காதல் ‘காதல்’ கந்தாஸ்



டைட்டில்ஸ் டாக் 34

‘காதல்’ என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை நாம் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். ‘காதல்’ என்றால் அன்பு என்று பொருள். ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முதன்முதலாக அவன் அம்மா மீதுதான் ‘காதல்’ பிறக்கிறது. எனக்கு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லாருக்கும் இது பொருந்தும்.அம்மா சொல்லித்தான் இதுதான் பிள்ளையார், இதுதான் இயேசு, இதுதான் அல்லா என்று தெரியும்.

அவ்வளவு ஏன்? இவர்தான் உன் அப்பா என்று அம்மா சொல்லித்தான் குழந்தைக்கு தன்னுடைய தந்தை யார் என்று தெரியும். அந்த வகையில் பால்ய வயதில் இருப்பவர்களுக்கு அம்மா மீதுதான் முதன் முதலாக காதல் பிறக்கிறது.

ஸ்கூல் போகும் போது நமக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியை நம் மீது அபரிதமான கரிசனம், அன்பு காட்டும் போது நம்மையும் அறியாமல் டீச்சர் மீது ஒருவிதமான பற்றுதல் வரும். அதையும் ஒருவிதமான காதல் என்று வகைப்படுத்தலாம். சிலருக்கு ஸ்கூல் படிக்கும்போது காதல் வரும். அதை இனக் கவர்ச்சி அல்லது பருவக் கோளாறு என்று சொல்லலாமே தவிர காதல் என்று சொல்லமுடியாது.

கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு வரும் காதல்தான் நம்மை பயங்கரமா தொந்தரவு பண்ணும். டைமுக்கு சாப்பிட பிடிக்காது, தூக்கம் சரியா வராது, யாரிடமும் முகம் கொடுத்து பேசப் பிடிக்காது. பருவக் காதலை விட இந்தக் காதல்தான் வெரி வெரி டேஞ்சர்.

ஏன்னா, சிலர் வேலைக்குப் போவதை நிறுத்திவிடுவார்கள். நல்லா படிக்கிற பசங்க கவனம் சிதறி படிப்புல ஜீரோ வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் வாழ்க்கையையே முடித்துக் கொள்ள தயங்கமாட்டார்கள். இப்படி எப்போதும் ஒருவித விரக்தி நிலையில் காணப்படுவார்கள்.

இது ஆண், பெண் இருவருக்கும் வரும்.இவ்வளவு படிகளைத் தாண்டி வரும் காதல் தான் ஒரிஜினல் காதல். பொதுவா பெண்கள் மனசு இளகிய மனசு. ஒரு முறை நாம் லவ் சொன்னால் விழமாட்டார்கள்.

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்கிற மாதிரி திரும்பத் திரும்ப காதலைச் சொல்லும்போது ஒரு நாள் காதலில் விழுந்துவிடுவார்கள்என்னைப் பொறுத்தவரை ஒரு ஆண் மகன் என்பவன் ஒரு பெண்ணை காதலிப்பதற்கு முன் அவளை வைத்துக் காப்பாற்றக் கூடிய தகுதி இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு காதலிக்க வேண்டும்.

இல்லையெனில் வாழ்க்கையில் பிரச்சனைகள், அவமானங்களைச் சந்திக்க நேரிடும். சமீபத்தில் நான் இயக்கிய கன்னடப் படத்தின் கருவும் அதுதான்.
காதலுக்குத் தப்பியவர்கள் என்று யாரும் இல்லை. பரம பிரம்மாச்சாரியாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் ஒரு காதல் இருக்கும். அப்படி இருக்கும் போது கந்தாஸ் மட்டும் காதலுக்கு தப்பமுடியுமா?

அப்போது எனக்கு அவ்வளவாக விவரம் தெரியாது. அந்த சமயத்தில் ஒரு பெண்ணை காதலித்தேன். அந்தப் பெண்ணும் என்னைக் காதலித்தார். ஸ்கூலில் ஆரம்பித்து கல்லூரி வரை அந்தக் காதல் தொடர்ந்தது. ஆனால் எனக்கு நிலையான வேலை, வருமானம் இல்லாததால் அந்தக் காதலை என்னால் கடைசிவரை தொடரமுடியவில்லை.

என் முன்னாள் காதலி இப்போது நல்ல இடத்தில் செட்டிலாகிவிட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய அந்த முதல் காதல் தோற்றதுக்கு காரணம் நான் மட்டுமே. ஏன்னா அந்த சமயத்தில் காதலை தொடர முடியாத நிலையில் இருந்ததால் காதலை இழக்க நேர்ந்தது.

என் காதலி மீது எந்தத் தவறும் இல்லை. ஏன்னா, சில பேர் டைம் பாஸுக்காக காதலிப்பார்கள். பசையுள்ள பார்ட்டி கிடைத்தால் டாட்டா காண்பித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். ஆனால் என் காதலி நம்பிக்கைக்குரியவர்.

சென்னைக்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்ததால் காதலிக்கும் எண்ணத்தை சுத்தமா மூட்டைகட்டி வைத்துவிட்டேன். இவ்வளவுக்கும் அந்த சமயத்தில் ஏராளமான பெண்கள் எனக்கு அறிமுகமாயிருந்தார்கள். ஆனால் இந்த டைம் நான் காதலிக்கக் கூடாது என்று உஷாராக இருந்தேன்.

சென்னையில் எனக்கு இருந்த ஒரே உறவு என்னுடைய தோழி பொன் லக்ஷ்மி. சாப்ட்வேர் என்ஜினியராக இருக்கிறார். பனிரெண்டு வருட நட்பு அது. இதற்கிடையே நிறைய காதல் வந்தது. ஆனால் எதையும் ஏற்கவில்லை. ஜெயிக்கிற வரை காதலிக்கக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன். குறுகிய காலத்தில் பெரிய ஸ்டார்ஸ் படம் பண்ணேன். கன்னடத்தில் ஒரு படத்தை டைரக்ட் பண்ணினேன்.

அந்த சமயத்தில்தான் என் தோழி பொன் லக்ஷ்மி கல்யாணத்தைப் பற்றி பேச்சு எடுத்தார். கல்யாணமே வேண்டாம் என்று இருந்த என்னை பக்குவப்படுத்தினார். அப்படித்தான் என் தோழியே காதலியாக மாறினார்.

நாங்கள் காதலர்களாக மாறினதும் பீச், பார்க் என்று ஊர் சுற்றவில்லை. முதலில் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்குப் பிறகுதான் காதலிக்கவே ஆரம்பித்தோம். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு என்று இறைவன் சந்தோஷமான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறான்.

இப்போது என் மனைவியை நான் தோழியாகப் பார்க்கிறேன். என் மனைவியும் என்னை தோழனாகப் பார்க்கிறார். அப்படி இருப்பதால் எங்களுக்குள் எந்தவித ஈகோ, கருத்து வேறுபாடு இல்லாமல் வாழ முடிகிறது. குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருக்கும் ஃபிப்டி-ஃபிப்டி உரிமை இருக்கு.

இருவருக்கும் சம அந்தஸ்து கொடுக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் கணவன் ஒஸ்தி மனைவி மட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.சினிமாவில் ஜெயிக்க வருகிறவர்களுக்கு நான் சொல்லும் சின்ன அட்வைஸ் என்னன்னா, பொண்ணு, தண்ணி இந்த இரண்டு விஷயத்தை அவாய்ட் பண்ணிவிட்டால் லட்சியத்தை தொட்டு விட முடியும்.

மை டியர் பாய்ஸ், பெண்கள் மனசு பூ மாதிரி. அவர்கள் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குவார்கள். உங்களுக்கு ஒருவர் மீது காதல் ஏற்படும்போது அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் சக்தி இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அலசி ஆராயுங்கள். அப்படி உங்களை நீங்களே கேள்வி கேட்கும் போதுதான் வாழ்க்கை இனிக்கும். இல்லையென்றால் இருவருடைய வாழ்க்கையும் பாழாகிவிடும். மற்றபடி காதல் இனிது.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)