திருட்டு சினிமா புரட்சி!



பிலிமாயணம் 7

சென்னை போன்ற பெருநகரங்களில் தூர்தர்ஷனில் மக்கள், வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கூட்டம் கூட்டமாக ‘ஒளியும், ஒலியும்’ பார்த்துக் ெகாண்டிருந்த காலம்.... குக்கிராமங்களில் அதற்கான வாய்ப்பு குறைவு. எங்கள் ஊரில் இரண்டு வீடுகளுக்கு டிவி வந்திருந்தது. கருப்பு வெள்ளை டிவிதான்.

அவை இரண்டும் பெரும் பணக்காரர்களின் வீடு. வீட்டுக்கு ேமலே நீட்டிக் கொண்டிருந்த ஆண்டெனாவை அந்த வழியாக போவோர், வருவோர் சற்று நேரம் நின்று பார்த்து விட்டுச் செல்வார்கள். இரவு நேரங்களில் வீட்டையும் தாண்டி வெளியில் கேட்கும் இந்த சப்தம் எல்லோரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும்.

இந்தக் காலகட்டத்தில் எங்கள் ஊர் பகுதிக்கு வண்ண சினிமாவை கொண்டு வந்தார்கள் அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள். எங்கள் ஊருக்கு அருகில் வடகரை என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்தான் முதன் முதலில் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்கள்.

அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் சென்ற ஓரிரு வருடங்களிலேயே சொந்த வீடு கட்டுவதும், ேதாப்பு ெதாரவு வாங்குவதுமாக இருந்தார்கள். கவர்மென்ட் மாப்பிள்ளையை விட அரபு நாட்டுக்கு வேலைக்கு போகும் மாப்பிள்ளைக்குத்தான் அப்போதெல்லாம் மதிப்பு அதிகம்.

அப்படிச் சென்றவர்கள் திரும்பி வரும்போது கொண்டு வந்தது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும், டெக்கும். வடகரையைச் சேர்ந்த ஒருவர் தான் கொண்டு வந்த பெரிய சைசிலான தொலைக்காட்சி பெட்டியையும், டெக்கையும் வைத்து வீட்டு முற்றத்தில் சுற்றிலும் தார்பாய்களைக் கட்டி ஒரு தியேட்டர் தொடங்கினார்.

காலை, மதியம், மாலை, இரவு என 4 காட்சிகள் அந்தத் தியேட்டரில் ஓடியது. வெளிநாட்டில் இருந்து வரும்போது பத்து பதினைந்து புதுப்பட கேசட்டுகளை அள்ளி வந்தார். அதுவல்லாமல் திருநெல்வேலிக்குச் சென்று திருட்டுத்தனமாக கேசட் விற்கும் இடங்களில் இருந்து புதுப்பட கேசட் வாங்கி வந்தார். அந்த கேசட்டுகளின் கவரில் ‘பாத்திமா-அன்வர் நிக்காஹ்’, ‘மெக்கா புனிதப் பயணம்’ இவ்வாறாக எழுதப்பட்டிருக்கும். எந்த கேசட்டில் என்ன படம் இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

படம் பார்க்க ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என இரண்டு விதமான டிக்கெட் கட்டணம். டி.வி பெட்டிக்கு அருகில் இருந்து பார்க்க இரண்டு ரூபாய் கட்டணம், சற்று தூரத்தில் இருந்து பார்க்க ஒரு ரூபாய் கட்டணம். பக்கவாட்டில் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும், அது உள்ளூர் கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு. அவர்களுக்கு கட்டணமெல்லாம் கிடையாது. சட்டவிரோதமாக இதை அனுமதிப்பதால் தரப்படும் லஞ்சம். அவர்களும் ஏனோ பணமாக வாங்காமல் படத்தை பார்ப்பதையே லஞ்சமாகப் பெற்றுக் கொண்டார்கள்.

அன்றைக்கு என்ன படம் ஓடுகிறது என்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியும். உள்ளூரில் ஓடுகிற டவுன் பஸ்களின் நம்பர் பிளேட் பக்கத்தில் சின்னதாக ஒரு வெள்ளை தாள் ஒட்டப்பட்டு அதில் படத்தின் பெயர் மட்டும் பேனாவால் எழுதப்பட்டிருக்கும், வேறு எந்த தகவலும் இருக்காது. அதைப் பார்த்துவிட்டு படத்துக்கு வருவார்கள்.

நாங்கள் எங்கள் ஊரிலிருந்து வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு செல்வோம். அந்தத் தியேட்டர் வீடு இருக்கும் தெரு முழுக்க சைக்கிள்கள்தான் நிற்கும். சிலர் பைக்கில் வருவார்கள். அரங்கம் நிறையும் வரை பல படங்களின் பாடல்களின் தொகுப்பு கேசட்டை போட்டு விடுவார். அது ஓடிக் கொண்டிருக்கும். அரங்கம் நிறைந்ததும் பட கேசட்டை ஓட விடுவார். வந்த ஷோவுக்கு இடம் கிடைக்காமல் அடுத்த ஷோவை காத்திருந்து பார்த்துச் செல்வார்கள் கலா ரசிகர்கள்.

சில நேரங்களில் நள்ளிரவில் தனி ஷோவை ஓட்டுவார். அது போலீஸ்காரர்களுக்கும், உள்ளூர் அரசியல்வாதிகளுக்குமான ஸ்பெஷல் படம். அந்தப் படங்கள் எழுப்பும் வினோதமான ஒலிகளை அந்தப் பகுதி மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதி என்பதால் புகார் திருநெல்வேலி வரைக்கும் பறந்தது.

திடீரென ஒரு நாள் தனி ஜீப்பில் வந்த ஸ்பெஷல் போலீஸ் அதிகாரிகள் தியேட்டரைப் பிரித்து எறிந்து விட்டு, டி.வி பெட்டியையும் கேசட்டுகளையும், அந்த இளைஞரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். இதில் அதிதீவிரமாக பணியாற்றியது நேற்று வரை அங்கு படம் பார்த்த போலீஸ்காரர்கள்தான்.

விஷயம் இதோடு நின்று விடவில்லை. அதன் பிறகு ஊருக்கு வந்த எல்லா ஆண்களின் லக்கேஜிலும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், டெக்கும் தவறாமல் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு வீடும் தனித்தனி தியேட்டர்ஆனது. வீட்டுக்கு வீடு கேசட்டுகள் கைமாறின. குடும்பம் குடும்பமாக கேசட் போட்டு படம் பார்த்தார்கள். திருட்டு சினிமா புரட்சி இப்படித்தான் எங்கள் பகுதியில் ஆரம்பமானது.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்