மார்க்கெட்டில் புதுசு!அர்த்தனா பினு

கேரளா கொடுத்த இன்னொரு கொடை. ‘தொண்டன்’ படம் மூலமாக சமுத்திரக்கனிக்கு தங்கையாக தமிழுக்கு வந்தவர் ‘செம’ மூலம் செமத்தியான இடத்தைப் பிடிக்கிறார். மாஸ் கம்யூனிகேஷன் படித்த அர்த்தனாவுக்கு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். ஆகவேண்டும் என்று விருப்பமாம். ஐ.ஏ.எஸ். ஆகும்வரை டைம்பாஸுக்கு சினிமாவில் நடிப்பார் போலிருக்கிறது.

இவரது தந்தை விஜயகுமாரும் மலையாளத்தில் பெயர் சொல்லக்கூடிய நடிகர்தான் என்றாலும், சிறுவயதிலேயே தன்னைப் பிரிந்துவிட்ட தந்தையின் பெயரை எங்குமே உச்சரிப்பதில்லை. தன்னை பாடுபட்டு வளர்த்தெடுத்த தாய் பினுவின் பெயரைத்தான் தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார்.


அபர்ணா பாலமுரளி

கடவுளின் தேசமான கேரளாவின் இளங்கிளி. சொந்த ஊர் திரிச்சூர். மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ போன்ற படங்களில் முத்திரை பதித்துவிட்டு, ‘8 தோட்டாக்கள்’ மூலம் தமிழ் உள்ளங்களில் பாய்ந்த இளமைத்தோட்டா. 22 வயசுதான் ஆகிறது. குரல்வளம் குயிலைத் தோற்கடிக்கக்கூடியதாக இருப்பதால், இவர் நடிக்கும் படங்களில் இவரையே பின்னணி பாடவைக்கிறார்கள் இயக்குநர்கள். அடக்க ஒடுக்கமான இவரது தோற்றம், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.