வசூல்மழையில் கொழிக்கும் விமர்சன வியாபாரம்!



தமிழ் சினிமாவில் பணம் பார்க்கக்கூடிய புதிய தொழில் ஒன்று சமீபமாக உருவெடுத்திருக்கிறது. யூட்யூபில் ஓர் அக்கவுன்ட் இருந்தால் போதும். செமையாக துட்டு பார்க்கலாம். சினிமாக்காரர்களே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்த வியாபாரம் செழித்து வளருகிறது. நேர்மையான முறையில் எது நடந்தாலும் மகிழ்ச்சி அடையலாம்.

ஆனால்-‘இன்டர்நெட்டில் விமர்சனம் செய்கிறோம்’ என்கிற பெயரில் சினிமாக்காரர்களிடம் கட்டாய வழிப்பறி நடப்பதாக சினிமாத்துறையினர் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘கவனித்தால்’ எப்படிப்பட்ட மொக்கை படத்தையும் ஆஹா ஓஹோவென்று விமர்சிப்பது, ‘கவனிக்கத் தவறிவிட்டால்’ போட்டுத் தாக்குவது என்று உருவெடுத்திருக்கும் இந்த விபரீத கலாச்சாரம், ஏற்கனவே திருட்டு டிவிடி பிரச்னையில் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய தலைவலி. உள்ளூரில் இந்த இணைய விமர்சனங்களால் பெரிய பாதிப்பு இல்லை என்று சொன்னாலும்கூட, வெளிநாடுகளில் கணிசமாக வசூல் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

ஒரு காலத்தில் விமர்சனம் என்பது, சினிமாவைப் பற்றி நன்கு அறிந்தவர்களால் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. முழுப்படத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்தபிறகே படத்தின் நிறைகுறைகளை எடை போடுவார்கள். நிறைகளை பாராட்டுவதும், குறைகளை மென்மையாக சுட்டிக் காட்டுவதுமே ஒரு நல்ல விமர்சகனுக்கான அடையாளம்.

ஒரு சினிமாப் படத்தில் குறைகள் அதிகமாக பார்வையாளனுக்கு தென்பட்டாலும், அதை படைத்த படைப்பாளிக்கு அது அவனது குழந்தைதானே? எனவேதான் முன்பெல்லாம் விமர்சகர்கள், விமர்சிக்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளைக் கையாண்டார்கள்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக யார் வேண்டுமானாலும் விமர்சகர்களாகி விடலாம் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு படம் ரிலீஸாகி முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே, முதல் பத்து நிமிடத்தை பார்த்துவிட்டு ‘மொக்கை’ என்கிற ஒரு வரி விமர்சனத்தை வாட்ஸப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ போட்டுவிடுகிறார்கள். யூட்யூப் விமர்சகர்களோ இன்னும் மோசம். தியேட்டருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு லைவ் வீடியோவில் ‘தியேட்டர் பக்கம் வந்துடாதீங்க’ என்று அலறத் தொடங்கி விட்டார்கள்.

“முன்னாடியெல்லாம் தியேட்டர் பாத்ரூமில் கரியாலே எவனாவது எதையாவது கிறுக்கிட்டு போவான். இப்போ அதுக்கு பதிலா இன்டர்நெட்டுலே எழுதுறான்” என்று கோபமாக நம்மிடம் பொங்குகிறார் சென்னை புறநகர் தியேட்டர் அதிபர் ஒருவர். அவருடைய கோபம் கொஞ்சம் மிகையாகத் தென்பட்டாலும், அதில் தென்படும் ஆதங்கம் நியாயமானதுதான்.

இன்டர்நெட்டில் ப்ளாக் ஆரம்பித்து சினிமா தளம் என்று விளம்பரப்படுத்திக் கொள்பவர்களும், யூட்யூப் சேனல் நடத்துபவர்களும் பி.ஆர்.ஓ.க்களை மிரட்டி சினிமாத்துறையையே அச்சுறுத்தும் போக்கு அதிகமாகிக்கொண்டே செல்வது கவலையளிக்கும் விஷயம்தான்.

ஒரு பத்துக்கு பத்து அறை இருந்தால் போதும். ப்ளூ மேட் ஸ்டுடியோ அமைத்து கால் மேல் கால் போட்டு ‘படம் குப்பை, ஹீரோ சப்பை’ என்று விமர்சிக்கிற அரைவேக்காடுகள் இந்த சூழலில் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். தமிழ் சினிமாவில் பழம் தின்று கொட்டை
போட்டவர்களிடமெல்லாம் மைக்கை நீட்டி “நீங்க எத்தனை படம் பண்ணியிருக்கீங்க?” என்று பிரஸ்மீட்களில் பேட்டி எடுக்கிறார்கள்.

பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேகக் காட்சிகளில் படம் பார்த்துக் கொண்டே ட்விட்டரில் ‘தேறாது’ என்று படம் குறித்து நெகட்டிவ்வான மனப்பான்மையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இம்மாதிரி போக்குக்கு சினிமாக்காரர்களும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாகி விடுகிறார்கள் என்பதுதான் கொடுமை. ஒரு நாளைக்கு நூறு ஹிட்ஸ் கூட தேற்ற முடியாத இணைய தளங்களை நடத்துபவர்களுக்கு பிரத்யேக பேட்டி கொடுப்பதும், பிரஸ் மீட்களில் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதுமாக வேலியில் போகிற ஓணானைத் தூக்கி தங்கள் வேட்டிக்குள் விட்டுக் கொள்கிறார்கள்.

சரி, இவர்கள் ஒரு படத்தைப் பற்றி நல்லவிதமாகச் சொல்ல வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

அந்த பிசாத்து இணையதளங்களுக்கு ஆயிரங்களைக் கொட்டி விளம்பரம் கொடுக்க வேண்டும். இந்த இணையதள விளம்பரங்களால் ஒரு காட்சிக்கு நாலு பேரைக் கூட தியேட்டருக்கு கொண்டுவர முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் புலம்புவது சினிமாக்காரர்களின் காதில் விழுவதாகவே தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் தங்கள் பக்கங்களுக்கு லைக் விழுகிறது, த

ங்களைப் பற்றி எழுதப்படும் நாலு வரி நிலைத்தகவல்கள் ஷேர் ஆகின்றன என்கிற அல்ப சந்தோஷத்தில் யதார்த்தத்தை உணரத் தவறிவிடுகிறார்கள்.“இணையத்தில் ஒரு படத்தை நல்லமாதிரி விமர்சிப்பதால், அதை வாசிப்பவர் எவரும் தியேட்டருக்கு வருவதில்லை. மாறாக, உடனே இணையத்திலேயே டவுன்லோடு செய்துதான் பார்க்கிறார்கள்” என்று கிண்டலாகச் சிரித்து நம்மை அதிரவைக்கிறார் ஓர் இணைய விமர்சகர்.

சமீபத்தில் வெளியான அஜித்குமாரின் ‘விவேகம்’ படத்தை மிகவும் மோசமாகத் திட்டி விமர்சித்தார் ஓர் இணைய விமர்சகர். இதைத் தொடர்ந்து அவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இணையதளத்தில் நடந்த சண்டையில், அஜித்தை மிக மோசமான ஒரு வசைச் சொல்லால் அர்ச்சித்திருக்கிறார் அந்த விமர்சகர்.

பாரம்பரியமான ஊடக விமர்சகர்களுக்கும், அவசரத்துக்கு விமர்சகர்களாக ஆனவர்களுக்கும் இதுதான் அடிப்படை வித்தியாசம். நியாயமாக பார்க்கப்போனால் அஜித்தை வசைச் சொல்லால் அர்ச்சித்தவருக்கு கண்டனங்கள்தான் அதிகம் கிடைத்திருக்க வேண்டும்.

மாறாக, இந்த பரபரப்பால் அவருடைய யூட்யூப் பக்கத்துக்கு பார்வையாளர்கள் லட்சக்கணக்கில் வரத்தொடங்கி விட்டார்கள். இந்த திடீர் ஹிட்ஸ் அந்த விமர்சகருக்கு சில ஆயிரங்கள் பணமாகவும் மாறும். இணையத்தில் புழங்கும் ஒருசில சினிமாக்காரர்கள் அவருக்கு தெரிவித்த கண்டனங்கள் அப்படியே அடங்கிப் போய்விட்டன.

“உங்க படத்தை நெட்டுலே நல்லா பூஸ்ட் பண்ணுறோம். எங்களுக்கு லட்சத்துலே  ஃபாலோயர்ஸ் இன்டர்நெட்டுலே இருக்காங்க. பிரெஸ்மீட், ஆடியோ ரிலீஸ், டீஸர்,  விமர்சனம் எல்லாத்துக்கும் நியூஸ் போட்டு சூப்பரா கலக்கிடுவோம்.

ஆயிரக்கணக்குலே லைக்கு, ஷேர் கேரண்டி. பேக்கேஜ் பேசிக்கலாமா?” என்று  இப்போதெல்லாம் இவர்கள் நேரடியாகவே ‘டீலிங்’ பேசுவதற்கு இணையத்தில்  நெகட்டிவ் இமேஜுக்கு கிடைக்கும் ஹிட்ஸே பிரதான காரணமாக இருக்கிறது.  இம்மாதிரி பேக்கேஜிங்குக்கு லட்சங்களில் ஃபீஸ் வாங்குகிறார்கள்.

 ‘இன்டர்நெட்டுலே விளம்பரம் செய்யுறாங்களாம்பா... நம்ம படத்துக்கு தியேட்டர்லே நிறைய  கூட்டம் வருமாம்’ என்று அப்பாவி தயாரிப்பாளர்களும் விட்டில்பூச்சிகளாக  இந்த இணைய மாஃபியாக்கள் வெட்டும் குழிக்குள் விழுகிறார்கள். சில பி.ஆர்.ஓ.க்களும் இதற்கு துணைபோகிறார்கள்.

அப்படியெனில் இணையத்தில் வரும் விமர்சனங்கள் அத்தனையுமே போலிதானா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. நியாயமாக விமர்சிக்கக்கூடிய சினிமா ரசிகர்கள் அங்கேயும் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் சினிமாத்துறையினரைத் தொடர்புகொண்டு ‘கட்டிங்’ கேட்பதில்லை. தாங்கள் ரசித்ததை, எதிர்பார்த்ததை நேர்மையாக தங்களை வாசிப்பவர்களோடு பகிர்ந்து கொள்வதோடு மட்டும் திருப்தியடைகிறார்கள்.

திருட்டு டிவிடி பிரச்னைக்காக போர்க்கோலம் பூண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம், விமர்சனம் என்கிற பெயரில் கட்டப்பஞ்சாயத்து கணக்காக நடைபெறும் இந்த அடாவடி பிசினஸை இப்போதே கட்டுக்குள் கொண்டுவரத் தவறினால், எதிர்காலத்தில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகிவிடும்.

- மீரான்

நன்றி:தினகரன் வெள்ளிமலர்