இது சினிமா இல்லே திருவிழா!



“இயக்குநர் பேரரசு சாரிடம் அசோசியேட்டாக ஒர்க் பண்ணினேன். அதன்பிறகு தனியாக படம் இயக்கலாம் என்று சாரிடமிருந்து வெளியே வந்தேன். அப்போது எனக்கு கிடைத்த வாய்ப்புதான் ‘பக்கா’.

எனக்கு வாய்ப்பு கிடைத்ததை கேள்விப்பட்டதும் “கங்கிராட்ஸ் கலக்குங்க’’னு சொல்லி என் குருநாதர் பேரரசு சந்தோஷப்பட்டார். அந்த எனர்ஜியே ரிலீஸ் வரை என்னை உற்சாகமாக ஓட வைத்துக்கொண்டிருக்கிறது” என்று ஓடும் பைக்கை ஓரங்கட்டிவிட்டு நம்மிடம் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா.

‘‘ஆக்சுவலா எனக்கு ‘இந்தியன்’, ‘ரமணா’ போன்ற ஜானர்ல படம் பண்ணுவதற்கு பிடிக்கும். ஏன்னா அந்த மாதிரி படங்களில் மக்கள் சம்பந்தப்பட்ட சோஷியல் எலிமென்ட்ஸ் கலந்திருக்கும். அப்படித்தான் கதைகளையும் உருவாக்கி வைத்திருந்தேன்.

அதன்பிறகு ‘ரஜினி முருகன்’, ‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற படங்கள் எனக்குள் சின்ன தாக்கத்தை உண்டுபண்ணியது. வெகு ஜனங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணலாமே என்ற ஐடியாவில் என்னுடைய பேட்டனை மாற்றிக்கொண்டு இந்த ‘பக்கா’ கதையை ரெடி பண்ணினேன்.

என் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி பக்கத்துல உள்ள செம்படாகுறிச்சி. அங்கு விழாக் காலங்களில் எப்போதும் பஞ்சாயத்து இருக்கும். ரஜினி, கமல் படங்கள் வெளியாகும் போது இரண்டு தரப்பு ரசிகர்களுக்கிடையே மோதல் நடக்கும்.பால்குடம் அதிகமாக யார் ஊற்றுவது, கொடியை யார் கட்டுவது, யார் போஸ்டர் ஒட்டுவது என்று பஞ்சாயத்துக்கு அளவே இல்லாமல் இருக்கும். அந்த பஞ்சாயத்தில் திருவிழா சமயத்தில் எந்த நடிகரின் பாடலும் ஒலிக்காத நிலை ஏற்படும்.

பல சந்தர்ப்பங்களில் நானும் ரஜினி சாருக்கு கொடிகட்டி, பால் அபிஷேகம் பண்ணியிருக்கிறேன். இதுதான் ‘பக்கா’ படத்தின் முதல் புள்ளியாக என் மனதுக்குள் தோன்றியது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எதிர் கோஷ்டியில் ஆணுக்கு பதில் ஒரு பெண் பேனர் கட்டினால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் நிக்கி கல்ராணி கேரக்டரை உருவாக்கினேன்.

அதன் பிறகு கிராமத்துக்குள் நடக்கும் சம்பவமாக சொல்லாமல் ஒரு திருவிழாவை மையப்படுத்தி சொன்னால் நல்லா இருக்கும் என்று முடிவு பண்ணினேன். அதற்காக தமிழ் நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு திருவிழாக்களைப் பார்வையிடச் சென்றேன். அப்போது திருவிழா களம் புதுசா தெரிந்தது. நாம் ஏன் திருவிழாவை மையமாக வைத்து கதை சொல்லக்கூடாது என்று முடிவு பண்ணி இந்த ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணினேன்.

முழுப் படமும் திருவிழா பின்னணியில் நடக்கிற மாதிரி இருக்கும். தமிழ் சினிமாவில் இதற்கு முன் ஒரு காட்சி அல்லது ஒரு பாடல்காட்சியில்தான் திருவிழா காட்சிகள் வரும். ஆனால் முதன் முறையாக முழுப் படமும் திருவிழா பின்னணியில் ‘பக்கா’தான் வரப் போகுது’’ டீக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு ஆர்வத்துடன் பேசுகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா.

“படத்துலே மசாலா கொஞ்சம் தூக்கலோ?”

“மேலோட்டமா பார்த்தா இது பக்கா கமர்ஷியல் சினிமா. ஆனா நட்பு, காதல் என எல்லா எலிமென்ட்சும் உண்டு. தோனி ரசிகர் மன்றத் தலைவர் தோனி குமார் என்ற கேரக்டர்ல விக்ரம் பிரபு வர்றார்.

 முதன் முதலாக விக்ரம் பிரபுவை சந்திக்கும்போது இந்த ஒரே கதையுடன்தான் சென்றிருந்தேன். கதை அவருக்குப் பிடித்திருந்தது. உடனே ஷூட் போகலாம் என்றார். ‘வெள்ளக்காரத் துரை’ படத்துக்குப் பிறகு அவர் பி அண்ட் சி படம் பண்ணலை. அவருக்கு இந்தப் படத்தில் ஆக்‌ஷன் எந்தளவுக்கு இருக்குமோ அதே அளவுக்கு காமெடியும் இருக்கும்.”

“லட்டு மாதிரி இரண்டு ஹீரோயின்கள்?”

“நிக்கி கொஞ்சம் கலர் ஜாஸ்தி என்றாலும் நம்ம நேட்டிவிட்டியுடன் கலக்கிற மாதிரி ஒரு தோற்றம் அவரிடம் இருக்கும். படத்துல ரஜினி ரசிகர் மன்றத் தலைவியா வர்றார். ரஜினி ராதா அவருடைய கேரக்டர் பெயர்.

ஆரம்ப கால குஷ்பூ, ரேவதி மாதிரி துடிப்பான கேரக்டர் பண்ணியிருக்கிறார். பிந்து மாதவிக்கு நிக்கியிடமிருந்து நேர் எதிர் கேரக்டர். பிந்து மாதவியின் ஸ்பெஷல் அவருடைய கண்கள். பக்கம் பக்கமாக டயலாக் பேச வேண்டிய காட்சிகளில் கூட கண்களால் பேசி ஜமாய்த்திருக்கிறார்.”

“டெக்னீஷியன்ஸ்?”
“சி.சத்யா சார் மியூசிக். ஆரம்பத்துல சத்யா சார் மியூசிக் என்றதும் அவர் சிட்டி பேக்டிராப்ல வளர்ந்தவர் என்று பயம் காட்டினார்கள். ஆனால் நான் பயப்படாமல் அவர்தான் மியூசிக் பண்ணவேண்டும் என்ற முடிவோடு அவரிடம் போய் கதை சொன்னேன். கதை கேட்டதும் உடனே கதைக்குள் வந்துவிட்டார். நான் என்ன ஃபீல் பண்ணினேனோ அதைக் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் நான் நினைத்ததைவிட நன்றாக பாடல்கள் கொடுத்தார். பல நாள் தூங்காமல் விடிய விடிய சாங் கம்போஸிங் பண்ணினார். ஒரு திருவிழா பாடலுக்காக அவரை திருவிழா களத்துக்கே கொண்டு போய் நிறுத்தினோம்.

விழாவில் பங்கு பெற்ற கிராமியக் கலைஞர்களே ரிக்கார்டிங்கிலும் பங்கு பெற்று இசையமைத்தார்கள். பாடல்கள் வெளியாகி செம ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. ‘ஓல வீடு நல்லா இல்ல’ பாடலுக்கு அமோக வரவேற்பு. ‘இழுத்த இழுப்புக்கு வாடி’ பாடலுக்கு யூத்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். காஷ்மீர்ல இருந்து ஒரு ராணுவ வீரர் போன் பண்ணி பாராட்டினார்.

என்னுடைய குருநாதர் பேரரசு சார் படங்களுக்கு சரவணன் சார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். அவருடன் பணிபுரிய வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். அந்த கனவு என்னுடைய முதல் படத்திலேயே நிறைவேறியிருக்கு. திருவிழா காட்சிகளை கண் முன் நிறுத்தியிருப்பார். பிரேம் டூ பிரேம் கலர்ஃபுல்லாகக் காட்டியிருக்கிறார். அவர் மட்டுமில்ல, ஆர்ட் டைரக்டர் கதிர் உள்பட எனக்கு அமைந்த எல்லா டெக்னீஷியன்களும் பெரும் திறமைக்கு சொந்தக்காரர்கள்.

இணை தயாரிப்பாளர் சரவணன் பற்றி சொல்லியே ஆகவேண்டும். நான் நூறு கடைகள் கேட்டால் நூற்றைம்பது கடைகள் போட்டுக் கொடுத்தார். அவருடைய இன்வால்வ்மென்ட் படத்துக்கு கிராண்டியர் லுக் கொடுத்தது. கரகாட்டப் பாடலுக்கு இருநூறு பேரைக் கேட்டால் முந்நூறு பேரை மதுரையில் இருந்து இறக்கினார். அதே போல் ஒவ்வொரு காட்சியிலும் முந்நூறு பேராவது இருப்பார்கள். இது ஒரு முதல் பட இயக்குநர் நினைத்துப் பார்க்க முடியாத பட்ஜெட்.

தயாரிப்பாளர் டி.சிவகுமார் சார் கதை கேட்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் இவ்வளவு கூட்டமா என்று மிரட்சி அடைந்தாலும், நான் கேட்ட அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தார். சினிமா மீது பேஷன் உள்ளவர்.

ஏற்கனவே ‘அதிபர்’ படத்தை எடுத்தவர். சமீபத்துல ஃபேமிலியுடன் வந்து படம் பார்த்துவிட்டு ‘நல்லா இருக்கு’ன்னு பாராட்டினார். ஒரு தயாரிப்பாளரிடமிருந்து ஒரு இயக்குநருக்கு இதைவிட வேறு எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. அது எனக்கு கிடைத்திருக்கிறது. தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரிக்கணும். அதை பக்காவாக பண்ணியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா