உலகம் விலைக்கு வருது.. வாங்குறதுக்கு ரெடியா?



காமெடி, குணச்சித்திர வேடங்களில் பின்னி பெடல் எடுத்துக்கொண்டிருக்கும் தம்பி ராமையாவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவர் தற்போது நடிப்புக்கு லீவு போட்டுவிட்டு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கும் படம் ‘உலகம் விலைக்கு வருது’.

ஏற்கனவே அவர் இயக்கிய ‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ போன்றவற்றுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் அவருடைய மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார். இவர் ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தில் ஹீரோவாக நடித்தவர்.
‘உலகம் விலைக்கு வருது’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்த உமாபதியிடம் பேசினோம்.

“அப்பாவே உங்களை இயக்குகிறார். எப்படி ஃபீல் பண்றீங்க...?”

 “ரொம்பவே ஹேப்பி சார். ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் மூலம் அறிமுகமானபோது ரசிகர்களிடமிருந்தும், பத்திரிகைகளிடமிருந்தும் நல்ல விமர்சனங்களும் பாராட்டும் கிடைத்தது. அந்த சமயத்தில் நிறைய கதைகள் கேட்டேன். அதில் உடனடியாக ‘தேவதாஸ்’, ‘தண்ணி வண்டி’ ஆகிய படங்களில் நாயகனாக கமிட்ஆயிட்டேன்.

‘தேவதாஸ்’ படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.‘தண்ணி வண்டி’ படமும் கிட்டத்தட்ட முடியும் கண்டிஷனில்தான் இருக்கிறது. ஒரு பாடல், நான்கு சீன் எடுத்தால் அந்தப் படமும் ரிலீஸுக்கு ரெடி. இரண்டு படங்களிலும் என்னுடைய கேரக்டர் புதுசாஇருக்கும்.

அப்பா டைரக்‌ஷனில் நடிக்க வேண்டும் என்பது என்னுடையநெடுநாள் கனவு. என்னுடைய முதல் படமே அப்பா இயக்கத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பியது உண்டு. ஆனால் அதற்கு இப்போதுதான் காலம் கனிந்துள்ளது.

இப்போதும்அப்பாவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் இருந்தாலும் எனக்காக நான்குமாதம் நடிப்புக்கு லீவு போட்டிருக்கிறார். அப்பா டைரக்‌ஷனில் நடிப்பது எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.

வீட்ல அப்பா எனக்கு முழு சுதந்திரம்கொடுத்திருக்கிறார். ஆனால் படப்பிடிப்பில் நடிகர், இயக்குநர் என்ற முறையில் தான் எங்களுடைய ரிலேஷன் ஷிப் இருக்கும். அப்பா செட்டுக்கு வந்தபிறகு மகன் என்று பார்க்கமாட்டார். என்னிடம் மட்டுமில்ல, டோட்டல் யூனிட்லஉள்ளவர்களிடமும் சின்சியாரிட்டியை எதிர்பார்ப்பார்.”

 “இந்த ‘உலகம் விலைக்கு வருது’ என்ன மாதிரி கதை?”

“இது காமெடி கலந்த எமோஷனல் டிராமா. நன்றாக  வாழ்ந்து கெட்ட குடும்பத்தைப் பற்றியகதை. என்னுடைய கேரக்டர் காதல், சென்டிமென்ட் என்று எல்லாம் கலந்ததாக இருக்கும். இதுக்கு முன்னாடி நான் பெரிசா ஆக்‌ஷன் பண்ணியிருக்கமாட்டேன். ஆனால் இதில் மாஸ் ஃபைட் சீன் ஒண்ணு செமையா இருக்கு. காமெடி கதையில்ஆக்‌ஷனும் சரியாகப் பொருந்தி அமைவது கஷ்டம். இதில் அது நல்லா அமைஞ்சிருக்கு.”

 “ஹீரோயின்?”

“எனக்குஜோடியாக மிருதுளா முரளி நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஒரு தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு பாலிவுட், மல்லுவுட்டில் பிஸியாகிவிட்டார். சமீபத்தில் கூட மலையாளத்தில் பகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடித்தார்.ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், பவன், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன்னு படத்துல நட்சத்திரப் பட்டாளம் அதிகம். இவ்வளவு பேர் உள்ளே வந்ததும் பிரமிப்பா இருக்கு. எல்லாரும் எங்க அப்பாவோட அன்புக்காக, என் படத்தில் நடிக்கிறாங்க.”

“பாட்டெல்லாம் சூப்பரா வந்திருக்காமே?”

“அந்தத் தகவல் உங்களுக்கு வந்துடிச்சா? முதல் நாள் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு முருகன் கோயிலில் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ள ஒரு பாடலை தப்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்களை வைத்து  நான்கு கேமராக்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

வார்த்தைகளுக்குவலிமை சேர்த்து அப்பாவே அருமையா டியூன் போட்டிருக்கிறார். இசைக்கருவிகளின் இரைச்சல் இல்லாமல் எல்லாப் பாடல்களும் மனதுக்கு இதமளிக்கும் வகையில்அட்டகாசமாக வந்துள்ளது. முதல் நாள் படப்பிடிப்பிலேயே பாடலுக்கான ரிசல்ட் தெரிந்தது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஜனங்க மீண்டும் மீண்டும்பாடலை ரிப்பீட் பண்ணி கேட்டாங்க.”

“மத்த டீம்?”

“இப்போ கோலிவுட்ல மோஸ்ட் வான்டட் லிஸ்ட்ல இருக்கிற பி.கே.வர்மாதான் நம்ம படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணுகிறார். ‘அட்டக்கத்தி’, ‘குக்கூ’, ‘கூட்டத்தில் ஒருவன்’, தெலுங்கில் சில பல படங்கள்னு அவருடைய டிராக் ரிக்கார்ட்பெருசு. ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்துக்குப் பிறகு மறுபடியும் இதில் இணைந்துள்ளோம். அவருடைய திறமையை பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தயாரிப்பு தேன்மொழி சுங்குரா. அப்பா இந்தப் படத்தின் ஒன் லைன் சொன்னதும் ‘எப்போ  ஷூட்’ என்றுதான் கேட்டார்களாம். ஏன்னா, கதை மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அடை மழையிலும் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். தொடர்ந்துஅம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்க  திட்டமிட்டுள்ளோம்’’ என்று உற்சாகமாய் பேசுகிறார் உமாபதி.

 - சுரேஷ்ராஜா