அறம்



One women army!

வட தமிழக கடலோர மாவட்டம் ஒன்றின் கலெக்டராக வருகிறார் நயன்தாரா. அவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு. தன் தரப்பினை நயன்தாரா விளக்குவதிலிருந்துதான் ‘அறம்’ ஆட்சி செய்கிறது.ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரது நிலத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு. அதில் குழந்தை ஒன்று விழுந்துவிடுகிறது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழக்கக்கூடிய நிலை. மக்களோடு இணைந்து மாவட்ட ஆட்சியர், வெற்றிகரமாக அந்தக் குழந்தையை உயிரோடு மீட்கிறார். இதற்காக பாராட்டப்பட வேண்டிய கலெக்டரை சஸ்பெண்ட் செய்கிறது அரசு. இந்தப் பிரச்சினையிலிருந்து கலெக்டர் மீண்டாரா அல்லது வேறு முடிவு எடுத்தாரா என்பதே கதை.

ஹீரோ இல்லாத இந்தப் படத்தை ஒன் வுமன் ஆர்மியாக தன்னுடைய தோளில் வைத்து சுமந்திருக்கிறார் நயன்தாரா. அவர் பேசும் பஞ்ச் டயலாக் ஒவ்வொன்றிலும் அர்த்தம் மிளிர்கிறது. கவர்ச்சித் தாரகையாகவே மக்கள் மனதில் பதிந்துவிட்ட நயன்தாராவுக்கு ‘அறம்’, வேற லெவல் இடத்தை வழங்கப் போவது உறுதி.

சீரியஸான கதையை கமர்ஷியல் பேக்கேஜிங்கில் கொடுத்திருப்பதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கோபி நயினார். ‘மக்களுக்கு எது தேவையோ, அதுதான் சட்டமாக்கப்படணும்.

ஏதோ ஒரு சட்டத்தை போட்டுட்டு, அதில் மக்களை அடைக்கக்கூடாது’ என்பது போன்ற எளிய கருத்துகளை மிகவும் வலிமையான முறையில் படமாக்கியிருக்கிறார். ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை காப்பாற்றக்கூட வசதியில்லாத நாடு, பல்லாயிரம் கோடி செலவு செய்து விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி என்ன சாதிக்கப் போகிறது என்கிற ‘அறம்’ எழுப்பும் கேள்வி, எளிதில் புறம் தள்ளக்கூடியது அல்ல.

லால்குடி இளையராஜாவின் கலை இயக்கமே படத்துக்கு மிகப்பெரிய நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. இயக்குநருக்கு அடுத்தபடியாக மிகவும் கடுமையாக உழைத்திருப்பவர் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ். ஜிப்ரானின் பின்னணி இசை திடுக்கிடச் செய்யும் உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்தக் கதையை நம்பி தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்ட நயன்தாரா, நம்பர் ஒன் நடிகையை இயக்குகிறோம் என்றெல்லாம் பதட்டப்படாமல், தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக மக்கள் உணரும்படி சொல்லியிருக்கும் இயக்குநர் கோபி இருவரும் சர்வதேச விருதுகளுக்குத் தகுதியானவர்கள்.