுமா?’ என்றார். அதற்கும் தலையாட்டினேன்.

என் சினிமா வாழ்க்கையில் ‘நாச்சியார்’ நல்ல அனுபவமாக இருந்தது. குப்பை மேட்டில் நான் நடித்த காட்சிகளை நான்கு மணி நேரம் பிழிந்து எடுத்தார்கள். அந்தக் காட்சியில் நடித்த பிறகு குளிப்பதற்காக ஒரு கேரவன்ல இருந்த தண்ணீர் முழுதும் காலி பண்ணிட்டேன். ஆனால், யூனிட்ல உள்ளவங்க அங்க இரண்டு நாள் வேலை பார்த்தார்கள்.

ஜோதிகா மேடத்துடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அவருடன் விவாதம் பண்ணும் காட்சியைத்தான் முதலில் எடுத்தார்கள். ஜோ மேடம் டயலாக் டெலிவரி, எக்ஸ்பிரஷன்ஸ் என்று சகல விஷயங்களிலும் பின்னி பெடல் எடுத்தாங்க.

ஜோ மேடம் பற்றி சொல்வதாக இருந்தால், தன்னுடன் புதுமுகங்கள் யாராவது நடித்தால் அவர்களுக்கு உதவும் விதத்தில் அவரும் ஒரு புதுமுகம் போல் தன்னைக் காண்பித்து புதுமுகங்களின் பயத்தைப் போக்கிவிடுவார். எந்த இடத்திலும் தான் ஒரு பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் பழகுவார். பொதுவா ஒரு படத்தில் நடிப்பவர்கள் சக நடிகர்களுக்கு அப்படி நடி, இப்படி நடி என்று சஜஷன் கொடுப்பார்கள். ஆனால் அவரிடம் அதுவும் இல்லை.

ஓட்டல் காட்சிகளில் சத்தம் வரக்கூடாது. ஆனால் முகத்தில் பயம் தெரியணும். கைகளை இறுக்கிக் கட்டிவிட்டார்கள். அந்தக் காட்சிகளில் ஃபைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உதவியாக இருந்தார். ஜோதிகா மேடம் ‘அடிபட்டுவிட்டதா’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

அதே போல் இயக்குநர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்ல இறுக்கமாக, கறாராக இருப்பார் என்ற இமேஜ் இருக்கு. ஆனால் உண்மை அது அல்ல. பாலா சார் அதிகம் பேசமாட்டார். வழக்கமான நலம் விசாரிப்பு போன்ற சம்பிரதாய சம்பாஷணை எதுவும் அவரிடம் இருக்காது. அவரைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள்தான். ஒண்ணு, வேலையை மட்டும் தான் பார்ப்பார்; இரண்டாவது அடுத்த வேலையைப் பார்ப்பார்.

முதல் நாளே அவருடைய ஸ்டைல் எனக்கு பழகிவிட்டதால் எந்த பிரச்சனையும் வரவில்லை. பத்து முறை டவுட் கேட்டாலும் டவுட்டை க்ளியர் பண்ணுவார். பெர்ஃபாமன்ஸ் விஷயத்திலும் இரண்டு வார்த்தைகளைத்தான் அதிகமாக பயன்படுத்துவார்.

ஒண்ணு ‘அதிகமாக இருக்கு’ என்பார். அடுத்து ‘கம்மியா பண்ணுங்க’ என்பார். படப்பிடிப்பில் நடிகர்களிடம் ஓரிரு வார்த்தைகளில்தான் பேசுவார். கேரக்டரைத் தாண்டி எது பண்ணினாலும் கண்டுபிடித்துவிடுவார். ஏன்னா முழுப் படத்தையும் மனசுக்குள் படம் பிடித்து வைத்திருப்பார்.  

நான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் தயாரிப்பு என்று கூட சொல்லலாம். அந்த வகையில் பாலா சார் படத்துல கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி வைக்க முயற்சி பண்ணினேன். பாலா சாரிடம் ரீடேக் வாங்காமல் நடிக்க வேண்டும் என்று முனைப்போடு நடித்தேன். டயலாக் பேசும் இரண்டு இடத்தில்தான் ரீ-டேக் வாங்கினேன். மற்றபடி மொத்த படத்திலும் சிங்கிள் டேக்கில் நடித்தேன்.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான எனக்கு ஜட்டியோடு நடித்த காட்சிதான் சவாலாக  இருந்தது. ஏன்னா, தெரு நாடகங்களில் நான்கு பக்கம் ஆடியன்ஸ் இருப்பார்கள்.  ஆடியன்ஸையும் கேரக்டராகக் கொண்டு வர வேண்டும் என்ற சவால் இருக்கும். ஆடியன்ஸ் சூழ்நிலைக்கு ஏற்ப டயலாக் மாறும்.

அத்தனை விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய  நான் ஜட்டியோட நடித்த காட்சியில் ஆரம்பத்தில் ஜெர்க் ஆனேன் என்பதுதான்  உண்மை. இன்னொரு சம்பவம் ஓட்டல் அறையில் என் டி-ஷர்ட் காணாமல் போய்விட்டது.  பெரிய நட்சத்திர ஓட்டலில் நடுராத்திரி இரண்டு மணி நேரம் மேல் ஆடை இல்லாமல்  ஜட்டியோடு திரிந்ததை மறக்க முடியாது.

படப்பிடிப்புல நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். முதல் நாள் படப்பிடிப்பில் நான் பைஜாமா உடையில் வட இந்தியர் கெட்டப்பில் இருந்ததால் என்னை நிஜமான சேட் என்று நினைத்து ஜோ மேடம், ராக்லைன் வெங்கடேஷ் இருவரும் என்னிடம் இந்தியில் பேசினார்கள். எனக்கு இந்தி ஓரளவுக்குத்தான் தெரியும் என்பதால் ஆங்கிலத்தில் பேசி சமாளித்தேன். ஒரு நாள் சாயம் வெளுத்து தமிழில் பேச ஆரம்பித்ததும் ஜோதிகா மேடம் கொங்கு தமிழில் விளையாடினார்.

இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நல்ல ரோல் கிடைத்துள்ளது. இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

மீண்டும் மீண்டும் கற்பழிக்கும் காட்சிகளில் நடிக்க ஆர்வம் இல்லை. வாழ்க்கைக்கு வருமானம் முக்கியம்தான். அதுக்காக மட்டும் நடிக்கக்கூடாது என்பது என் பாலிஸி. ஒரு படத்துல நான் நடிப்பதற்கு என்ன வேலை இருக்கிறது என்பதைத்தான் முக்கியமாகப் பார்க்கிறேன்.’’

- சுரேஷ்ராஜா