ஓநாய்கள் ஜாக்கிரதை



குழந்தையை கடத்தும் தாய்மாமன்!

குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்யும் விஸ்வந்த் சொந்த அக்காள் மகளையே  கடத்துகிறார். அவருக்கு நண்பர்கள் உதவுகிறார்கள். கடத்தியது யார் என்று தெரிந்ததா, கடத்தப்பட்ட குழந்தை என்ன ஆனது? என்பதை திக் திடுக் திகில் கதையாக சொல்லியிருக்கிறார்கள். விஸ்வந்த், அக்கறையோடு நடித்திருக்கிறார். ஆடம்ஸ்  காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

ஏ.வெங்கடேஷ்  அனுபவ  நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கொஞ்ச நேரமே வந்து கொலை செய்யப்படும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ரித்விகா. மகள் மீது உயிரையே வைத்திருக்கும் பணக்காரராக  விஜய் கிருஷ்ணராஜ் வருகிறார். மகள் கடத்தப்பட்டதை  அறிந்து தவிக்கும்போதும், மனைவியின் மரணம் கண்டு புலம்பும்போதும் கலங்கவைக்கிறார்.

அதீஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கிறார்.மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவில் திகில் படத்துக்கான பதிவு பக்குவமாக இருக்கிறது. வளவள வசனத்தைக் குறைத்து, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இயக்குநர் ஜே.பி.ஆர் வெற்றிக்கோட்டைத் தொட்டிருப்பார்.