கலகலப்பு 2



Laugh riot!

பூர்வீகச் சொத்தைத் தேடி காசிக்கு வரும் ஜெய். காசியில் ஒரு அரதப்பழசான  மேன்ஷன் நடத்தும் ஜீவா. தன்னைப் பற்றிய ஆதாரங்களைத் தேடி அடியாள்களோடு காசிக்கு வரும் அரசியல்வாதி மதுசூதனராவ்.

போலிச்சாமியார் யோகி பாபு மற்றும் சீட்டிங் சிவா. ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத இத்தனை பேரின் வாழ்வியல் சம்பவங்களை ஒரே நேர்க்கோட்டில் இணைத்து கலகலப்பாக ரசிகர்களின் வயிற்றை காமெடியால் பதம் பார்க்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

ஜெய், நிக்கி கல்ராணி மேல் காதல் கொள்வது,  தங்கையை சதீஷுக்கு கல்யாணம் செய்துவைத்து, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவை கல்யாணம் செய்ய நினைக்கும் ஜீவா என காதலும் காமெடியும் கலந்து எக்கச்சக்க நடிகர்களுடன் பரபரப்பாக அமைந்திருக்கிறது திரைக்கதை.

அழகான தாசில்தாராக வரும் நிக்கி கல்ராணியும் சின்னச்சின்ன அசைவுகளாலேயே அசத்தும் கேத்தரின் தெரஸாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சியிலும் புகுந்து விளையாடுகிறார்கள்.

ராதா ரவி, யோகி பாபு, மதுசூதன ராவ், சதீஷ், ரோபோ சங்கர், ராம்தாஸ், விடிவி கணேஷ், வையாபுரி, மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, ஜார்ஜ் மர்யான், விச்சு, சந்தானபாரதி, தளபதி தினேஷ் என படம் முழுக்க சிதறவிடப் பட்டிருக்கும் நட்சத்திரங்கள் அத்தனைபேரும் காமெடியில் ஒவ்வொரு ரகம் காட்டி சிரிக்கவைக்கிறார்கள்.

யூ.கே.செந்தில்குமாரின் கேமரா உழைப்பில் பழம் கட்டிடமான முருகா விலாஸ் கூட ஒரு கேரக்டராக மிளிர்கிறது. சுகர் நாயும் அப்படியே. ரங்கோலி நடனக்காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. ஆர்ட் டைரக்டர் பொன்ராஜ் குமார் அமைத்துள்ள முருகவிலாஸ் லாட்ஜ் கவனம் ஈர்க்கிறது.‘கூகுள்ல பொலிடீஷியன்னு அடிச்சுப் பாருங்க.

இப்போ ஊழல் பண்றவங்க பேருதான் வரும். காந்திஜி, நேதாஜி பேர்லாம் வராது!’ என ஆங்காங்கே பத்ரியின் வசனங்கள் நச்சென்று அமைந்துள்ளன. இரட்டை அர்த்த வசனங்களும் முகம் சுழிக்கவைக்காமல் ரசிக்கவைப்பது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவைக் கதைக்கேற்ற திரைக்கதையை நறுக்கென அமைத்திருக்கிறார் வெங்கட்ராகவன் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் “அடியே வர்றீயா...”, “காரைக்குடி இளவரசி...”, “ஒரு குச்சி ஒரு செல்பி...” ஆகிய பாடல்கள் ரசிக்கும் வகையில் இருக்கின்றன.கிளைமேக்ஸ் வரும்போது சிரித்துச் சிரித்து டயர்டாகி விடுகிறது.தனக்கே உரிய கட்டமைப்புகளுடன் ஒரு காமெடி படத்தை கலகலப்பாக இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.