மேலே தோசை.. கீழே தோசை.. நடுவுலே வெல்லம்!‘அருவி’யில் சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கிய மில் கம்பெனி ஓனராக நடித்தவர் மதன்குமார்.“பூர்வீகம் புதுக்கோட்டை. சிவில் இன்ஜினியரிங் முடிச்சிட்டு சொந்தமா கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழில் செய்துட்டிருந்தேன். துவக்கத்துல நடிக்கணும்னு ஆசை இல்லை. 2004ல என்னோட நண்பன் ‘சின்ன பட்ஜெட் படம், நடிக்க ஆடிஷன் வைக்குறாங்க, சும்மா துணைக்கு வா’ன்னு கூட்டிட்டு போனான்.

ஆடிஷன்ல அவனை செலக்ட் பண்ணல. என் உருவத்தைப் பார்த்து என்னை செலக்ட் செய்தாங்க. அந்தப் படத்துலே காவல் அதிகாரி வேடம். கமிஷனர் பக்கத்துல நிக்கிற சின்ன ரோல். காவல் நிலைய காட்சியைப் படமாக்கிட்டு இருக்கும்போது இயக்குநர் மானிட்டர் பாத்துட்டு. ‘அந்த கமிஷனர் ரோல நீங்க பண்ணுங்க’னு சொன்னார். அப்போ வேண்டாம்னு ஒதுக்கப்பட்ட கமிஷனர் உடையில் நடிச்சவர் விஜய சேதுபதி.

இப்போ கூட பல இடங்கள்ல பார்க்கும்போது ‘நாங்கல்லாம் ஒண்ணா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தோம்’னு கஷ்ட காலத்தோட நினைவுகளை பல பேர் முன்னாடி பகிர்ந்துப்பார். தொடர்ந்து பல சின்ன பட்ஜெட் படங்கள்ல நடிச்சேன். பத்து வருசமா ஏதாவது சாதிச்சுடுவோம்னு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாவே காலம் போச்சி. ஒரு கட்டத்துல ஊர்ல போய் செட்டிலாகிட்டேன். அப்போதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துல ‘ஒரு சின்ன ரோல் தான், என்னோட தயாரிப்புலே நடிக்கிறீங்களா’ னு விஜய சேதுபதி கேட்டார்.

காவலன் வேலைக்கு முயற்சி பண்ணி ஆளு எடுக்கும்போது வேண்டாம்னு ஒதுக்குனாங்களே.... அவன்தான் இப்ப மன்னனா இருக்கான்.. என்ற எண்ணம்தான் தோன்றியது. ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஷூட்டிங்லதான், நல்லதோ கெட்டதோ சினிமாதான், சென்னைதான்னு முடிவு பண்ணினேன்.

எனக்கு மட்டும் இல்லை. 2000ம் வருசத்துல நடிகனாகணும்னு கோடம்பாக்கத்துல முயற்சி செய்துட்டு முடியாம ஊருக்கு போன பலபேர் இப்போ திரும்பி வாய்ப்பு தேடிட்டு இருக்கோம். அந்த வகையில எங்க செட் ஆட்களுக்கு விஜய சேதுபதி ஊக்க மருந்தா இருக்கார்.

2012ல அருவி ஆடிஷன்ல கலந்துகிட்டேன். என்னோட நம்பர் வாங்கி இயக்குநரே கூப்பிட்டார். இந்தக் கதைக்கு என்னோட உருவம் பொருந்தும்னு சொல்லி. ‘ஒரு கதை சொல்றேன். இந்தக் கதைக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதைச் சொல்லி நடிங்க’னு கலத்து தோசை கிழவி கதையைச் சொன்னார்.

மேல ஒரு தோசை, கீழ ஒரு தோசை.... நடுவுல வெல்லம்னு கதையோட துவக்கத்தில் இருந்தே அழுதுகிட்டு நடிச்சேன். சூப்பர்னு பாராட்டிட்டு கதாபாத்திரத் தன்மையை விளக்கிச் சொல்லி மறுபடியும் நடிக்கச் சொன்னார். கிழவி இறந்துட்டான்னு சொன்னதுல இருந்து அழுது நடிச்சேன். அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டார். 

விறகுலாம் அடுக்கிட்டு மேல விறகு நடுவில வெல்லமா பாட்டி மறுபடியும் விறகுனு கலத்து தோசையோட ஒப்பிடும்போது தான் அழணும்னு சொன்னாரு. பார்வையாளனோட உளவியல் புரிந்து காட்சியை வடிவமைச்சி ருந்தார். இயக்குனர் அருண் பிரபு உணர்வுபூர்வமான படைப்பாளர்ங்கிறதை உணர்ந்தேன். ஒவ்வொரு முறை ரிகர்சல் செய்யும் போதும் என்னை அறியாமலேயே அழுதேன். ஏன்னா எல்லார் வாழ்க்கையிலும் அப்படி ஒரு பாட்டி இருப்பார். பள்ளி படிக்கும்போது பாட்டிகிட்ட மாங்காகீத்து திருடின நாட்கள் எனக்கும் உண்டு.

‘அருவி’ நடித்துக்கொண்டு இருக்கும் போதே இயக்குனர் வெற்றிமாறனோட ‘விசாரணை’ படத்துல காவல் அதிகாரியாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உடல் எடையைக் கூட்டணும்னு சொன்னாங்க. ‘அருவி’ படத்துக்காக வருத்தத்தோட தவிர்த்தேன். ‘அருவி’யா ‘விசாரணை’யான்னு பார்த்தப்போ, எனக்கு ‘அருவி’தான் பெருசா பட்டுச்சி’’ என்று நெகிழ்ந்தவர் மறக்க முடியாத பாராட்டைப் பகிர்ந்து கொண்டார்.

“ரஜினி சார்ல இருந்து பல பிரபலங்கள் பாராட்டினாங்க. கே.கே. நகர்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். அங்க இன்னொருத்தர் அவரோட குட்டிப்  பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருந்தார். ‘அருவி’லே உங்களோட கதாபாத்திரம் வந்த பிறகுதான் ஒரு அழுத்தமே கிடைச்சதுன்னு சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல  பேசிக்கிட்டு இருந்தார்.

கடைசியா விடை பெறும்போது அவர் யாருன்னு அவரே அறிமுகப்படுத்திக்கிட்டாரு. ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குனர் சரவணன்.  அதுக்கு முன்னாடி அவரை நான் பார்த்தது இல்லை. தான் பெரிய டைரக்டர்னு வெளிக்காட்டிக்காம ரசிகனா இருந்து பேசியது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது.

அதன் பிறகு ‘தீரன் அதிகாரம் ஒன்று’லே நடிச்சேன். படம் முழுக்க கார்த்தி கூட பயணிக்கிற ரோல். பவாரியா கொள்ளையர்களைத் தேடிப் போகிற போலீஸ்ல நானும் ஒருத்தன். ‘அருவி’ல அதுக்கு முன்னாடியே நடிச்சிருந்தேன். மூன்று வருடத்துக்குப் பிறகுதான் பல போராட்டங்களுக்குப் பிறகு ‘அருவி’ ரிலீஸ் ஆனது. இந்தப் படம் நல்லா வரணும்னு பல பேரு அர்ப்பணிப்போட வேலை செய்தோம். இன்னைக்கு வெற்றி கிடைச்சிருக்கு.”

- திலீபன் புகழ்