நல்ல ஜோடியும், தப்பு ஜோடியும்! ‘பிச்சுவா கத்தி’ பகீர்



இயக்குநர் சுந்தர்.சியிடம் ‘நகரம்’, ‘கலகலப்பு’ படங்களிலும் இயக்குநர் பத்ரியிடம் ‘தம்பிக்கு இந்த ஊர்’ படத்திலும் உதவி இயக்குநராக வேலை செய்துவிட்டு ‘பிச்சுவா கத்தி’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் ஐயப்பன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்தவரிடம் பேசினோம்.“டைட்டிலே அராஜகமா இருக்கே? படத்தின் கதைக்களம் என்ன?”

“நகரத்தில் இருக்கும் ஒரு காதல் ஜோடியும், கிராமத்தில் இருக்கும் ஒரு காதல் ஜோடியும் தீவிரமாக காதலிக்கிறார்கள். காதலர்களுக்கு பிரச்னை வரும் போது ஒரு ஜோடி நல்ல வழியைத் தேடுகிறது. இன்னொரு ஜோடி தப்பான வழியைத் தேடுகிறது. அதிலிருந்து கதை எப்படி நகர்கிறது என்பதை வைத்து திரைக்கதை அமைத்துள்ளேன்.

கிராமத்தில் இருக்கும் இனிகோ பிரபாகர், ஸ்ரீப்ரியங்கா ஜோடியும் நகரத்தில் இருக்கும் செங்குட்டுவன், அனிஷா ஜோடியும் எப்படி இணைகிறார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். காமெடி கலந்த த்ரில்லராகத்தான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.”“இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்களுடன் வேலை செய்துள்ளீர்கள். அவர்களுக்குள் ஈகோ குறுக்கீடு இருந்ததா?”

“இனிகோவைப் பொறுத்தவரை ஈகோ இல்லாத ஆர்ட்டிஸ்ட். படிப்பு முடிந்து வேலை தேடும் கிராமத்து இளைஞன் வேடத்துக்குப் பொருத்தமாக இருந்தார். அதுமட்டுமில்ல, இது ஆர்ட்டிஸ்டுக்கான படம் கிடையாது. கதைக்குத்தான் ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டார்கள்.

செங்குட்டுவனுக்கு இதுதான் முதல் படம். சேல்ஸ்மேன் வேடம். பொதுவாக சில கதைகளில் இயக்குநர்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்ய வேண்டும். சில கதைகளில் ஆர்ட்டிஸ்டுகளும் தங்கள் சொந்த சரக்கை கொடுத்தால்தான் அந்தப் படைப்பு சிறந்து விளங்கும். அந்த வகையில் இரண்டு ஹீரோக்களும் அவரவர் கேரக்டர்களுக்குள் புகுந்து என்ன வித்தியாசம் பண்ணலாம் என்று யோசித்து மிகச் சிறந்த பெர்ஃபாமன்ஸை கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல்தான் ஹீரோயின்கள் பிரியங்காவும், அனிஷாவும். புரிதலுடன் வேலை பார்த்தார்கள். இரண்டு பேரிடமும் முழு ஸ்கிப்ரிட்டையும் கொடுத்து படிக்க சொன்னதால் படப்பிடிப்பை சுமுகமாக நடத்த முடிந்தது.”“படத்துல நட்சத்திரப் பட்டாளம் களைகட்டுதே?”“கதைதான் அதை தீர்மானித்தது.

இது த்ரில்லர் கலந்த கதையாக இருந்தாலும் எல்லாத் தரப்பு ஆடியன்ஸுக்கான படமாக இருக்கும். அதன்படி இயல்பாகவே கதையில் காமெடியும் ஒட்டிக்கொண்டது. யோகிபாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் மூவரும் இணைந்து காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

படிக்காத மந்திரியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் பண்ணும் சேட்டைகள் காமெடியின் உச்சமாக இருக்கும். இந்த இடத்தில் ராஜேந்திரனின் கடமை உணர்வைப் பற்றி யும் சொல்லியாக வேண்டும். ராஜேந்திரன் தன் வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது போல் ஒரு காட்சி. அப்போது யோகிபாபு அவரது நண்பர்களுடன் அவரைக் கொல்ல வரும்போது உடற்பயிற்சிக் கருவி ராஜேந்திரனின் கண்களை பதம் பார்த்தது.

கண்ணில் ரத்தம் வழிகிறது. அதை பொருட்படுத்தாமல் ரத்தத்தை துடைத்து விட்டு உடனே காட்சிகளில் நடித்துக் கொடுத்தார். அதைப் பார்த்து யூனிட்டில் இருந்தவர்கள்அனைவரும் அவருடைய ஆர்வத்தை கைதட்டி பாராட்டினார்கள்.”
“டெக்னீஷியன்ஸ் பற்றி?”

“தனிப்பட்ட விதத்தில் எனக்கு ரகுநந்தன் இசை ரொம்பப் பிடிக்கும். அவர் இசையமைத்த ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘சுந்தர பாண்டியன்’, ‘மஞ்சப்பை’ என்று எல்லா படங்களும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். இசையும் கதையின் தன்மையை கெடுக்காமல் இருந்திருக்கும்.

இந்தக் கதைக்கும் அப்படியொரு இசை தேவைப்பட்டதால் என்னுடைய முதலும் கடைசியுமான சாய்ஸாக ரகுநந்தன் இருந்தார். அனைத்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். ‘ஏ சிறுக்கி’, ‘என்ன சொன்ன’ என்று இரண்டு மெலடி பாடல்களும் அடுத்த ‘காதல் பிசாசே’ மாதிரியான ஹிட் ரகம்.

கே.ஜி.வெங்கடேஷ் கேமரா. ஏற்கனவே ‘சதுரங்க வேட்டை’, ‘பாம்பு சட்டை’, ‘சரவணன் இருக்க பயமேன்’ படங்களில் அவருடைய திறமை பேசப்பட்டது. ஒரு கதைக்கு எப்படி லைட்டிங் பண்ண வேண்டும் என்பதில் வெங்கி ஸ்பெஷலிஸ்ட். அவருடைய லைட்டிங் சென்ஸ் அபாரமாக இருக்கும். அவருடைய அந்த அனுபவம் படத்துக்கு பெரிதும் பலம்.”
“நீங்களும் சென்சார் போர்டுடன் போராடினீர்களாமே?”

“ஆக்சுவலா இந்தப் படத்துக்கு க்ளீன் யு சர்டிபிகேட் கொடுத்திருக்க வேண்டும். ஏன்னா எந்த இடத்திலும் கட் கொடுக்கவில்லை. மியூட் காட்சிகளும் இல்லை. அப்படி இருந்தும் எங்களுக்கு யு/ஏ சர்பிகேட்தான் கொடுத்தார்கள். காரணம் கேட்டதற்கு, உங்க தலைப்பில் வயலன்ஸ் இருக்குது என்றார்கள். இதெல்லாம் ஒரு காரணமா என்று கேட்டு போராடினேன்.

‘யு’ வேண்டும் என்றால் நீங்கள் ரிவைசிங் கமிட்டிக்கு அப்ளை பண்ணுங்க என்றார்கள். அங்கேயும் அதே பதில்தான் கிடைத்தது. எவ்வளவோ படங்களில் தலைப்பிலும் சரி, கதையிலும் சரி ரத்தத்தை தெறிக்கவிட்டு இருக்காங்க. ஆனால் அந்தப் படங்களுக்கு எப்படி யு சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்பது இண்டஸ்ட்ரியில் உள்ளவர்களுக்கு தெரியும்.

எனக்கும் சரி இந்தப் படத்தை தயாரிக்கும் ஸ்ரீ அண்ணாமலை மூவிஸ் மாதையனுக்கும் சரி இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே எதுக்கு பிரச்சனை என்று ரிலீஸுக்கான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

படத்தில் எந்த இடத்திலும் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை. யதார்த்தமான விஷயங்களைத்தான் சொல்லியுள்ளோம். சாத்தியம் இல்லாத விஷயங்கள் படத்துல இருக்காது. பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகள் இல்லை. காதலில் சரியான பாதையில் செல்கிறவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன்.”“சுந்தர்.சி?”

“எனக்கு சொந்த ஊர் தர்மபுரி. ப்ளஸ் டூ முடித்ததும் கரஸ்ல டிகிரி பண்ணேன். எல்லா உதவி இயக்குநர்கள் போலவே சென்னையில் நான் பார்க்காத வேலை இல்லை. அந்த சமயத்தில் செந்தில் என்ற இணை இயக்குநரின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் என்னை சுந்தர்.சி சாரிடம் சேர்த்துவிட்டார். அவருக்கு நன்றி.

சுந்தர்.சி சாரிடம், ஒரு படத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியும், எப்படி திட்டமிட வேண்டும், எப்படி செலவை மிச்சப்படுத்துவது போன்ற விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் வேலை பார்த்த இரண்டு இயக்குநர்களும் காமெடிக்கு பேர் போனவர்கள். அப்படிப் பார்த்தால் இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கிறதைவிட காமெடி காட்சிகள் அதிகம். ஆனால், ஸ்கிரீன்ப்ளே விஷயத்தில் என்னுடைய தனித்துவம் இருக்கும்.”

- சுரேஷ்ராஜா