ஜெமினியாக நடிக்கிறார் துல்கர்!



மம்முட்டியின் மகன் என்கிற அடையாளமே போதும். இருப்பினும் இரவு பகலாக உழைத்து தன்னுடைய தனித்துவத்தை நிலைநாட்ட கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.

ஐந்தே ஆண்டுகளில் இருபத்தைந்து படங்கள் முடித்த ஹீரோ யாரும் சமீபத்தில் இந்தியத் திரையுலகிலேயே இருந்திருக்க மாட்டார்கள். மலையாளத்தில்தான் அஸ்திவாரம் போட்டிருக்கிறார் என்றாலும், தமிழ் மற்றும் தெலுங்கிலும் துல்கரை தெரியாத சினிமா ரசிகர்கள் இருந்துவிட முடியாது.

மலையாளம் தவிர்த்து மற்ற மொழிகளில் மிகவும் செலக்ட்டிவ்வாக நடிப்பவர், லேட்டஸ்டாக ‘மகாநதி’ மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்தப் படம் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கைப்படம்.

இதில் காதல் மன்னன் ஜெமினிகணேசனாக நடிக்கிறார் துல்கர். தென்னிந்தியாவில் ரசிகைகளை அதிகம் கவர்ந்திருக்கும் துல்கருக்கு ஏற்ற வேடம்தான்.“மீட் பண்ணலாமா பாஸ்?” என்று வாட்ஸப் அனுப்பினால், “சென்னையில்தான் இருக்கேன். பிரசாத் லேபுக்கு வாங்க” என்று ரிப்ளை செய்தார்.
“எப்படியிருக்கீங்க?”

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன். பிஜாய் நம்பியாரோட ‘சோலோ’ என்னை ரொம்ப மகிழ்ச்சிப் படுத்தியிருக்கு. ஒரு நடிகனுக்கு, அவன் நடிச்ச படம் பாராட்டுதல்களை பெறுவதைவிட வேறென்ன பெரிய சந்தோஷம் இருக்கப் போவுது. பிஜாய் என்னை வெச்சு நாலு படம் எடுத்தவரு. அவரோட படங்களில் கதை எப்பவுமே வலுவா இருக்கும். பக்காவா பிளான் பண்ணி திட்டமிட்டபடியே படத்தை எடுத்துடுவாரு. இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நாலு வித்தியாசமான கேரக்டர்களில் நடிச்சிருக்கேன்.

படம் பார்த்தவங்க, எப்படி ஒவ்வொரு கேரக்டருக்கும் இவ்வளவு டிஃபரன்ஸ் காட்டியிருக்கீங்கன்னு கேட்குறாங்க. படம் பார்க்குறப்போ எனக்கும் ஆச்சரியமாதான் இருக்கு. நடிக்கிறப்போ, இவ்வளவு நல்லா ஸ்க்ரீனில் எடுபடும்னு நானே நினைக்கலை. இந்தப் படம் உலகம் முழுக்க நிறைய சென்டர்களில் ரிலீஸ் ஆகி எனக்கு பெரிய பேரை கொடுத்திருக்கு.”
“கேரக்டருக்காக ரொம்ப ஹோம் வொர்க் பண்றீங்களோ?”

“அப்படியெல்லாம் இல்லை. எந்தப் படத்துலேயாவது ரொம்ப அலட்டி இருக்கேனா? கேரக்டருக்கு எது தேவையோ, டைரக்டர் என்ன கேட்குறாரோ, அதைத்தான் கொடுக்கறேன்.”“மலையாளத்துலே டஃப் ஃபைட் போலிருக்கே?”

“அப்படி நான் நினைக்கலை. இத்தனை இளம் ஹீரோக்கள் தொடர்ந்து ஹிட் கொடுக்குறாங்கன்னா, அந்த இண்டஸ்ட்ரி ஆரோக்கியமா இருக்குன்னு சந்தோஷம்தான் படுறேன். என்னோட ஒவ்வொரு படத்துலேயும் நான் வளர்ந்துக்கிட்டு வர்றேன். யாரோடும் எனக்கு போட்டி கிடையாது.”
“மலையாள இளம் ஹீரோக்களில் நீங்கதான் மற்ற மொழிப்படங்களில் நடிக்க ஆர்வமா இருக்கீங்க...”

“வாய்ப்பு வந்தா நடிக்கறேன், அவ்வளவுதான். மத்தபடி தமிழில், தெலுங்கில், இந்தியில் எல்லாம் இத்தனை படமாவது பண்ணியே ஆகணும்னு பிளான் பண்ணி எதுவும் பண்றதில்லை.”“உங்களுக்கு ரசிகைகள்தான் அதிகம் போலிருக்கே?”

“எனக்கு ரசிகர்கள் அதிகமா, ரசிகைகள் அதிகமான்னு தெரியலை. நீங்க சொன்னா சரியாதான்ணே இருக்கும்.” (வாய்விட்டு சிரிக்கிறார்)
“அப்பாவோடு எப்போ இணைஞ்சு நடிப்பீங்க?”

“தெரியலை. அவர் செலக்ட் பண்ணி நடிக்கிற படங்கள் வேறமாதிரி. அதுலே எனக்கு இடமில்லை. நான் எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்க பாடுபட்டுக்கிட்டிருக்கேன். அப்பாவோடு சேர்ந்து நடிச்சா, அவர் புகழில் இளைப்பாறுவதா ஒரு விமர்சனம் வந்துடுமோன்னுகூட பயமா இருக்கு. அவரோட சேர்ந்து பண்ணா, பெரிய எதிர்பார்ப்பு உருவாகலாம்.

ஆனா, ஃபேமிலி போட்டோவில் வலுக்கட்டாயமா வந்து நிக்கிற மாதிரிதான் அது இருக்கும். எதுவுமே இயல்பா நடக்கணும். நியூஸ் வேல்யூ, மார்க்கெட்டிங் வேல்யூவுக்காக மக்களை ஏமாத்தக்கூடாது என்பதில் அப்பா எப்பவுமே உறுதியா இருப்பாரு. எனக்கும் அதேதான். மம்முட்டி - துல்கர் இணைஞ்சு வேலை பார்க்கிறமாதிரி வாய்ப்பு வந்தா எங்களைவிட அதிகமா வேற யாரு சந்தோஷப்பட முடியும்?”

“ஒரே மாதிரி கேரக்டர் நீங்க செய்யுறமாதிரி ஒரு விமர்சனம்...?”
“முதல் படம் பண்ணினப்போ வந்த விமர்சனங்கள்தான் என்னை சோர்வடைய வெச்சுது. அதுக்கப்புறம் ஓடிக்கிட்டே இருக்கேன். திரும்பிப் பார்க்குறதே இல்லை. அப்படிப் பார்த்தா இருபத்தஞ்சு படத்தை அஞ்சு வருஷத்துலே நான் பண்ணியிருக்க முடியுமா? அதே நேரம் எனக்கு உபயோகமான விமர்சனம் ஏதாவது வந்தா, அது ஆட்டோமேடிக்காகவே எனக்கு வந்து சேர்ந்துடுது.

அதில் என்னை திருத்திக்கறேன். சமீபத்தில் நான் நடிச்ச ‘காம்ரேட் இன் அமெரிக்கா’, ‘பரவா’, ‘சோலோ’ மாதிரி படங்களுக்கு ரொம்ப நல்ல விமர்சனங்கள் கிடைச்சுக்கிட்டு வருது.”“டைரக்‌ஷன்?”

“எல்லா நடிகர்களுக்குமே இந்த ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனா உடனே செய்யுற ஐடியா எதுவுமில்லை.”“திடீர்னு ஜெமினி கணேசனா நடிச்சி பரபரப்பை ஏற்படுத்துறீங்களே?”

“தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மூணு மொழிகளில் ‘மகாநதி’ வெளியாகப் போகுது. சாவித்திரி அம்மா வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி சார் வேடத்தில் நானும் நடிக்கறோம். சினிமாவில் அவர் எப்படி நடிச்சாரோ, அந்த மேனரிஸம் ஸ்க்ரீனில் வந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா நடிக்கிறேன். ஆஃப் ஸ்க்ரீனில் அவர் எப்படியெல்லாம் நடந்துப்பாரு, என்ன மாதிரி பேசுவாருன்னு அவங்க குடும்பத்தினரை சந்திச்சி பேசி டிரைனிங் எடுத்துக்கிட்டேன்.

காதல் மன்னனா, ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவரா கோலோச்சிய மகா ஆளுமை அவர். ஜெமினி வேடத்தில் என்னை பார்க்கிற ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கணும்னு ரொம்ப மெனக்கெட்டு உழைச்சிக்கிட்டு இருக்கேன். இயக்குநர் நாக் அஸ்வின், இந்தப் படத்துக்காக நிறைய ரிசர்ச் பண்ணியிருக்காரு. இந்தப் படம் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும்னு நம்புறேன்.”
“அடுத்து?”

“தமிழில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ‘கர்வான்’, மலையாளத்துலே ‘ஒரு பயங்கர காமுகன்’னு பயங்கர டைட்டிலில் ஒரு படம்னு செம பிஸி.”