முத்தக்காட்சிக்கு பயந்து தேம்பி அழுத ஹீரோயின்!



‘நண்டு சிண்டுகளெல்லாம் ஹீரோவாகிவிட்டார்கள். எனக்கு மட்டும் என்ன குறைச்சல்?’ என்று ஹீரோவாகி விட்டார் மொட்டை ராஜேந்திரன். பல நூறு படங்களில் ஸ்டண்ட் கலைஞராக திறமை காட்டிய ராஜேந்திரன், பாலாவின் ‘நான் கடவுள்’ மூலம் நடிகராக உருவெடுத்தார்.

தொடர்ந்து சில படங்களில் வில்லத்தனம் காட்டியவரிடம் காமெடி கொட்டிக் கிடக்கிறது என்பதை இயக்குநர் ராஜேஷ் உணர்ந்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ராஜேந்திரன் காமெடியில் மிரட்ட, தொடர்ச்சியாக அவருக்கு இப்போது காமெடி ரோல்கள்தான்.

இப்போது அடுத்தகட்ட முன்னேற்றமாக ‘மோகனா’வில் ஹீரோவாகியிருக்கிறார். இவருடன் இன்னொரு ஹீரோவாக பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார். கல்யாணி நாயர் ஹீரோயின். ‘செவிலி’ படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். ஆனந்துடன் பேசினோம்.

“படத்தோட கதை என்ன?”

“படம் பார்க்குறப்போ லேசா ‘தில்லானா மோகனாம்பாள்’ நினைவு உங்களுக்கு வரும். அதனாலேதான் ஹீரோயின் பேரை மோகனான்னு வெச்சு, அதையே படத்துக்கு டைட்டிலாவும் ஆக்கிட்டோம். நாடகத்துறை கலைஞர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறதுதான் படத்தோட நோக்கம். அதுக்காக ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஆயிடாம மசாலாவா நல்ல பொழுதுபோக்குச் சித்திரமா உருவாக்கி யிருக்கோம்.

கல்யாணி நாயர், நாடக நடிகையாக வர்றாங்க. அவங்களோட நடிக்கிற பவர் ஸ்டார் சீனிவாசன், அவங்களை ஒருதலையா காதலிக்கிறாரு. அதே சமயம் கல்யாணியோட தீவிர ரசிகரான பண்ணையார் ‘மொட்டை’ ராஜேந்திரனுக்கும் அவங்க மேலே வெறித்தனமான ஒன்சைட் லவ்வு. கல்யாணியை அடைஞ்சே தீரணும்னு முயற்சிக்கிறாரு. இதனால் ஏற்படும் குழப்பங்களைத்தான் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற அளவுக்கு காமெடியா எடுத்திருக்கோம்.”

“படம் முழுக்கவே நைட் எஃபெக்டாமே?”

“ஆமாம். நாடகம், நைட்டுலேதானே நடக்கும்? படத்துலே ஒரே ஒரு பாட்டுதான். சென்னை, சாலக்குடி, காஞ்சிபுரம் பகுதிகளில் நாற்பது நாட்களில் இருகட்டப் படப்பிடிப்பா நடத்தி முடிச்சிட்டோம்.”

“படப்பிடிப்புலே ஹீரோயின் அழுததா தகவல் வந்ததே?”

“அதுக்குள்ளே அந்த விஷயத்தை கண்ணு, மூக்கு, காது வெச்சி பரப்பிட்டாங்களா? படத்தோட ஸ்க்ரிப்ட் படி மொட்டை ராஜேந்திரனின் கனவில் வந்து ஹீரோயின் அவருக்கு முத்தம் கொடுக்குற மாதிரி ஒரு காட்சி இருந்தது. இதைக் கேள்விப்பட்ட பவர் ஸ்டார், ‘அப்படின்னா எனக்கும் ஒரு முத்தக்காட்சி வைக்கணும்’னு உரிமைக்குரல் எழுப்பினார்.

இந்த பஞ்சாயத்து நடந்துக்கிட்டிருக்கிறப்பவே, திடீர்னு ஹீரோயினைக் காணோம். யூனிட்டே அவரைத் தேடி அலைஞ்சது. அங்கிருந்த ரூம் ஒன்றில் அழுகைச்சத்தம் கேட்க, என்னன்னு எல்லாரும் போய் பார்த்தோம். ஹீரோயின், முத்தக்காட்சிக்கு பயந்து தேம்பித்தேம்பி அழுதுக்கிட்டிருந்தாங்க. அவங்களை சமாதானப்படுத்தி, ‘படத்துலே முத்தக் காட்சியே இல்லை’ன்னு சொன்னதுக்கு அப்புறமாத்தான் நார்மல் ஆனாங்க.”

“டெக்னீஷியன்ஸ்?”

“எல்.ஜி.பாலா இசையமைக்கிறார். நானே ஒளிப்பதிவு செய்யுறேன். மோரா, சீனிவாசன் இணைந்து அந்தப் பாடலை எழுதியிருக்காங்க. ‘ஸ்டண்ட்’ விஜய், சண்டைக்காட்சி அமைச்சிருக்காரு. இது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சின்னப்படம்தான். ஆனா, காட்சிகள் ரசிகர்கள் விரும்பக்கூடிய பிரும்மாண்ட உணர்வை அவங்களுக்கு ஏற்படுத்தும்.”

- யுவகிருஷ்ணா