தாக்குப் பிடிப்பாரா ரஜினி?



பிலிமாயணம் 26

திரையில் மட்டுமே அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினியை வெளி அரசியலுக்குள் இழுத்துவிட்டது ‘பாட்ஷா’.  இந்தப் படத்தில் ஆட்டோக்காரன், மும்பை தாதா என இரண்டு முகங்கள் ரஜினிக்கு. இந்த இரண்டு முகத்திலும் ரஜினி தனி முகத்தை முன் வைத்தார். ஆட்டோக்காரன் புகழ்பாடும் பாடலில்....

“...நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்,
நியாயமுள்ள ரேட்டுக்காரன்,
நல்லவங்க கூட்டுக்காரன்,
நல்லா பாடும் பாட்டுக்காரன்,
காந்தி பொறந்த நாட்டுக்காரன்,
கம்பெடுத்தா வேட்டைக்காரன்,
எளியவங்க உறவுக்காரன்,
இரக்கமுள்ள மனசுக்காரன்டா,
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா...”
என்று தன்னை முன்னிலைப் படுத்தினார்.

தாதாவின் புகழ்பாடும் பாடலில்கூட ரஜினி தன் முகம் காட்டினார்.

“... பட்டாளத்து நடையப் பாரு,
பகை நடுங்கும் படையப்பாரு,
கோட்டு, சூட்டு ரெண்டும் உடுத்தி,
போட்டு நடக்கும் புலியப்பாரு,
காற்றில் எரியும் நெருப்பைப்போல,
சுட்டெரிக்கும் விழியப்பாரு,
நாற்றம், வேர்வை ரெண்டும் கொண்ட,
ராஜாங்கத்தின் மன்னன்தானடா,
இவன் பேருக்குள்ள காந்தம் உண்டு,
உண்மைதானடா... ”

என இந்தப் பாடலும் ரஜினி புகழ்பாடியது.

“எங்கிட்ட இருக்கிற கூட்டம் நான் சேர்த்த கூட்டமில்லை, தானா சேர்ந்த கூட்டம்” என்று பஞ்ச் டயலாக் பேசியதும் ‘பாட்ஷா’வில்தான். இந்தப் படத்தின் வெற்றி விழாவில்தான் ரஜினி நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என்று ஆளும் கட்சி மீது விமர்சனம் வைக்க... அதன் காரணமாக படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட ரஜினி பொதுவெளி அரசியலுக்கு வந்தார்.

அதன்பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் ‘ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ அறிக்கை. அதை தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்கள் ஆட்சி மாற்றங்கள் ரஜினிக்கு வெற்றியைக் கொடுத்தன. ரஜினி அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக வருவார் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

‘பாட்ஷா’வுக்குப் பிறகும் ரஜினியின் திரை அரசியல் தொடர்ந்தது. “நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்” என்று ‘முத்து’ வில் மணி அடித்தார்.

 “கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு” என்று ஒரே படத்தில் பல்டியும் அடித்தார். படையப்பாவில் “என் வழி தனி வழி” என்று அறிவித்தார். “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது” என்று அப்போது அரசியலில் மும்முரமாக இருந்த ெபண்மணியைச் சாடினார்.

‘பாபா’ ஆன்மீகப் படம் என்றாலும் அதில் ரஜினி அதிகம் பேசியது அரசியல்தான். “முடிவெடுத்த பின்னால் நான் தடம்மாற மாட்டேன், முன் வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன், என்னை நம்பி வந்தோரை ஏமாற்ற மாட்டேன், ஏணியாய் நானிருந்து ஏமாற மாட்டேன், உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன், உயிர்வாழ்ந்தால் இங்கேதான், ஓடிவிட மாட்டேன், கட்சிகளை, பதவிகளை நான் விரும்பமாட்டேன், காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்” என்றார்.

அதற்கு அடுத்து வந்த ஒரு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதியில் மட்டும் “அந்தக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்” என வாய்ஸ் கொடுக்க அந்த வாய்சுக்குத் தோல்வி ஏற்பட்டது. ரஜினி மீது ஏற்பட்ட அசைக்கமுடியாத சக்தி என்ற பிம்பத்தை அசைத்துப் பார்த்தது அந்தத் தோல்வி.

இப்படி வருங்கால அரசியல்வாதியாக, தலைவனாக தன்னை தன் படங்களில் முன்நிறுத்தி வந்த ரஜினி அவை அனைத்தையும் ஒரே படத்தி–்ல் காலி செய்தார். அந்தப் படம் ‘குசேலன்’. அதில் ரஜினி அசோக்குமார் என்ற சூப்பர் ஸ்டார் கேரக்டரிலேயே நடித்தார். அவரைச் சந்திக்கும் ஆர்.சுந்தர்ராஜன் அவரை சில கேள்விகள் கேட்பார். அதற்கு ரஜினியின் பதில்கள் எப்படி இருந்தன ெதரியுமா?

சுந்தர்ராஜன் : “அரசியலுக்கு வருேவன்ங்றீங்க, வரலைங்கிறீங்க, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேங்கிறீங்க, நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாதுன்றீங்க, மீறி ஏதாவது கேட்டா கையைத் தூக்கி மேல காட்டுறீங்க, எதுக்கு நீங்களும் குழம்பி எங்களையும் குழப்புறீங்க. வருவீங்களா, இல்லியா தெளிவா சொல்லுங்க....”

ரஜினி : “இத பாருங்க, நான் அரசியலுக்கு வர்றேன் இல்ல வரலை, அதுல உங்களுக்கு என்ன அக்கறை. உங்க வேலையைப் பார்த்துட்டு நீங்க போயிட்டே இருங்க.”சுந்தர்ராஜன்: “வரணும், உங்கள மாதிரி ஆளுங்க அரசியலுக்கு வரணும். மக்கள் கேக்குறாங்கல்ல, வந்து என்ன கிழிக்கப் போறீங்கன்னு பார்க்கணும்?”ரஜினி: “நான் எப்போ வருவேன், எப்படி வருவேன், வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் இதெல்லாம் படத்துக்காக யாரோ எழுதின வசனத்தை நான் பேசியிருக்கேன். அதை நீங்க உண்மைன்னு எடுத்துக்கிட்டா நான் என்ன பண்றது.”

ரஜினி ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்குப்பிறகு  இந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் “தலைவா ஆணையிடு இல்லையேல் ஆளைவிடு” என்று ரசிகர்கள் கொதிக்க... ெதாடர்ச்சியாக நிர்ப்பந்தப்படுத்த... இனி அரசியலில் இறங்கவில்லை என்றால் சமூகம் தன்னை கோழை என்று முத்திரை குத்திவிடும்் என்பதால் தவிர்க்கவே முடியாத காரணத்தால் ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். ரஜினியை நன்கு அறிந்தவர்கள், அருகில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும், அவர் குணத்தில் குழந்தை மாதிரி.

தன்னால் மற்றவர்களுக்கு சின்ன இடையூறும் ஏற்படுவதை விரும்பமாட்டார். அமைதியையும், தனிமையையும் விரும்புகிறவர். துரோகங்களைத் தாங்கிக் கொள்ளமாட்டார். அப்படிப்பட்டவரால் அரசியல் உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்