திகில் படுத்துவாள் அவள்!



.ஷங்கரின் ‘பாய்ஸ்’ டீமில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்றளவும் பீக்கில் இருப்பவர் சித்தார்த். அதற்குக் காரணம், சினிமா மீதான அவரது காதலும், அதில் அவருக்கு இருக்கும் தேடலும் தான். அந்த வகையில் சித்தார்த் தன் திறமையின் அடுத்த பரிமாணத்தை ‘அவள்’ படத்தில் காண்பித்துள்ளாராம்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக மட்டும் இல்லாமல், இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இந்தப்படத்தின் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். ‘‘திகில் படங்களின் தீவிர ரசிகன் நான். எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உண்மையிலே பயமுறுத்தும் பேய் படங்கள் நிறைய வரவில்லை என்ற வருத்தம் எப்போதும் இருக்கும். அதன் காரணமாகவே நானும் மிலிண்ட் ராவும் ‘அவள்’ படத்தை எடுக்க திட்டமிட்டோம். நானும் மிலிண்ட் ராவும் நீண்டகால நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இருவரும் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குநர்களாக ஒரே சமயத்தில் வேலை பார்த்தோம்.

நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. இந்தப் படத்தை துவங்குவதற்கு முன் திகில் படங்கள் மற்றும் திகில் படங்களைப் பற்றிய மக்களின் மனநிலையைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். கடந்த சில காலமாகவே திகில் படங்கள் பற்றிய கண்ணோட்டம் மக்களிடையே மாறியுள்ளது. ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் விதத்தில் ‘தி கஞ்சூரிங்’, ‘பாரா நார்மல் ஆக்டிவிட்டி’, ‘தி ஈவில் டெட்’ போன்ற படங்களுக்கு இணையான திகில் படத்தை தர நினைத்தோம்.

அப்படி உருவான படம்தான் ‘அவள்’. இது பயத்தில் உறையவைக்கும் தீவிரமான திகில் படமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் அதுல் குல்கர்னியுடன் நடித்துள்ளேன். அவரது அர்ப்பணிப்பும், இந்தப்படத்திற்கான அவரது சிந்தனைகளும் பெரும் பலமாக இருந்தது. ஆண்ட்ரியா இந்தப்படத்திற்கு தூணாக இருந்தார்.

அவருடைய கதாபாத்திரம், அவருடைய சுவாரஸ்யமான நடிப்பு அவருடைய சினிமா கேரியரில் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திகில் விருந்தாக நிச்சயம் இருக்கும்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சித்தார்த். ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை ரிலீஸ் செய்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ‘அவள்’ படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளார்.

- சுரேஷ்ராஜா