சிலாக்கி டும்மா சிவராக் சங்கர்



‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய கலைப் பயணத்தை ஆரம்பித்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவராக் சங்கர். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘சிலாக்கி டும்மா’ என்ற பாடலுக்கு ‘டெத் குத்து’ என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அந்த நடன அசைவுகள் மிகவும் ஃபேவரைட். கோலிவுட்டில் பிஸி டான்ஸ் மாஸ்டராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவராக் சங்கரிடம் பேசினோம்.

“சினிமாவுக்கு எப்படி?”
“சின்ன வயதிலேயே ஏதாவது ஒரு பாடல் கேட்டால் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுவேன் என்று வீட்ல உள்ளவங்க சொல்லுவாங்க. வளர்ந்த பிறகும் என்னால் டான்ஸை விட முடியவில்லை.

இப்போது பிரபலமாக இருக்கும் டான்ஸ் மாஸ்டர் ஷோபியின் அப்பா பவுல்ராஜ்தான் எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ராஜு சுந்தரம், பிரபுதேவா, கலா, பிருந்தா, லாரன்ஸ்  மாஸ்டர்களிடம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட சுமார் முந்நூறு படங்களில்  டான்ஸ் அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணினேன்.”

“முதல் வாய்ப்பு?”
“சினிமாவில் முதன் முதலில் எனக்கு நடன இயக்குநராக வாய்ப்பு தந்தவர் இயக்குநர் சுந்தர் சி. ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படம்தான் நான் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமான முதல் படம். அந்தப் படத்தின் அனைத்து பாடலுக்கும் நான் தான் நடனம் அமைத்தேன்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘சிலாக்கி டும்மா’ என்ற பாடல்தான் எனக்கு சினிமாவில் மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. அதே போல் அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மஜ்ஜா மல்சா’ பாடலில் வரும் நகைச்சுவையான நடன அசைவுகளும் எனக்கு பெயரையும் வாய்ப்புகளையும் வாங்கிக் கொடுத்தது.

தொடர்ந்து ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் அனைத்து பாடலுக்கும் நடனம் அமைத்தேன். சமீபத்தில் வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தில் இடம் பெற்ற ‘அடியே சக்கரக்கட்டி’, ‘மாட்டிக்கிச்சு’, ‘கிரேட்  ஜி’ போன்ற பாடல்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை ரசிக்கிறார்கள் என்று அறியும்போது எனக்கு அது மேலும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. முதலில் ‘மீசைய முறுக்கு’ படத்தில் வரும் ‘அடியே சக்கரக்கட்டி’ பாடலுக்கு மட்டும் தான் நடனம் அமைக்க சென்றேன். என்னுடைய கோரியோ பிடித்துப் போய் ஹிப்ஹாப் தமிழா ஆதி என்னை அனைத்து பாடலுக்கும் நடனம் அமைக்க வாய்ப்பு கொடுத்தார்.”

“சுந்தர்.சி, ஹிப் ஹாப் தமிழா ஆதி போன்றவர்களை நடனமாட வைத்த அனுபவம்?”
“பொதுவா நான் ஒர்க் பண்ற நடிகர்களின்  பாடிலேங்வேஜ்க்கு ஏற்ப நடனம் அமைப்பேன். சுந்தர்.சி சாரும், ஹிப் ஹாப் ஆதியும் எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்ஸ் கொடுத்தாலும் முடியாது என்று சொல்லமாட்டார்கள்.

ஆதி ப்ரோ நான் சொல்லிக் கொடுக்கும் ஸ்டைலையும் தாண்டி இங்கிலீஷ் ஆல்பத்தில் வருவது மாதிரி சில டச் கொடுப்பார். ஆதி ப்ரோ என்னை டான்ஸ் மாஸ்டர் மாதிரி ட்ரீட் பண்ணாமல் ஃப்ரெண்ட் மாதிரி பழகியதோடு என்னுடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார்.”
“அடுத்து?”

“நிறைய இருக்கு. ‘ரம்மி’ இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கும் படம், ‘தமிழன்’ மஜித் இயக்கும் படம் உள்பட கைவசம் நான்கைந்து படங்கள் வைத்துள்ளேன். என்னுடைய நடனத்தைப் பார்த்துவிட்டு விஷால் சார் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்.”
“உங்க ‘சிலாக்கி டும்மா’ விஜய்க்கு ரொம்ப பிடிக்குமாமே?”

“அந்தப் பாராட்டு நானே எதிர்பாராதது. ‘சிலாக்கி டும்மா’ பாடலில் இடம்பெற்றுள்ள நடனம் விஜய் சாருக்கும் அவருடைய மகனுக்கும் மிகவும் பிடிக்கும் என்று அவரே என்னுடைய உதவி நடன இயக்குநரை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தபோது கூறியுள்ளார். சினிமாவில் அதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.”

“நடனத்தில் உங்களுடைய ஸ்டைல்?”
“ஹிப்ஹாப், கிளாசிக்கல் இரண்டையும் கலந்து பண்ணணும். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் போன்ற  ஸ்டார்களுக்கு வித்தியாசமாக நடனம் அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.”

- சுரேஷ்ராஜா