மூன்று ஹீரோயின்களுடன் பா.விஜய் உல்லாச உற்சவம்!



“இயக்கத்தில் என்னுடைய அறிமுகப்படமான ‘ஸ்ட்ராபெர்ரி’யிலேயே நன்கு கவனிக்கப்பட்டேன். நிறைய டைம் எடுத்து இப்போ ‘ஆருத்ரா’ பண்ணுறேன். க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கிறது.

‘ஸ்ட்ராபெர்ரி’யில் எப்படி ஒரு சமூகக் கருத்தை அழுத்தமாக பதிவு செய்தேனோ, அதே போல் இந்த ‘ஆருத்ரா’விலும் முக்கியமான பிரச்சினையை மையப்படுத்தியிருக்கிறேன்.

இந்தப் படத்தை அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுடன் அவசியம் பார்க்கவேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இதில் பொறுப்புணர்வுடன் பேசப்பட்டிருக்கிறது. உயிரோட்டமான கதையை நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கிறேன்’’ புன்னகையுடன் ஆரம்பித்தார் கவிஞர் பா.விஜய்.

“படத்தோட கதை?”

“இரண்டு மூன்று சம்பவங்களைப் பார்த்து, கேட்டு, படித்த பின்தான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்தபின் இந்தப் படத்தை நானே இயக்க திட்டமிட்டேன். என் பார்வையில் இது கமர்ஷியல் அம்சங்கள் கலந்த ஒரு எமோஷனல் வித் க்ரைம் த்ரில்லர் ஜானர்ல உருவாகியுள்ள படம். படத்தோட லைனை இப்போது சொல்லிவிட்டால் படம் பார்க்கும்போது பெப் இருக்காது.”

“உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“என்னுடைய கேரக்டர் பெயர் சிவமலை. தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் சேல்ஸ்மேன். நடிப்பு, உடல் மொழி என எல்லா விஷயங்களிலும் வேறொரு பா.விஜய்யை பார்க்கலாம். வேற வேற கேள்வி கேட்டு, படத்தோட கதையைத் தெரிஞ்சிக்கலாம் என்கிற உங்க சூழ்ச்சி வேலைக்கு ஆகாது நண்பா...”

“உங்க படத்துலே எல்லாம் ஹீரோயின்கள் செமையா இருப்பாங்களே?”

“அதை ஏன் கேட்கிறீங்க... இந்தப் படத்தோட ஹீரோயினுக்காக படாத பாடுபட்டேன். மும்பையைச் சேர்ந்த மாடல் தக்‌ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி என்று மாநிலத்துக்கு ஒரு நாயகியை கமிட் பண்ணினேன்.

மூன்று நாயகிகள் என்றதும் உல்லாச உற்சவமா இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இந்தப் படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகள் என்று தனியாக எந்தக் காட்சிகளும் இல்லை. கதைக்குத் தேவை என்பதால் மூன்று நாயகிகளை நடிக்க வைத்துள்ளோம்.”

“வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“என்னுடைய தந்தையாக வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்  நடித்திருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் திரையில் தோன்றும் போது ரசிகர்களை அதகளப்படுத்துவார்கள். முக்கியமான வேடத்துல விக்னேஷ் வர்றார். இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, அபிஷேக், கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், மீரா கிருஷ்ணா, சஞ்சனா சிங், பேபி யுவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவு செய்துள்ளார். நான் ஹீரோவா நடிச்ச ‘இளைஞன்’ படத்துக்கு கேமரா செய்தவர். இசை வித்யாசாகர். நடிப்பு, டைரக்‌ஷன் என்று என்னுடைய பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் பாடல்களில் தனி கவனம் செலுத்தியுள்ளேன். ‘ஸ்ட்ராபெர்ரி’ ஷான் லோகேஷ் எடிட்டிங் பண்ணியிருக்கிறார்.

சென்னை, பாண்டிச்சேரி, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஹரித்துவார், குளு மணாலி ஆகிய இடங்களில் மொத்தம் எண்பத்தைந்து நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. நாற்பது நிமிடத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகிறது. வில் மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

இந்தப் படம் அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு செய்தியைக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதையை பெற்றோர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதையும் தெரிந்துகொள்வார்கள்.

இப்படத்தை அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுடன் அவசியம் பார்க்கவேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இதில் பொறுப்புணர்வுடன் பேசப்பட்டிருக்கிறது.”

- சுரேஷ்ராஜா