பேச்சியம்மாவும், சினிமாவும்!



பிலிமாயணம் 35

சுத்துப்பட்டு கிராமத்துக்கும் ேபச்சியம்மாளைத் தெரியும். எப்போதும் மஞ்சள் பூசிய உடல், சிவப்பு அல்லது மஞ்சள் நிற சேலை. அகன்ற நெற்றியில் சந்தனம் பூசி, அதில் நடுநாயகமாக பெரிய குங்குமப்பொட்டு. சடை விழுந்த தலை. இடுப்பு கோசுவத்தில் 3 சுருக்குப்பைகள் தொங்கிக் கொண்டிருக்கும். ஒன்றில் குங்குமம்; ஒன்றில் சந்தனப்பொடி; மற்ெறான்றில் பணம். இதுதான் பேச்சியம்மாளின் தோற்றம்.

புதிதாக பார்ப்பவர்களுக்கு அவரது தோற்றம் அச்சமூட்டுவதாகக் கூட இருக்கும். சிறு குழந்தைகள் சாப்பிட மறுத்தால் ‘பேச்சியம்மாளிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்’ என்று மிரட்டி சாப்பாடு ஊட்டுவது சர்வசாதாரணமான காட்சி. நாற்பது வயதைத் தாண்டியும் பேச்சியம்மாள் திருமணம் செய்துகொள்ளவில்லை. பதினோரு மாதங்கள் கடுமையாக வேலை செய்வார். தீவிர உழைப்பு கோரும் பல்வேறு வேலைகள். ஆடி மாதம் மட்டும் அவருக்கான மாதம். முழு விரதம் இருந்து அம்மன் கோவில்களில் சாமி ஆடுவார். ஆம், அவர் ஒரு சாமியாடி.

விறகு சுமத்தல், வயல்வேலை செய்தல், சித்தாள் என்று கிடைக்கிற எல்லா வேலையும் செய்வார். அப்படி கஷ்டப்பட்டுசம்பாதிக்கிற பணத்தை ஆடி மாதத்தில் மொத்தமாக செலவு செய்வார். கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், ஆடி மாதம் மட்டும் வேலைக்குச் செல்ல மாட்டார். அவர் மீது சாமி வந்து இறங்கும்போது அவர் சொல்கிற வாக்கு பலிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

இதற்காக ‘இன்னிக்கு பேச்சியம்மாள் எந்த கோவில்ல சாமி ஆடுது?’ என்று கேட்டு அங்கு செல்பவர்களும் இருந்தார்கள். பொதுவாக ஒரு பெண் ஒரு கோவிலுக்கு மட்டுமே சாமியாடியாக இருப்பார். ஆனால் பேச்சி யம்மாளை எல்லா கோவிலிலும் அனுமதித்தார்கள். காரணம், அவரது ஒழுக்கமான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, உழைத்து சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுதல் போன்ற குணங்கள்.

சாமியாடாத காலங்களில் அமைதியின் உருவமாக இருக்கும் பேச்சியம்மாள் அன்று ருத்ர தாண்டவம் ஆடினார். பேண்டு சட்டை அணிந்த ஒரு ஆசாமியை தெருவில் போட்டு மிதித்து உருட்டிக் கொண்டிருந்தார். கோவிலில் சாமியாடுவதைவிட அன்று அவரிடம் உக்கிரம் அதிகமாகத் தென்பட்டது.

‘எலே.. யெழவெடுத்த பயலே... யாருகிட்ட என்ன கேட்டு வந்த... உங்க ஆத்தாவை...” பேச்சியம்மாளின் கோபம் எரிமலையாய் உருவெடுத்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது. அன்றுதான் பேச்சியம்மாளை அத்தனை உக்கிரமாக ஊர் பார்த்தது.‘எலே எவனோ பட்டணத்தான் பேச்சியம்மா மேல கைவைச்சிட்டாண்டா’ என ஊருக்குள் செய்தி பரவ... அரிவாள், தடியோடு கூடியது கூட்டம்.

‘நீங்க யாரும் வராதீங்கலே. நானே இவன பார்த்துக்கிறேன்...’ என்றபடி அடித்துத் துவைத்தாள் பேச்சியம்மாள்.‘உட்டுரு தாயி. இனிமே கேட்கமாட்டேன், இந்தப் பக்கமே வரமாட்டேன்...’ என்று கத்தினான் அந்த நகரத்து இளைஞன்.

பேச்சியம்மாளை அமைதிப்படுத்தியபிறகு அவள் பேசினாள்... ‘இந்த நாயி என்கிட்ட வந்து என்ன கேட்டான் தெரியுமா? சினிமா தியேட்டர்ல சாமியாடணும் வர்றீயான்னு கூப்பிடுறான் நாயி. தியேட்டர்ல ஆடுறதுக்கு நான் என்ன கூத்தாடியா, தெருவுல ஆடுறதுக்கு நான் கரகாட்டக்காரியா. நினைச்சப்பல்லாம் ஆடுறதுக்கு அதென்ன ரிக்கார்ட் டான்சா... நான் சாமிலே... நான் சாமிலே...’ என்று கத்தினாள் பேச்சியம்மாள்.

விஷயம் இதுதான்... அப்போது வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருந்தது ஒரு அம்மன் பக்திப் படம். அந்தப் படத்ைதப் பார்க்க வரும் பெண்கள் அருள் வந்து ஆடுவதாகக் கூறி தியேட்டருக்கு தியேட்டர் பெண்களை சாமி ஆட வைத்து அதையே ஒரு விளம்பர யுக்தியாக பயன்படுத்திக் கொண்டிருந்தது அந்தப் பட நிறுவனம்.

அதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஏஜெண்டு எந்தெந்த ஊரில் எந்த பெண் சாமியாடுவாள் என்று கண்டறிந்து அவர்களை தியேட்டரில் சம்பளத்திற்கு சாமியாட அழைத்துச் சென்று கொண்டிருந்திருக்கிறார். அதுதான் வகைதொகை தெரியாமல் பேச்சியம்மாளிடம் மாட்டிக் கொண்டு அன்று வாங்கிக் கட்டினார். மிகுந்த அம்மன் பக்தையான பேச்சியம்மாள் பக்திப் படங்களைப் பார்ப்பதில்லை என்பதும், சினிமாவுக்கு முற்றிலும் எதிரானவர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்