டெண்டு கொட்டாய்!பிலிமாயணம்  22

தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்த இன்றைய இளம் தலைமுறையினருக்கு டூரிங் டாக்கீசில் படம் பார்த்த அனுபவம் இருப்பதற்கான வாய்ப்பில்லை. ஏனெனில், 2000மாவது ஆண்டுக்கு முன்பே டூரிங் டாக்கீசுகளின் காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. நவீனமான காம்ப்ளக்ஸ், மல்ட்டிபிளக்ஸ் மற்றும் மால் தியேட்டர்கள் வந்த பிறகும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குக்கிராமங்களில் டூரிங் டாக்கீசுள் இருந்தன. இப்போது சுத்தமாக இல்லை. பாதுகாப்பு காரணமாக அரசும் அனுமதி தருவதில்லை.

டூரிங் டாக்கீசுகளுக்கு முன்பு நடமாடும் தியேட்டர்கள் இருந்தன. அதாவது சர்க்கஸ் கூடாரம் மாதிரி ஏதாவது ஒரு ஊரில் தென்னங் கீற்றுகளால் தியேட்டர் கட்டுவார்கள். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வரை அதில் படம் ஓட்டுவார்கள். ஒரு சில படங்களைத்தான் திரும்பத் திரும்ப ஓட்டுவார்கள்.

அதன் பிறகு தியேட்டரை பிரித்து எடுத்துக் கொண்டு அடுத்த ஊருக்கு சென்று விடுவார்கள். பெரிய தோட்டங்கள் மற்றும் ஊருக்கு ஒதுக்குப்புறமான காலி மைதானங்களில் இதனை அமைப்பார்கள். பெரும்பாலான மவுனப்படங்கள் திரையிடப்பட்டது இந்த தியேட்டர்களில்தான். இதனால் அந்த தியேட்டர் பணியாளர்களுடன் இரண்டு கதை சொல்லிகளும் இருப்பார்கள்.

இதற்கு அடுத்த கட்டம்தான் டூரிங் டாக்கீஸ். இது நடமாடும் தியேட்டர்களை விட பெரிதாக இருக்கும். சுமார் 500 பேர் அமர்்ந்து பார்க்கிற தியேட்டர்களாக இவை கட்டப்பட்டன. படம் திரையிடும் புரொஜக்டர்கள் அமைந்திருக்கும் அறை மட்டும் கான்கிரீட் கட்டிடத்தில் இருக்கும்.

மக்கள் பார்க்கும் அரங்கம் தென்னங்கீற்றால் வேயப்பட்டிருக்கும். யானை உருவத்தோடு இதனை ஒப்பிடலாம். தலைப் பகுதி புரொஜக்டர் அறை என்றால் முதுகுப் பகுதி அரங்கம். தியேட்டரை வலது இடதாகப் பிரித்து நடுவில் இடுப்பு அளவிற்கு ஒரு சுவர் எழுப்பப் பட்டிருக்கும். ஒரு பகுதி ஆண்களுக்கும், ஒரு பகுதி பெண்களுக்குமாக சரிசமமாக இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.

திரையை ஒட்டிய பகுதி தரை டிக்கெட் பகுதி. அந்தப் பகுதி மணலால் நிரவப்பட்டிருக்கும். அதிக கூட்டம் வந்தால் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார வேண்டியது இருக்கும். கூட்டம் இல்லாவிட்டால் கால் நீட்டி உட்கார்ந்தும் படம் பார்க்கலாம், படுத்துக்கொண்டும் படம் பார்க்கலாம். உயரம் குறைவானவர்கள், சிறுவர்கள் மணலை குவியலாக்கி அதன் மீது அமர்ந்து பார்ப்பார்கள். சில வயதானவர்கள் மணலைக் கூட்டி அதில் பள்ளம் உண்டாக்கி வெற்றிலையைக் குதப்பி துப்பிக் கொள்வார்கள். சில வாண்டு சிறுவர்கள் அது போன்ற பள்ளம் ஏற்படுத்தி அதில் சிறுநீர் கழித்து மூடி வைத்து விடுவார்கள். அடுத்த காட்சிக்கு வருகிறவர்கள் அதை மணல்மேடு என்று ஏமாந்து அமர்ந்து வேட்டியை ஈரமாக்கிக் கொள்வதும் அவ்வப்போது நடக்கும்.

அடுத்த பகுதி பெஞ்ச் டிக்கெட். நீளமான பெஞ்சுகள் தரை டிக்கெட்டின் கடைசி பகுதியில் இருக்கும். 5 முதல் 10 வரிசைகள் கொண்டதாக இது இருக்கும். தரை டிக்கெட்டில் இருப்பவர்கள் பெஞ்ச் டிக்கெட் காலியாக இருக்கிறதே என்று உட்கார்ந்து விட முடியாது. தியேட்டர் ஊழியர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.

இதற்கு அடுத்து சாய்வு பெஞ்ச் டிக்கெட், இதுவும் பெஞ்ச்தான். ஆனால், சாய்ந்து கொள்ளும் வசதியுடன் இருக்கும். பெஞ்ச் டிக்கெட் பகுதியிலிருந்து மூன்று அடி உயரமாக இது அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு அடுத்த பகுதி நாற்காலி டிக்கெட். இது சாய்வு பெஞ்ச் டிக்கெட் பகுதியை விட இரண்டு அடி உயரமாக இருக்கும். நாற்காலி என்பது சாய்வு பெஞ்சில் பக்கவாட்டில் கை வைத்துக் கொள்ள வசதி இருக்கும், அவ்வளவுதான்.  80களில் தரை டிக்கெட் 25 காசாகவும், பெஞ்ச் டிக்கெட் 40 காசாகவும், சாய்வு பெஞ்ச் டிக்ெகட் 50 காசாகவும், நாற்காலி 60 காசாகவும் இருந்தன.

தியேட்டர் திரையின் பின்புறத்தி–்ல் சிறுநீர் கழிப்பிட வசதி மட்டும் இருக்கும். பெண்களுக்கு அவர்கள் பகுதிக்கு அருகில் இருக்கும். தியேட்டரின் நுழைவு வாயில், டிக்கெட் கவுண்டர்கள் இருக்கும் இடத்தை ஒட்டி கேன்டீன் இருக்கும். முறுக்கு, போண்டா, கடலை மிட்டாய் முக்கிய தின்பண்டமாக விற்கப்படும். டீ, காப்பி, பாலும் கிடைக்கும். வெளியில் விற்கப்படும் விலைக்கும் தியேட்டருக்குள் விற்கப்படும் விலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. சில தியேட்டர் கேன்டீன்கள் தங்களுக்கென்று சில பிரத்யேக தின்பண்டங்களை விற்பனை செய்வர்.

புரொஜக்டர் ரூமில் ஒரே ஒரு புரொஜக்டர் இருப்பதால் ஒரு படத்துக்கு இரண்டு இடைவேளை விடப்படும். அதனால் கேன்டீன் வருமானம் அதிகமாக இருக்கும். இதற்கு இடையில் படம் நடந்துகொண்டு இருக்கும்போதே கேன்டீன் ஊழியர் ஒரு கூடையில் கடலை மிட்டாய், முறுக்கு, சுண்டல்களை வைத்துக் கொண்டு விற்பார்கள். ஒவ்வொரு வரிசையாக வந்து செல்வார்.

திடீரென தியேட்டர் ஊழியர் ஒருவர் யாராவது வகுப்பு மாறி உட்கார்ந்திருக்கிறார்களா என்று டிக்கெட் பரிசோதனை செய்வார். திடீரென கேளிக்கை வரியுடன் டிக்கெட் விற்கப்பட்டுள்ளதா என்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் வந்து ஒவ்வொருவரது டிக்ெகட்டாக வாங்கி பரிசோதிப்பார்கள். இத்தனைக்கும் நடுவில்தான் படம் பார்க்க வேண்டும்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போதுதான் டூரிங் டாக்கீசில் பகல் காட்சி இருக்கும். சுற்றிலும் கருப்புத் துணி கட்டி படம் ஓட்டுவார்கள். ஆனாலும் சூரிய கதிர்கள் மேற்கூரையின் ஓட்டை வழியாக விழுந்து கொண்டிருக்கும். தியேட்டருக்குள் புகைபிடிக்க தடை கிடையாது என்பதால் எல்லா திசையிலிருந்தும் பீடி சிகரெட் புகை வந்துகொண்டிருக்கும். புரொஜக்டர் அறையிலிருந்து திரைக்கு வரும் ஒளியில் அந்த புகையின் அடர்த்தியைக் காண முடியும்.

பத்து பதினைந்து குக்கிராமங்களுக்கு மையமான ஒரு ஊரில்தான் டூரிங் தியேட்டர் இருக்கும். அதனால் டிக்ெகட் கொடுக்க ஆரம்பித்து விட்டோம் என்பதை அறிவிக்க “அச்சம் என்பது மடமையடா...” பாடலை ஒலிபரப்புவார்கள். உயரமான கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் குழாய் ஸ்பீக்கரிலிருந்து அந்தப் பாடல் பக்கத்து கிராமத்துக்கும் கேட்கும். “டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா” என்று வேக வேகமாக ஓடி வருவார்கள்.

 படம் போடப்போகிறோம் என்பதை அறிவிக்க “முருகா நீ வரவேண்டும்...” என்ற பாடலைப் போடுவார்கள். “அய்யய்யோ முருகா பாட்டு ேபாட்டுட்டானே” என வேகமாக வருவார்கள். படம் முடிந்ததும் “வணக்கம் பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே...” என்ற பாடலைப் போடுவார்கள். இந்தப் பாடல்கள் தியேட்டருக்கு தியேட்டர் மாறுபடும்.

டூரிங் டாக்கீசுகளில் மூத்திர நாற்றம் இருக்கும், வியர்வை நாற்றம் அடிக்கும், பீடி, சிகரெட் நெடி வீசும். ஆனாலும் அன்று சினிமா கொண்டாட்டமாகத்தான் இருந்தது. வர்க்கம், சாதி, மத, இனப் பிரிவு பாகுபாடுகள் இல்லாமல் அத்தனை மக்களையும் ஒரே குடையின் கீழ் இணைத்த பெருமை சினிமாவைத் தவிர வேறெந்தத் துறைக்கு உண்டு?

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்