வெண்ணிறஆடை மூர்த்தி ரீ-என்ட்ரி ஆகிறார்!



கட்டடத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் மு.ரா.சத்யா ஹீரோவாக நடித்து இயக்குநராக களமிறங்கும் படம் ‘என்னோடு நீ இருந்தால்’.‘‘சினிமா தொழிலுக்கு நான் புதுசுதான். என்னுடைய அப்பா மத்திய அரசில் வேலை பார்த்தவர்.

ஆனால் அவர் அடிப்படையில் கூத்து வாத்தியார்.  அந்த வகையில் சினிமா ரத்தம் என் உடம்பில் ஓடிக்கிட்டுத்தான் இருக்கு. அதன் காரணமாக எனக்கு கலை மீது ஆர்வம் ஏற்பட்டதில்  ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்று ரொம்ப நாளைக்கு முன்பே தீர்மானித்தேன். ஆனால் அப்போது சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை.  ஓரளவுக்கு என்னை சரி செய்துகொண்டு சினிமாவில் இறங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதன்படி இப்போது நானும் சரி, குடும்பமும்  சரி  நல்ல பொசிஷனில் இருக்கிறோம். மகிழ்ச்சி’’ உற்சாகமாய் பேசுகிறார் மு.ரா.சத்யா.

“எப்படி வந்திருக்கு உங்கள் முதல் படைப்பு?”

“டைட்டில்தான் லவ் டைட்டில். மற்றபடி காதலைத் தாண்டி நிறைய விஷயங்கள் படத்துல இருக்கும். அதை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க  வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளோம். அதே சமயம் இந்தப் படத்தில் வரும் கதைக்கரு எல்லாரும்  பேசும் விதத்தில் இருக்கும். இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருத்தரும் தங்களை படத்தோட கனெக்ட் பண்ணிக்கொள்வார்கள். முழுக்க முழுக்க  கதை கொடுத்த நம்பிக்கையால்தான் இந்தப் படத்தை துணிச்சலாக ஆரம்பித்தேன்.

எவ்வளவு பெரிய ஸ்டார் படமாக இருந்தாலும் கதையின் கருதான் முக்கியம். அப்படி இல்லாத பட்சத்தில் அந்தப் படத்தை செலவு செய்து  தயாரித்தால் கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி காணாமல் போய்விடும். அந்த வகையில் வித்தியாசமான கோணத்தில் எல்லாரும் சம்பந்தப்பட்ட  ஒரு விஷயத்தை இதில் சொல்லியிருக்கிறேன்.

கருவுக்காக பின்னப்பட்டதுதான் திரைக்கதை. அதை காதல், காமெடி, கமர்ஷியல் கலந்து சொல்லியிருக்கிறேன். ஆரம்பம் முதல் முடிவு வரை  சஸ்பென்ஸ் மெயின்டெயின் ஆகும். அதுக்காக இது சஸ்பென்ஸ் படமாக இருக்குமா என்று நினைக்க வேண்டாம். ப்யூர் லவ் படம். நிச்சயம்  ரசிகர்களிடம் பாதிப்பு உண்டாக்கும். சமீபத்தில்தான் சென்சார் முடிந்து ‘யு’ சர்டிபிக்கேட் கிடைத்தது. அந்த உற்சாகத்தில் ரிலீஸ் வேலை ஜரூராக  நடக்கிறது.”

“நீங்களே ஹீரோவா நடிக்கலாமா?”

“நான் ஹீரோவா நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. நான் இந்தப் படத்துக்கு ஹீரோவானது திடீர் மாப்பிள்ளை மாதிரிதான். கதை  ரெடியானதும் மார்க்கெட்ல இருக்கிற சில ஹீரோக்களை சந்தித்து சொன்னேன். ஒருவர் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றார். இன்னொரு  நடிகரிடம் ரேட், டேட் பிரச்சனை வந்தது. மூன்றாவதாக வேறு ஒரு நடிகரிடம் போனேன்.

அவர் என் படத்தோட பட்ஜெட் என்னவோ அதையே சம்பளமாகக் கேட்டார். என்னால் அவ்வளவு சம்பளம் கொடுத்து படத்தை எடுக்க முடியாது  என்பதாலும், என் சக்திக்கு என்ன தகுதியோ அதைத்தான் நான் பண்ணமுடியும் என்பதாலும் அந்த முயற்சியும் நடக்கலை. கடைசியாகக்  கூத்துப்பட்டறைக்கு போனேன். அங்கு நாங்கள் புதியவர்கள் என்பதால் எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.

இதற்கிடையே படப்பிடிப்பு தேதியும்  நெருங்கிவிட்டது. படப்பிடிப்புக்கு சில நாட்களே இருக்கும்போதுதான் என் மனைவியும் இந்தப் படத்தின்  தயாரிப்பாளருமான யசோதா, ‘ஏன் நீங்கள் ஹீரோவாக நடிக்கக்கூடாது’ என்று என்னை உற்சாகப்படுத்தி நடிக்கவைத்தார்.”
“மானசா நாயர்?”

“கதைப்படி நாயகி பணக்கார குடும்பப் பெண். அந்தக் கேரக்டருக்கு மானசா பொருத்தமாக இருந்தார். ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தார். ஜோதிகா  மாதிரி பெர்பாமன்ஸ் பண்ணுவதற்கு ஸ்கோப் உள்ள ரோல்.ரொம்ப அருமையாக பண்ணியிருக்காங்க. தினமும் தமிழ் கோச் கொடுத்ததால் மொழிப்  பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.”

“ரொம்ப நாளைக்குப் பிறகு வெண்ணிற ஆடை மூர்த்தியை கொண்டு வந்திருக்கீங்க?”

“படத்துல ஐயர் மாமான்னு ஒரு கேரக்டர். அந்தக் கேரக்டர் யூத் பசங்களுடன் சேர்ந்து ஜாலியாக அரட்டை அடிக்கும் கேரக்டர். அந்தக் கேரக்டருக்கு  வெண்ணிற ஆடை மூர்த்தி சார்தான் எனக்கு சரியான சாய்ஸாக தெரிந்தார்.

சமீப காலங்களில் எங்கள் படம்தான் அவர் ஓகே பண்ணிய படமாக  இருக்கும். கதை அவருக்குப் பிடித்திருந்ததால் பண்றேன் என்றார். அவருக்கு பிரசன்ஸ் ஆப் மைண்ட் அதிகம். சின்ன டயலாக் என்றாலும் அதுக்காக  அதிகம் மெனக்கெடுவார். இந்த வயதிலும் சிரமம் பார்க்காமல் புரண்டு புரண்டு நடித்திருக்கிறார்.

அவருடைய ஸ்பெஷலே டபுள் மீனிங் டயலாக்தான். அது இந்தப் படத்திலும் பிரமாதமா ஒர்க்கவுட்டாகியிருக்கு. டயலாக்கை வில்லங்கமா ஆரம்பித்து  முடிக்கும் போது பாசிடிவ்வா முடிப்பார். அப்படி இந்தப் படத்தில் நிறைய காட்சிகள் இருக்கு.

ஒரு சீனில், ‘என்னால் ஒய்ப் இல்லாததால் ஒண்ணும் முடியல’ என்று சொல்லிவிட்டு ஒரு பிரேக் விட்டு, ‘இருந்திருந்தால் கை, கால் பிடிச்சிவிடுவா’  என்பார். இன்னொரு காட்சியில் ‘இந்த பசங்க, ஞாயிற்றுக் கிழமை வந்தால் போதும், அடிக்கிற தண்ணியிலிருந்து குடிக்கிற தண்ணி வரை காலி  பண்ணிடுவாங்க’ என்பார். சென்சார் போர்டுல இருந்ததால் எந்த இடத்தில் கட் பண்ணுவாங்க என்பதை தெரிந்திருந்ததால் அதுக்கு ஏற்ற மாதிரி  பேசியிருக்கிறார். அவரிடம் இந்தப் படத்தில்  நிறையக் கற்றுக்கொண்டேன்.”

“ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம் கஷ்டமாக தெரியவில்லையா?”

“ஒரே சமயத்தில் நடிப்பு, டைரக்‌ஷன் என்பது கஷ்டமான வேலைதான். இந்தப் படத்தில் நான் டென்ஷன் இல்லாமல் வேலை பார்க்கக் காரணம்  இந்தக் கதையும், ஹீரோ கேரக்டரும் என் நெஞ்சுக்குள் பல நாட்களாக சுமந்ததால் என்னால் இயல்பாக பண்ண முடிந்தது.”

“டெக்னீஷியன்ஸ் பற்றி?”

இசை கே.கே. சந்திரபோஸின் மைத்துனர்.  மொத்தம் ஆறு பாடல்கள். நானே எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஒளிப்பதிவு நாக சரவணன்.  எடிட்டர் ராஜ்கீர்த்தி.”“உங்களைப் போன்ற சின்ன படங்கள் எடுப்பவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்று புலம்பல் சத்தம் பரவலாக இருக்கே?”
“உண்மைதான். எங்களுக்கு தியேட்டர் கிடைப்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

ஸ்டார் படங்களுக்குத்தான் தியேட்டர் என்கிற நிலைமை இருக்கு. அப்படியான பல ஸ்டார் படங்கள் சமீபத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது  என்பதுதான் உண்மை. ஆனால், ஓரளவே பாப்புலர் அடைந்த நடிகர்களை வைத்து இமாலய வெற்றி அடைந்த படம் ‘பாகுபலி’.

ஹாலிவுட்ல ஜேம்ஸ்  காமரூன் ‘டைட்டானிக்’ எடுக்கும் போது  லியனார்டோ டிகாப்ரியோ புதுமுகம்தான். ‘அவதார்’ படமும் அப்படியே. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ  என்ற இந்த மாயையை உடைக்கணும். எழுபது எண்பது கோடிகளில் தயாராகி ரிலீஸான படங்கள் இருபது, முப்பது கோடிகள் நஷ்டத்தை  சந்தித்திருக்கிறது.

செங்கல்பட்டு ஏரியாவை பத்து கோடி கொடுத்து வாங்கினால் ஆறு கோடிதான் கிடைத்தது. நான்கு கோடி  நஷ்டம் என்கிறார்கள். தமிழ்நாடு முழுதும்  எண்பது கோடி கொடுத்து திரையிட்டால் முப்பது கோடி நஷ்டம் என்கிறார்கள்.

தியேட்டர்காரர் ஐம்பது லட்சம் கொடுத்து வாங்கி அந்தத்  தொகையை இரண்டு, மூணு நாளில் எடுப்பதற்குள் அவர்களுக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. கடைசியில் பத்து லட்சம் நஷ்டம் என்கிறார்கள்.என்னை மாதிரி புதுமுகங்கள் படத்துக்கு தியேட்டர் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.

ஆனால் பிரச்சனை எங்கு என்றால் கூட்டத்தோடு கூட்டமாக ரிலீஸாகும்போது என்னை மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்கள் காணாமல்  போய்விடும். இப்போது வாரத்துக்கு பத்து படம் ரிலீஸாகிறது. தயாரிப்பாளர் சங்கம் வாரத்துக்கு இவ்வளவு படம்தான் ரிலீஸ் பண்ண வேண்டும்  என்று ஒரு வரைமுறை வைக்க வேண்டும்.

மொத்த படமும் ஒரே சமயத்தில் குவிந்தால் தியேட்டர் கிடைக்காது. அப்புறம் யாரையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. சில படங்களுக்கு  நல்ல டாக் வரும் சமயத்தில் படத்தை தியேட்டரைவிட்டு வெளியே எடுத்துவிடுகிறார்கள்.

இந்தச் சூழலும் மாறணும். என்னைப் போன்ற புதுமுகங்கள்  சூழ்நிலை பார்த்து ரிலீஸ் பண்ணினால் தப்பிக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் பெரிய படங்களோடு மோதக்கூடாது என்பது என் கருத்து.”

- சுரேஷ்ராஜா