ஹீரோவாகியிருக்கும் கராத்தே வீரர்!ஒரு பக்கம் டிஜிட்டலில் சினிமாவை ஒளிபரப்புவதற்கு தாறுமாறான கட்டணம் வாங்குவதற்காக ஸ்ட்ரைக். இன்னொரு புறம் இதே டிஜிட்டல் புரட்சியால் புதுமுக நடிகர்களின் வரவு எகிறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோலிவுட்டுக்கு கிடைத்திருக்கும் புது வரவு கெளஷிக். இவர் சமீபத்தில் வெளிவந்த ‘வீரத்தேவன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஒரு படத்துடன் காணாமல் போகும் புதுமுகம் போல் இல்லாமல், இப்போதே கைவசம் நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார்.

“அமுல் பேபி மாதிரி இருக்கிற நீங்கள் சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?”

“சினிமா என்பது என் ரத்தத்திலேயே கலந்திருப்பதாக நினைக்கிறேன். பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை. பக்கா லோக்கல் பையன். நான் கொஞ்சம் நல்லா படிக்கிற பையன் என்பதால் பிரேக் போடாமல் சிவில் என்ஜினியரிங் வரை படிக்க முடிந்தது.படிப்புல புலி மாதிரி இருந்த நான் நடிகனாக வேண்டும் என்பது இறைவன் எழுதிய தீர்ப்பாக எண்ணுகிறேன்.

ஏன்னா, சினிமா தயாரிப்பாளரான கராத்தே கோபாலன் சினிமாவுல பைட்டராக ஏராளமான படங்களில் வேலை செய்திருக்கிறார். அப்படித்தான் எங்கள் வீட்டுக்குள் சினிமா ஆக்கிரமித்தது.நான் சினிமாவுக்கு வருவதற்கு கராத்தேதான் அடிப்படை. ‘சோஷின்காய் ஷிட்டோரியா’ என்ற கராத்தே ஸ்டைலுக்கு இந்தியாவுக்கு என் அப்பாதான் சீஃப் ட்ரைனர்.

படிக்கிற நாட்களில் நான் ஸ்கூலுக்கு போன நாட்களைவிட கராத்தே ஸ்கூலில்தான் அதிகமாக இருந்திருப்பேன். பொதுவா ஒருத்தருக்கு கராத்தே தெரிந்திருந்தால் அவர்கள் மீது மற்றவர்களுக்கு ஒருவித அச்சம் இருக்கும். ‘டேய் அவங்கிட்ட மோதாதே, அவனுக்கு கராத்தே தெரியும்’ என்று சொல்வதுண்டு.

உண்மையைச் சொல்லவேண்டுமானால் கராத்தே தெரிந்தவர்களிடம் நீங்கள் தைரியமாகப் பழகலாம். கராத்தேவின் அடிப்படைத் தத்துவமே அநாவசியமா யாருடனும் சண்டை போடக்கூடாது என்பதுதான். கராத்தே நல்ஒழுக்கத்தை கற்றுத்தரும் கலையாக உலகமெங்கும் பார்க்கப்படுகிறது.

அந்த காரணத்தினாலேயே இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதற்காக இப்போது பரவலாக பள்ளிகளில் கராத்தே சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அப்பா சினிமாவிலிருந்ததால் என்னை அறியாமல் சினிமா ஆசை துளிர் விட ஆரம்பித்தது. அதுமட்டுமில்ல, எல்லா மொழிப் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். இந்தி தெரியலைன்னாலும் இந்திப் படங்களை அதிகமா பார்ப்பேன்.

எனக்குள் சினிமா ஆசை அதிகமாக இருந்தாலும் ‘கராத்தே கிட்’டான என்னால் வீட்ல சொல்லும் அளவுக்கு தைரியம் இல்லை. என் ஆசைகளை மனதில் பூட்டி வைத்து அப்பா, அம்மாவுக்காக அரியர்ஸ் இல்லாமல் என்ஜினியரிங் முடித்தேன்.”
“முதல் பட வாய்ப்பு...?”

“எனக்குள் சினிமா ஆசை இருந்ததால் படிக்கிற நேரம் தவிர, மீதி நேரங்களில் வாய்ப்பு தேடி கோடம்பாக்கத்தில் உள்ள சினிமா கம்பெனிகளுக்கு படையெடுப்பேன். அன்றாட வேலைகளில் வாய்ப்பு தேடுவதும் முக்கிய வேலையாக இருக்கும். நிறைய முயற்சி செய்தும் வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

அடுத்தடுத்து ஏமாற்றங்கள், அதனால் விளையும் விரக்தி என்று வாய்ப்பு தேடும் எல்லோரையும் போல பல தோல்விகளைச் சந்தித்தேன். அம்மாதிரி சமயங்களில் தினமும் அழுவேன். ஒரு கட்டத்தில் கஷ்டப்பட்டால்தான் ஜெயிக்க முடியும் என்று தேற்றிக்கொண்டு இரு மடங்கு ஈடுபாட்டோடு வாய்ப்பு தேடினேன்.

அப்படி கிடைத்த வாய்ப்புதான் ‘வீரத்தேவன்’. ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் போய் வந்த பிறகுதான் என் அம்மாவிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னேன். அத்துடன் இனிமே சினிமாதான் என்று என் விருப்பத்தையும் சொன்னேன். என்னுடைய அப்பா எதிர்ப்பு தெரிவிக்காமல் க்ரீன் சிக்னல் காண்பித்தார். அப்பாவே படத்தைத் தயாரிக்க முன் வந்தார்.

‘வீரத்தேவன்’ சுமாராக ஓடினாலும் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. அதற்குக் காரணம் என்னுடைய அப்பா. ஏன்னா அந்தப் படத்தில் நான் ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பேன். படம் பார்த்தவர்களில், ஃபைட், டான்ஸ் எதுவுமே புது பையன் மாதிரி தெரியலை என்று சொன்னார்கள். அது எல்லாமே சின்ன வயசுல அப்பாவிடம் கற்றுக் கொண்டதால் எனக்கு யூஸ்ஃபுல்லாக இருந்தது.”

“முதல் பட அனுபவம்?””

“கூத்துப் பட்டறை மாணவன் என்பதால் நடிப்பை சமாளிக்க முடிந்தது. ஆனால் அதிலும் சவால் இருந்தது. நான் வட சென்னையில் வளர்ந்த பையன். ‘வீரத்தேவன்’ படமோ மதுரை நேட்டிவிட்டி சப்ஜெக்ட். நிஜ வாழ்க்கைக்கு நேர் எதிர் கேரக்டர் என்பதால் ஒரு சவாலாக விரும்பி ஏற்றுக்கொண்டேன்.

கிராமிய நடிப்பை வெளிப்படுத்த ‘கூத்துப்பட்டறை’ ஜெயராவ் மாஸ்டர் உதவியாக இருந்தார். அந்தப் படத்தில் அப்பா வீரத்தேவன் என்ற லீட் பண்ணியிருப்பார். ஸ்பாட்ல அப்பாவும் உதவியாக இருந்தார்.”

“என்ன மாதிரி வேடங்களில் நடிக்க விருப்பம்?”

“எனக்கு காரத்தே, கோபுடோ, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், யோகா, மான் கொம்பு, சுருள்கத்தி, நுன் சாக், சேம்பர் என தற்காப்புக் கலைகள் அனைத்தும் தெரியும். எனக்கு சண்டை தெரியும் என்பதால் நடிக்க வரலை.

நல்ல கதைகளில் நடிக்கணும். நல்ல கதைகள் கிடைத்தால் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயாராக இருக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கணும். ஒரு நடிகனாக ஸ்கோர் பண்ணிய பிறகு நான் கற்றுக்கொண்ட கலைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மாதிரி ஆக்‌ஷன் ரோல்களில் நடிப்பேன்.”

“அடுத்து?”

“ரோஷன் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘ஆறில் இருந்து 6 வரை’. நேரத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. ஒரே நாளில் நடக்கிற கதை என்பதால் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். க்ரைம் த்ரில்லர். எதைப் பற்றியும் கவலைப்படாத உல்லாச வாலிபனாக பெண்களை டீஸ் பண்ணும் கேரக்டர். முதல் படத்திலிருந்து மாறுபட்ட கேரக்டர் என்பதால் புது அனுபவமாக இருந்தது. ஸ்ரீஹரி டைரக்‌ஷன் பண்ணியிருக்கிறார். குஷ்பூ சிங் நாயகி. ஜெயப்பிரகாஷ், ஜார்ஜ் போன்ற சீனியர் நடிகர்களும் இருக்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடக்கிறது.அதே கம்பெனி தயாரிக்கும் ‘ஸ்பாட்’ படத்திலும் ஹீரோவாக பண்றேன். ஆக்‌ஷன் ஜானர். ரிஷிராஜ் டைரக்‌ட் பண்ணுகிறார். நாயகி அக்னி. முக்கியமான வேடத்துல நாசர் நடித்திருக்கிறார். நாசர் சார் பெரிய ஜாம்பவான்.

அவருடன் நடிக்கும் போது கரெக்ட்டா பண்ணணும் என்று நினைத்தேன். அவர் கொடுத்த உற்சாகத்தில் பயம் இல்லாமல் நடிக்க முடிந்தது. வளரும் நடிகரான எனக்கு சினிமாவைப் பற்றிப் புரிந்துகொள்ள நிறைய டிப்ஸ் கொடுத்தார். அவருடன் சேர்ந்து நடித்த நாட்கள் படப்பிடிப்புத் தளமாக இல்லாமல் பள்ளிக்கூடமாக இருந்தது.”

“சினிமாவில் உங்கள் ரோல் மாடல்?”

“எனக்கு ரோல்மாடலாக நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லாரிடமும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்கிறேன். ஏதோ ஒரு வகையில் ரகுவரன் சார் என்னை அதிகமாக டாமினேட் பண்ணியிருக்கிறார்.நடிகைகள் விஷயத்திலும் அப்படித்தான். சீனியர், ஜூனியர் என்று பார்க்காமல் யார் கூட ஜோடியாக நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன். ஒரு பேட்டியில் கமல் சார் சொன்னமாதிரி, ஒரு இரும்பு டேபிள் கிட்ட ரொமான்ஸ் பண்ண சொன்னாலும் நான் ரெடி.”

- சுரேஷ்ராஜா