துப்பறிவாளன்



கம்பீரன்!

காவல்துறைக்கே சவால்விடும் வழக்குகளின் பின்னணியை துப்பறிந்து கொடுக்கும் இளைஞனின் கதை. திட்டமிட்டு செய்யப்படும் கொலைகள்,  விபத்துகள் என்று விளம்பரம் ஆகின்றன. அவற்றைப் புலனாய்ந்து வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் நாயகன்.கதைக்குப் பொருத்தமான உடல்வாகு  விஷாலுக்கு. ஒரு ஹைடெக் டிடெக்டிவ்  நாயகனுக்கு, கணியன்   பூங்குன்றன் என்கிற பெயர், வித்தியாசமாக கவனம் ஈர்க்கிறது.

“நீ பிக்பாக்கெட்டாவே இருந்திருக்கலாம்” என்றபடி அனு இமானுவேல் மரண நேரத்தில் கதறும்போது விஷாலுக்குள்  இருக்கும் நடிகன் வெளியே  எட்டிப்பார்க்கிறான். விறுவிறு நடை, சுறுசுறு சண்டை என உழைப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார். “நீ பாக்கறே, நான் தேடுறேன்” உள்ளிட்ட  வசனங்களுக்கு கைதட்டல்களை அள்ளுகிறார்.

பிக்பாக்கெட் மல்லிகா கதாபாத்திரத்தில் வரும் அனு இமானுவேல், உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறார். “இப்பவும் நான் பிக்பாக்கெட்தான்  டிடெக்டிவ்” என்று சொல்லி, உயிர்விடும்போது பரிதாபத்தையும் பாராட்டையும் பெறுகிறார்.

துப்பறிவாளனுக்கு துணையாக வரும் பிரசன்னா, இறுதிக்காட்சியில் ஹீரோயிசம் காட்டி, சபாஷ் வாங்குகிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத வில்லனாக  அளவான நடிப்பால் மிளிர்கிறார் வினய். சிறுவனிடம் ‘ஸாரி’ சொல்லும் காட்சியில் வில்லனுக்கும் விசில் பறக்கிறது. பாக்யராஜ், யாருமே எதிர்பாராத  சர்ப்ரைஸ்.

கவர்ச்சி வில்லியாக கலக்குகிறார் ஆண்ட்ரியா. வின்சென்ட் அசோகன், ஜான் விஜய்,   ஷாஜி, ‘ஆடுகளம்’ நரேன், தலைவாசல் விஜய்,  சிம்ரன், ஜெயப்பிரகாஷ், அபிஷேக், ரவி மரியா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் தங்களது பணியை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

அரோல் கரோலியின்  இசையில் வயலின் விளையாடுகிறது. கார்த்திக் வெங்கட்ராமின் கேமரா கோணங்கள் நேர்த்தியாக இருக்கின்றன. பிச்சாவரம்  காட்சிகள் ஹைலைட். அருண்குமாரின் படத்தொகுப்பு விறுவிறுப்புக்கு உதவுகிறது. தினேஷ் காசியின் சண்டைக்காட்சிகள் அதிரடி. ஒரு  நூலகத்தைப்போலவே விஷாலின் வீட்டை வடிவமைத்த கலை  இயக்குநர் அமரன் பாராட்டுக்குரியவர்.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரம்  மற்றும்  அதன் படைப்பாளர்  சர் ஆர்தர்கானன் டாயிலுக்கு நன்றி தெரிவித்து, தேர்ந்த படைப்பாளியாக  ஜொலிக்கிறார் மிஷ்கின். லைட்னிங் பற்றி பாடம் நடத்துவது, தன்னைத்தேடிவரும் நபர்களைப்பற்றிய ஜாதகத்தை விஷால் புட்டுப்புட்டு வைப்பது என  சில ‘ஓவர்’களும் படத்தில் உண்டு. மற்றபடி, திரைக்கதையாலும் தொழில்நுட்ப உருவாக்கத்தாலும் ‘துப்பறிவாளன்’ கம்பீரமான அறிவாளன்.