ரஜினிக்கு பிடிச்ச படம் தமிழுக்கு வருது!



சித்திக், மலையாள தேசத்தின் டாப் மோஸ்ட் டைரக்டர். தமிழுக்கு வரும்பொதெல்லாம் பாக்ஸ் ஆபீசை அதகளம் செய்துவிட்டு அமைதியாக அவர் பாட்டுக்கும் திரும்பிவிடுவார். தமிழில் விஜய்யின் ஃபேவரைட் டைரக்டர். விஜய் நடித்த வெற்றிப் படங்களான ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ இவரது கைவண்ணம்தான். தமிழில் இவர் இயக்கிய எல்லா படங்களுமே வெற்றி என்றாலும் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

“நீங்க தொட்டதெல்லாம் வெற்றிதான். அப்புறம் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?”

“தமிழில்தான் இடைவெளி. மலையாளத்துலே அடுத்தடுத்து ஏதாவது பண்ணிக்கிட்டேதான் இருக்கேன். ஒரு மலையாள சப்ஜெக்ட், தமிழுக்கும் பண்ணினா, இங்குள்ள ஆடியன்சுக்கு அது பிடிக்கும்னு தெரிஞ்சா, அந்தக் கதையோடு இங்கேயும் வந்திருவேன். அப்படித்தான் எனது கேரியர் போய்க்கிட்டு இருக்கு.

‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘சாது மிரண்டால்’, ‘காவலன்’ படங்கள் எல்லாமே முதல்ல மலையாளத்துலேதான் பண்ணினேன். அந்தப் படங்களை எந்த மொழியிலேயும் பண்ண முடியும். ஆனா, மத்த மொழிகளை விட தமிழ்ல பண்ணும்போது தமிழ் ஆடியன்சுக்கு அந்தக் கதைகளோடு ஒன்ற முடியும்னு எனக்கு நம்பிக்கை வரணும். அப்படி வந்தால் நான் உடனே இங்கே வந்திருவேன்.

மம்மூட்டி, நயன்தாராவை வெச்சு ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ பண்ணும்போது, இந்தக் கதையில ஆக்‌ஷன் இருக்கு, எமோஷன் இருக்கு, ஹியூமர் இருக்கு, தமிழ் ரசிகர்கள் ஈஸியா கனெக்ட் ஆவாங்க அப்படிங்கிற நம்பிக்கை வந்துச்சு. அதனாலதான் இந்தப் படத்தை தமிழ்லே பண்றதுக்காக வந்துட்டேன்.”

“இந்தப் படத்துல ரஜினி நடிக்க ஆசைப்பட்டதா பரவலா பேச்சு இருந்துச்சே.. ஏன் அது நடக்கல?”

“இதுமாதிரி நிறைய தகவல்களை கேள்விதான் பட்டேன். உண்மையை சொல்லணும்னா உங்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும். ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ மலையாளப் படம் பார்த்துட்டு ரஜினி சார் ரொம்பவே ஹேப்பி ஆயிட்டார். அவருக்கு படம் பிடிச்சிருந்தது. ஆனா, அதுக்குள்ள நியூஸ் வெளியே வந்து சோஷியல் மீடியால பரபரப்பாயிடுச்சி.

இதுக்கு இடையே தயாரிப்பாளருக்கும் ரஜினி சாருக்கும் என்ன பேச்சுவார்த்தை நடந்ததுன்னு எனக்கும் தெரியலை. உண்மையை சொல்லப்போனா நான் ரஜினி சாரை சந்திக்கக்கூட இல்லை. அதுக்குள்ளே எல்லாம் மாறிடுச்சி. அதுக்குப் பிறகு, இந்தக் கதையை அஜீத் சாருக்கும் நான் சொன்னதா புரளி கிளம்பிருச்சி. அப்படி எதுவுமே நடக்கலை. அஜீத் சாரை நான் இதுவரைக்கும் பார்க்கவும் இல்லை.”

“உங்க ஃபேவரைட் விஜய்யை இதுல ஏன் தேர்வு பண்ணல?”
“அவருக்கு இந்த கதை பொருந்தாது. அவரோட இமேஜுலேருந்து ரொம்பவே தள்ளி இருக்கும். அதனாலதான் அவரை அப்ரோச் பண்ணல. அஜீத்துக்குமே இந்தக் கதை பொருந்தாதுன்னுதான் சொல்வேன். ஒரு நடிகரோட தோற்றமும், அவருக்கு ரசிகர்களிடமிருக்கிற இமேஜும் ஒரு படத்தோட வெற்றிக்கு ரொம்பவும் துணை செய்யும்னு நான் நம்பறேன்.

ரஜினிக்குப் பிறகு என்னோட அடுத்த சாய்ஸ், அரவிந்த் சாமிதான். இப்போ அவர் பண்ணிட்டு இருக்கிற ரோல்களும் ரொம்ப மெச்சூர்டான கேரக்டர்கள்தான். அந்த மாதிரி ஒரு ரோல் இது. அதனால ஈஸியா அவர் இதுல ஃபிட் ஆனார். கதைப்படி ரஃப் அண்ட் டஃப் கேரக்டர் அவருக்கு. எதற்கெடுத்தாலும் கோபப்படுற ஒரு மனிதர். ஷார்ட் டெம்பர். ஆனா, மனசால ரொம்ப நல்லவர். மலையாளத்துல மம்மூட்டிக்கு இந்த ரோல் எப்படி நூறு சதவீதம் பொருத்தமா இருந்ததோ, அதேபோல அரவிந்த் சாமிக்கும் இந்த கேரக்டர் பொருந்தியிருக்கு”
“இது ஃபேமிலி ஜானர் கதைதானே?”

“இது ஃபேமிலி ஆடியன்சுக்கான படம். அதுக்காக குடும்பக் கதைன்னு சொல்லிட முடியாது. என்னோட எல்லா படங்களுமே ஃபேமிலி ஆடியன்ஸை டார்கெட் பண்ணின படங்கள்தான். அவர்களை டார்கெட் பண்ணும்போது, அது தானாகவே யூத் ஆடியன்ஸை ரீச் ஆயிடும். ஏ, பி அண்ட் சி ஏரியாவையும் கவர் பண்ணிடும். இதுதான் என்னோட தியரி.

இந்தப் படமும் ஃபேமிலி ஆடியன்ஸை மனசுல வச்சிட்டு பண்ணின படம்தான். ஆனா காதல்தான் படத்தோட ஹைலட். மனைவியை இழந்த ஒருத்தன், கணவன் இல்லாத ஒருத்தி. இவங்களுக்கு இடையிலான டிராவல்தான் படம். அதுக்குள்ள ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடியை கலந்து கொடுத்திருக்கேன்”“மலையாளத்துல நயன்தாரா நடிக்கும்போது, இந்தப் படத்தை வேற மொழிகள்ல எடுத்தாலும் நான்தான் நடிப்பேன்னு ஒப்பந்தம் போட்டதா செய்தி வந்ததே?”

“அப்படி எல்லாம் அவங்க சொல்லவே இல்லை. இணையதளங்கள்ல எப்படி இப்படியெல்லாம் கிளப்பிவிடுறாங்கன்னே தெரியல. என்னவோ நயன்தாராவே நேர்லே வந்து இவங்களுக்கு பேட்டி கொடுத்தது மாதிரி பில்டப் செய்யுறாங்க. நயன்தாராவை நன்கு அறிஞ்சவங்களுக்கு தெரியும். அவங்க இந்த மாதிரி கண்டிஷன்ஸ் எல்லாம் போட மாட்டாங்க.”

“நயன்தாரா - அமலா பால் யார் பெஸ்ட் பெர்பாமன்ஸ் கொடுத்திருக்காங்கன்னு நினைக்குறீங்க?”
“ஹீரோயின் கேரக்டரை மலையாளத்துல இருந்த மாதிரியே நான் தமிழ்ல கொடுக்கல. அப்படியே மாத்தி இருக்கேன். மலையாளத்துல அந்த கேரக்டர் சீரியஸா இருக்கும்.

தமிழ்ல ஜோவியலா மாத்தி இருக்கேன். காரணம், மலையாள ஆடியன்சுக்கு அந்த மாதிரி கதை அமைப்புல, அதுபோல கேரக்டரை வச்சு கதை சொல்லலாம். தமிழ்ல ஹீரோ கேரக்டரும் கோபமான ஆளு, பொண்ணும் சீரியஸ்னு காட்டிட முடியாது. அதனால திரைக்கதையில மாற்றம் பண்ணியிருக்கேன். மலையாளத்துல அந்த கேரக்டர்ல நயன்தாரா பெஸ்ட் நடிப்பை கொடுத்தாங்க. தமிழ்ல இந்த கேரக்டர்ல அமலா பால் பெஸ்ட் நடிப்பை கொடுத்திருக்காங்க.”

“இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ எப்பவோ முடிஞ்சும் ரிலீசுக்கு லேட் ஆயிடுச்சே?”
“நான் கதை எழுதத்தான் நேரம் எடுத்துக்குவேன். ஷூட்டிங்கை வேகமா முடிச்சிடுவேன். அது எல்லோருக்குமே தெரியும். இந்த ஷூட்டிங்கையும் நாங்க விரைவா முடிச்சிட்டோம்.

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ரிலீஸ் சீஸன் இருக்கு. மாஸ் ஹீரோ படம்னா தீபாவளிக்கு வரணும்னு பார்ப்பாங்க. அடுத்தடுத்து சில பெரிய படங்கள் ரிலீஸ் ஆயிடுச்சு. இடையில ஸ்டிரைக் கூட நடந்துச்சு. அதனால ரிலீசை நவம்பர்ல பிளான் பண்ணியிருக்கோம். கண்டிப்பா வந்துருவோம்.”

“உங்க படத்துல காமெடிக்குன்னு தனி குரூப் இருக்கும். அதிலும் வடிவேலு உங்களோட ஸ்பெஷல் ப்ராப்பர்ட்டி. இதுலே காமெடி எப்படி?”

“இதுலேயும் அப்படித்தான். ரசிகர்கள் அதை எதிர்பார்க்கிறாங்க. அதுக்காக திணிக்கிறது கிடையாது. கதையோடு அந்த மாதிரி அமையும்போது அதை பக்காவா பிளான் பண்ணி, திரைக்கதையில சேர்த்துருவேன். ‘பிரெண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’ பார்த்தவங்களுக்கு அது தெரியும்.

இதுல சூரி, ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் இருக்காங்க. காமெடியில கலக்கியிருக்காங்க. குழந்தைகள் மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா படத்தோட ஹைலைட்டா இருப்பாங்க. அவங்களோட கேரக்டர்களையும் ஹியூமர் கலந்து பண்ணியிருக்கேன். குழந்தைங்க பண்ற காமெடியும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும்.”

- ஜியா