ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்



காமெடி எமன்!

குழந்தைகள், பெண்களை தொந்தரவு செய்யாமல்,  யாரையும் அடிக்காமல், அரசியல் பண்ணாமல் நேர்மையான வழியில்  திருட்டுத்  தொழில் செய்யும் ஊர் எமசிங்கபுரம். அப்படியொரு ஊர் ஆந்திர மாநிலக் காட்டுக்குள் இருப்பதே வெளியுலகுக்குத் தெரியாது. ஊர்த்தலைவி விஜி சந்திரசேகரின் மகன் விஜய சேதுபதிதான் கொள்ளைக்கூட்டத்தின் தளபதி.

எந்த திசையில் சென்று திருடவேண்டும் என்பதை எமனிடம் குறி கேட்டுச் சொல்வார் ஊர்த்தலைவி. அப்படியொரு உத்தரவின்படி விஜய சேதுபதி,  ரமேஷ் திலக், ராஜ்குமார் ஆகியோர் சென்னைக்கு வருகிறார்கள்.

திருட வந்த இடத்தில் கல்லூரி மாணவி நிஹாரிகா கோனிடெல்லாவைச் சந்திக்கிறார் விஜய சேதுபதி. திருட்டை மறந்து நிஹாரிகா பின்னாலேயே சுற்றி அவரை  எமசிங்கபுரத்துக்கு கடத்திச்செல்கிறார். எதற்காக கடத்தினார், அந்தப்பெண்ணை மீட்க வரும் காதலன் கௌதம் கார்த்திக் என்ன ஆனார் என்பதுதான் கதை.  

படத்தில் பல கெட்  அப்களில் வந்தாலும் எமன் கெட் அப்பில் செம ரகளை செய்கிறார் விஜய சேதுபதி. பல இடங்களில் வசனமே பேசாமல் முகபாவனைகளிலேயே முத்திரையை பதிக்கிறார். உதார் காட்டும் கல்லூரிப் பையனாக காமெடிக் களம் கண்டிருக்கிறார் கெளதம் கார்த்திக். ஹீரோயின் நிஹாரிகா பாந்தமான அழகில் கவர்கிறார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ காயத்ரி, அதிக வசனம் இல்லாமலே ஒரு தேர்ந்த நடிகையால் நடிப்பை வெளிப்படுத்தமுடியும் என்பதை நிரூபிக்கிறார். ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார் கூட்டணியில் காமெடி களை கட்டுகிறது ஆம்லெட் திருடித் தின்னும் காட்சியில் விலா நோக சிரிக்க வைக்கிறார் ராஜ்குமார்.இரண்டு பேரும் விஜய சேதுபதியிடம் பல்பு வாங்கும் காட்சிகள் குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம். கௌதம் கார்த்திக்குடன் படம் முழுக்க பயணிக்கும் டேனியல் ஆனி போப். சில இடங்களில் சிரிக்கவைத்து, பல இடங்களில் பதற வைக்கிறார்.

ஆர்ட் டைரக்டர் ஏ.கே.முத்துவின் கலைநயப்பணியில் எமசிங்கபுரம் கோலாகலமாக காட்சியளிக்கிறது.ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், “ஏய் ரிங்காரா....”, “ஏய் வட்ட நிலவுல பாட்டி சுட்ட வட...” உள்ளிட்ட பாடல்கள் காதுகளுக்கு குளுமை சேர்க்கின்றன. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் பெரும் காடு மற்றும் எமசிங்கபுரக் காட்சிகள் இதமாக இருக்கின்றன.ஒரு கற்பனை கிராமத்தை வடிவமைத்து, காமெடி நிறைந்த பொழுதுபோக்குப் படத்தை வழங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார்.