ஃபாரின் ஃபிகரை டூரிஸ்ட் கைட் உஷார் செய்யும் கதை!ஆபீஸ்பாயாக சினிமாவில்  தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் எம்.எஸ்.எஸ். படிப்படியாக முன்னேறி இப்போது ‘மேல்நாட்டு மருமகன்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். ‘‘இயக்குநர் வேலை எனக்கு புதுசு இல்லை. கலைஞரின் ‘உளியின் ஓசை’யில் அசோசியேட் இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன்.

அதன் பிறகு ஏராளமான படங்களில் ஒர்க் பண்ணினாலும் கலைஞரிடம் வேலை பார்த்த அந்த ஒரே படத்திலேயே சினிமாவைப் பற்றிய சூட்சுமம் புரிந்தது. இப்படித்தான் இயக்குநரானேன். நான் இயக்குநராக அறிமுகமாகும் இந்த ‘மேல் நாட்டு மருமகன்’ படம் இந்தியாவைத் தாண்டி பிரான்சிலும் ரிலீஸ் பண்ண வேலைகள் நடந்திட்டு இருப்பது இரட்டிப்பான சந்தோஷம்’’ மனநிறைவோடு பேசுகிறார் இயக்குநர் எம்.எஸ்.எஸ்.

“எப்படி வந்திருக்கு உங்கள் முதல் படைப்பு?”

“இது நம் நாட்டின் கலாச்சாரத்தை முன்னிருத்துகிற கதை. இல்லாததைத் தேடிப் போவதுதான் மனிதர்களின் குணம். தம்மிடம் இருப்பதை வைத்து இங்கு யாரும் வாழ்வது இல்லை. இங்கு இருக்கிறவர்கள் வெளிநாட்ல கல்யாணம் பண்ணி செட்டிலாகணும்னு ஆசைப்படுகிறார்கள்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை கலாச்சாரம் முக்கியம் என்பதைச் சொல்லியுள்ளோம். இங்கிருக்கிறவர்கள் வெளிநாட்டு கலாச்சாரத்தை, வெளிநாட்டில் வாழ்வதை கெளவரமாக நினைக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டவர்கள் நம் நாட்டின் கலாச்சாரத்தை பெரிதாக நினைக்கிறார்கள்.

உலகளவில் மாறுபட்ட கலாச்சாரங்கள் பல இருந்தாலும் நம்முடைய கலாச்சாரம்தான் எப்போதும் ஜெயிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டின் கலைகளின் அடையாளமாக உள்ள மகாபலிபுரம் போன்ற இடங்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரலாறு சொல்லும் நிஜத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.

சில படங்களை நாம் எடுக்கவில்லையென்றாலும் நாமே எடுத்த மாதிரி ஒரு பெருமிதத்தைக் கொடுக்கும். அப்படி பெருமைப்பட்டுக்கிற மாதிரியான படம் ‘மேல் நாட்டு மருமகன்’. ரொம்ப நாளாக என் மனதில் பூட்டி வைத்த கதை இது. படப்பிடிப்பு, டப்பிங், எடிட்டிங்னு அனைத்து வேலைகளும் முடிந்தாலும் வெளியே வருவதற்கு ஒரு நேரம் காலம் இருக்கு இல்லையா? ‘மேல்நாட்டு மருமகன்’ அந்த இடத்துல இருக்கு.”

“ஒன்லைன் ஸ்டோரி ப்ளீஸ்?”

“வாழ்க்கையின் தேவைக்காக பணம் சம்பாதிக்க பல நாடுகளுக்கு பறக்கலாம். ஆனால் பண்பாடு, குடும்ப உறவுகள், அண்ணன்-தம்பி பாசம், தாயின் பரிசம், நட்பு, திருமண பந்தம், கலாச்சாரத்துக்கு நம் நாட்டை விட வேறு எந்த நாடும் சிறந்தது இல்லை என்பதை அழுத்தமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.

வெளிநாடுகளில் குடும்பம், பாசம் இருக்கலாம். ஆனால் நம்மூரைப் போல் ஆழமான அன்பை பார்க்கமுடியாது. டூரிஸ்ட்டாக வரும் வெள்ளைக்காரப் பெண்ணை, டூரிஸ்ட் கைடாக இருக்கும் நாயகன் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாக நினைக்கிறார். ஹீரோவின் அந்த முயற்சியை காதல், காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன்.”

“என்ன சொல்கிறார் உங்க ஹீரோ ராஜ்கமல்?”

“சின்னத்திரையில் இருந்து வந்திருக்கிறார் ராஜ்கமல். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். சினிமாவில் பிரபலம் இல்லை என்றாலும் சின்னத்திரை மூலம் மக்கள் மனதுக்கு நெருக்கமானவர். கமர்ஷியல் ஹீரோவுக்கு பக்கத்துல இருக்கிறார். அவருடன் வேலை பார்த்தவன் என்ற முறையில் இதை சொல்கிறேன். எப்போதும் இயக்குநரின் நடிகராக செட்டுக்கு வருவார்.

சில சமயங்களில் டே அண்ட் நைட் ஷூட் போவோம். எவ்வளவு லேட்டாக ஷூட் முடித்தாலும் மறுநாள் காலையில் லொகேஷனுக்கு மேக்கப்போடு ஷார்ப்பாக வந்து நிற்பார். அவருடைய கடின உழைப்பும் டெடிகேஷனும்தான் இந்த அளவுக்கு அவரை மக்கள் மனதில் நிறுத்தியிருக்கு.” “ஹீரோயின் ஆண்ட்ரீயன் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கிறாரே?”

“பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். சிலர் நேரத்தை கடைப்பிடிக்கும்போது வெள்ளைக்காரன் மாதிரி கரெக்ட்டா வந்து நிற்கிறான் என்று சொல்வோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் பங்ச்சுவாலிட்டி மெயின்டெயின் பண்ணுவார். ஒரு நாளைக்கு அஞ்சு காஸ்ட்யூம் மாத்தணும் என்றாலும் கேரவன் போன்ற வசதிகளை எதிர்பார்க்காமல் அஞ்சு நிமிஷத்துல ரெடியாகி வந்து நிற்பார்.

உணவு விஷயத்திலும் ரொம்ப சிம்பிள். யூனிட் சாப்பாடு அவங்களுக்கு செட் ஆகாது என்பதால் தனியே ரெஸ்ட்டாரண்டில் இருந்து கொண்டு வரலாம் என்பது ப்ளான். ஆனால், அவர் உங்க கூடவே இருந்து நானும் சாப்பிடுகிறேன் என்று சில பழ வகைகள், பால் போன்ற உணவுகள் போதும் என்றார். பாண்டிச்சேரியில் சில காலம் இருந்ததால் தமிழ் தெரியும். செட்டுக்கு வரும்போது ஜாலியாகத்தான் வருவார். கேமரா முன்னாடி நின்றதும் பின்னி பெடல் எடுத்துடுவார்.

காமெடிக்கு முத்துக்காளை, மனோகர் இருக்கிறார்கள். படத்துல வில்லனே கிடையாது. குடும்பத்தோடு வந்து என்ஜாய் பண்ணலாம். நூறு ரூபாய்க்கு தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்த்த ஃபீல் கிடைக்கும்.” “இப்படி ஒரு சப்ஜெக்ட் எடுக்க எப்படி ஐடியா வந்தது?”

“ஒவ்வொருவருக்கும் ஒரு ஜானர்ல படம் பண்ணணும்னு ஆசை இருக்கும். என்னுடைய முதல் படத்தை பொழுதுபோக்குப் படமாக மட்டுமில்லாமல் சமூக சிந்தனையோடு படம் பண்ணணும்னு நினைத்தேன். அதுமட்டுமில்ல, இயல்பாகவே எனக்கு கலாச்சாரம், பண்பாடு மீது அதிக ஆர்வம் உண்டு. இது என் மனசுக்குள் உதித்த களம். அதை சினிமாவுக்கு செட்டாகிற மாதிரி கற்பனையையும் கலந்து கொடுத்திருக்கிறேன்.என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஆட்களைச் சந்தித்தும் இருக்கிறேன்.

சில நேரங்களில் இருப்பதை விட்டுவிட்டு இல்லாததைத் தேடுகிறோம். ஒண்ணுமே இல்லாதவங்க ஃபாரின்ல செட்டிலாகப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவர்கள் மீண்டும் இங்கேயே வந்ததையும் பார்த்துள்ளேன். அங்கு இருக்கிறவர்கள் இங்கு வந்து செட்டிலாகியதையும் பார்த்திருக்கிறேன்.”“டெக்னீஷியன்ஸ்?”

“பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர் கெளதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். சுற்றுலாவை மையப்படுத்திய கதை. அதனால சித்தன்னவாசல், மகாபலிபுரம், ராமேஸ்வரம் போன்ற  சுற்றுலாத்தலங்களைத் தேடிப்பிடித்து ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். விஷுவல்ஸ் ஒவ்வொன்றும் அள்ளும்.கிஷோர் குமார் இசையமைச்சிருக்கிறார். ஏற்கனவே சில படங்கள் பண்ணியிருக்கிறார்.

ஆனால் இந்தப் படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையும். இளையராஜா ட்ரூப்ல இருக்கிற ஜெயச்சந்திரன் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எங்கள் கூடவே இருந்து வழிநடத்தினார். இந்தப் படத்துக்குப் பிறகு கிஷோர்குமாருக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும். நா.முத்துக்குமார், கிராமிய கலைஞர் ஆக்காட்டி ஆறுமுகம், நாஞ்சில் நாடன் ஆகியோருடன் ‘கட்டிவிடவா கூர புடவ’ என்ற பாடலை நானும் எழுதியிருக்கிறேன்.

இராம நாராயணனின் அனைத்து படங்களுக்கும் எடிட்டிங் பண்ணிய ராஜ் கீர்த்தியின் மகன் விஜய் கீர்த்தியை இந்தப் படத்தில் எடிட்டராக அறிமுகம் செய்கிறோம். ‘உதயா கிரியேஷன்ஸ்’ மனோ உதயகுமார் படத்துக்குத் தேவையான செலவை செய்துகொடுத்தார். படத்தைப் பார்த்தா நம்முடைய கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற உணர்வும் நம் கலாச்சாரத்தைப் பற்றிய மனநிறைவும் மகிழ்ச்சியும் கொடுக்கும்.”

- சுரேஷ்ராஜா