திருட்டுப்பயலே-2ஃபேஸ்புக் விபரீதத்தில் சிக்கிக்கொள்ளும் குடும்ப குத்துவிளக்கு!


போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹாவின் மனைவி அமலாபால், ஃபேஸ்புக் மூலமாக ஒரு வில்லங்கமான விவகாரத்தில் சிக்கிக் கொள்கிறார். பிளாக்மெயில் செய்யும் முகநூல் நண்பனை அமலாபாலுக்கு தெரியாமலேயே பாபி சிம்ஹா எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.நல்ல போலீசாக இருந்து பணம் பறிக்கும் ‘திருட்டுப்பயலே’ போலீசாக மாறும் கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்க்கிறார் பாபி சிம்ஹா. மனைவியை பிளாக் மெயில் செய்பவன் யார் என்று அறிவதில் காட்டும் பதற்றமும் தவிப்பும் பிரமாதம்.

முகநூலும் அலைபேசியுமாக அலைந்து பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரத்தில் அசத்துகிறார் அமலாபால். தனது பிரச்னை கணவனுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் அவருக்கு வரும் பதைபதைப்பு பாராட்ட வைக்கிறது. நாயகனுக்கு சமமான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார் பிரசன்னா. சிரித்துக்கொண்டே அவர் செய்யும் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது.

ஊழல் அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர், பாபியின் பினாமி ஜஸ்வந்த் சேட்டாக பிரதீப் கே.விஜயன், டிடெக்டிவ் கணேஷ் கதாபாத்திரத்தில் இயக்குநர்  சுசிகணேசன் என எல்லா பாத்திரங்களும் நடிப்பில் திருட்டுப்பயல்களாக இருக்கிறார்கள். செல்லதுரையின்  ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய அளவில் வளம் சேர்த்திருக்கிறது.  வித்யாசாகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திகிலூட்டுகிறது.

“நம்ம டிபார்ட்மென்ட்ல இரண்டே இரண்டு வகைதான். கரப்டட், ஹானஸ்ட் கரப்டட்... அதுல நீ எது?’’, “நேரா வளர்ற மரத்தைத் தான் முதல்ல வெட்டு வாங்க”, “எனக்கு சேலை அழகா? சுடிதார் அழகா...? - இரண்டும் இல்லாது இருந்தா ரொம்ப அழகு!”, “மனுஷங்களை ஒட்டுக் கேட்க ஆரம்பித்தபின் யாரையும் நம்ப முடியல...”, “டிபார்ட்மென்ட்ல அடிச்சுட்டே இருக்கிறவன் மாட்டிக்குவான்.. அடிச்சுட்டு ஒதுங்கறவன்தான் தப்பிச்சிக்குவான்..” உள்ளிட்ட வசனங்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன.

எல்லோரையும் சந்தேகப்பட்டு ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர்.... உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏமாந்து  விழும் குடும்பப் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து... ஆகியவற்றை கனமான  காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசி.கணேசன். லைவ்வான ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு, ரசிகர்களை பயமுறுத்துவதோடு இல்லாமல் இவற்றில் எல்லாம் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வையும் ‘திருட்டுப்பயலே-2’ ஏற்படுத்தியிருக்கிறான்.