கல்யாண நாள் பார்த்து சொல்லலாமா?



பிலிமாயணம் 27

தமிழ்க் கலாச்சாரமே பாடல்களை பின்னணியாகக் கொண்டது. ஒரு தமிழ்க் குழந்தை பிறந்தவுடன் தாலாட்டில் தொடங்கும் வாழ்க்கை, மரிக்கையில் ஒப்பாரியில் முடிகிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணமும் தமிழ் மக்களுடனேயே பயணித்துக் கொண்டிருப்பது பாட்டுதான்.

நாட்டுப்புறப் பாடல்களும், கதை பாடல்களும், வில்லுப் பாட்டும், சொலவடை பாடல்களும், தெருக்கூத்து பாடல்களுமாய் இருந்த தமிழர்கள் வாழ்க்கையில் 1960களிலிருந்து திரைப்பாடல்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. வாழ்வின் எல்லா சூழ்நிலைகளுக்குமான திரைப்பாடல்கள் நிறைந்து கிடக்கின்றன.

பட்டுக்கோட்டையார் ெகாள்கைளாலும், கண்ணதாசன் காதல் மற்றும் தத்துவங்களாலும், வாலி துள்ளலாலும், வைரமுத்து வர்ணனைகளாலும் பாடல்களை திகட்டத் திகட்டக் கொடுத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் பாட்டு இருந்தாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமத் திருமணங்களில் திரைப்படப் பாடல்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. திருமணம் என்று முடிவு செய்து விட்டபிறகு பெண்ணுக்கு பட்டுச்சேலை வாங்குவதற்கு முன்பே பாட்டுக்கு மைக் செட்டுக்காரனை ஃபிக்ஸ் பண்ணிவிடுவார்கள்.

திருமண வீட்டு வாசலில் நடப்படும் இரண்டு வாழை மரங்களுடன் குழாய் ஸ்பீக்கரும் இருந்தால்தான் அது திருமண வீட்டுக்கான அடையாளம். திருமண வீடுகளில் மந்திரம் ஒலிக்கிறதோ இல்லையோ திரைப்பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்பது அன்றைய எழுதப்படாத விதி. மைக்செட்காரர் மதிப்பு மிக்கவராகக் கருதப்பட்டார்.

வீட்டை வெளிச்சத்தால் மிளிர வைப்பதும், இசையால் குளிர வைப்பதும் அவர்தான். “ஏம்பா மேற்க பாத்து ஒரு ஸ்பீக்கர கட்டுப்பா” என்று மேற்குத் தெருவாசிகள் குரல் கொடுப்பார்கள்.“ஏம்பா நாலு பாகவதர் பாட்டாவது போடுப்பா” என்று பெருசுகளும் வேண்டுகோள் வைப்பார்கள். திருமண வீட்டுக்காரர் எம்.ஜி.ஆர் ரசிகரா, சிவாஜி ரசிகரா என்று ெதரிந்து கொண்டு அதற்கேற்ப பாடல்களைத் தேர்வு செய்து வைப்பார் மைக்செட்காரர்.

கருப்பு நிற ரிக்கார்டை எடுத்து பிளேயரில் மாட்டி, பிளேயரின் கையில் புது ஊசியை குத்தி பூப்போல எடுத்து அதை ரிகார்டின் விளிம்பில் வைப்பார், சில விநாடிகள் இரைச்சலுடன் கடந்து அதன்பிறகு உற்சாகமாகப் பாட ஆரம்பிக்கும். பாடல் முடிந்தவுடன் அதை மீண்டும் எடுத்து பிளேட்டை திருப்பிப் போடுவார். இதே நிகழ்வுதான் திரும்பத் திரும்ப நடக்கும். ஆனாலும் அந்த மாயாஜாலத்தைப் பார்க்க சிறுவர் கூட்டம் நிற்கும். ஒரு பாடல் ரிக்கார்டுகள் இருந்தவரை மைக்செட்காரர் அங்கே இங்கே அசையமுடியாது. அப்புறம் எல்பி என்ற பெரிய ரிக்கார்டுகள் வந்தபிறகு பந்தியில் சாப்பிட்டு வருகிற அளவிற்கு அவருக்கு நேரம் கிடைத்தது.

திருமணத்துக்கு முதல் நாள் இரவு ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ என்று பக்திப் படங்களின் ஒலிச்சித்திரங்கள் ஒளிபரப்பாகும். கிராமமே காதுகளால் படம் ‘பார்த்து’க்கொண்டு தூங்கும். திருமண வீட்டுக்காரர்கள் ஒலிச்சித்திரம் கேட்டுக்கொண்டே வேலைகளைச் செய்வார்கள்.

திருமணத்தன்று அதிகாலையில் ஒரு சில பக்திப் பாடல்களுடன் ஒலிபரப்பு துவங்கும். சரியாக ஏழு மணி ஆனதும், ‘சுத்தசம்பா பச்சநெல்லு குத்தத்தான் வேணும், முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தான் வேணும், இது நம்ம வீட்டுக் கல்யாணம்...’ என்று ‘அன்னக்கிளி’ பாடலோடு விடியும் திருமண வீடு.

‘மாலை சூடும் மண நாள் இது மங்கையின் வாழ்வில் திருநாள்...’ என அன்றைய நாள் மகிமையைப் பாடி திருமண நிகழ்வுகள் துவங்கும். மணமகளை தோழிகள் அலங்கரிக்கும்போது ‘கல்யாணப் பொண்ணு கண்ணால கண்ணு கொண்டாடி வரும் வளையல்...’ என்று ‘படகோட்டி’ எம்.ஜி.ஆர் பாடுவார். திருமண மேடைக்கு மணமகள் அழைத்து வரப்படும்போது ‘மணமகளே மருமகளே வா... வா... உன் வலது காலை எடுத்து வைத்து வாவா...’ என ‘சாரதா’வின் பாடல் ஒலிக்கும். அடுத்த பாடலாக ‘வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ...’ என வரவேற்று ‘பாசமலர்’ ஒலிக்கும்.

மணமகள் கழுத்தில் மணமகன் தாலிகட்டும்போது ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி...’ என்று ‘நெஞ்சிருக்கும்வரை’ படத்தில் பாடுவார் சிவாஜி. தாலிகட்டி முடித்ததும் சாமி கும்பிட கோவிலுக்கு ஊர்வலமாகச் ெசல்லும்போது ‘திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம், ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்...’ என்று ‘குடும்பத்தலைவன்’ பாடுவார். நிகழ்வுகள் முடிந்து கல்யாணப் பந்தி ஆரம்பமாகும்போது ‘கல்யாண சாப்பாடு போடவா...’ என்று ‘மேஜர் சந்திரகாந்த்’ பாடுவார்.

‘கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்...’ என ‘மாயாபஜார்’ ரங்காராவ் முழங்குவார். சாப்பிட்டுவிட்டு ரிலாக்சாக நண்பர்கள் மாப்பிள்ளையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ‘புது மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா அந்த மணமகள்தான் வந்த நேரமடா...’ என்று ‘அபூர்வ சகோதரர்’ கமல் பாடுவார்.

அன்றைய இரவு முதலிரவு. எல்லோரும் முன்னிரவில் அரைத் தூக்கத்தில் இருப்பார்கள். ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதலிரவு...’ என்று எல்ேலார் தூக்கத்தையும் துரத்தி கனவுலகில் மிதக்க விடுவார் மைக்செட்காரர். மறுநாள் காலையில் சில பக்திப் பாடல்களை ஒளிபரப்பிவிட்டு.

‘சம்சாரம் அது மின்சாரம்....’ பாட்டைப் போட்டு முதலிரவு தம்பதிகளை எழுப்பி விடுவார். மைக்செட்டை பேக் பண்ணுவதற்கு முன்பு ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் பேரு விளங்க இங்க வாழணும்...’ என்று ‘பணக்காரன்’ ஸ்டைலில் வாழ்த்தி விடைபெறுவார். இப்படித்தான் தமிழ்க் கிராமங்களில் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்