அதுல்யாவுக்கு காதலிக்க நேரம் வரலை!



‘காதல் கண் கட்டுதே’ படத்தில் கியூட்டாக வந்து இளசுகளை வசியம் செய்தவர் அதுல்யா ரவி. பாப்பா இப்போது சமுத்திரக்கனியுடன் ‘ஏமாளி’யில் ஏகத்துக்கும் பிஸி. “மீட் பண்ணலாமா?” என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பியதுமே, தேனினும் இனிய குரலில் வாய்ஸ் மேசேஜாக “ஒய் நாட்?” என்று கேட்டார். சென்னை வேளச்சேரி காபி ஷாஃப் ஒன்றில் அதுல்யாவை சந்தித்து கடலை போட்டோம்.
“பேக்கிரவுண்டு?”

“கோயமுத்தூர்தான் நான் பிறந்து, வளர்ந்தது. சுத்த தமிழச்சி. அப்பாவுக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ். அம்மா ஹோம் மேக்கர். எனக்கு ஒரு தம்பி இருக்கான். இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு பண்றான். தாத்தா, பாட்டின்னு ஒரே குடும்பமா இருக்கோம். நான் பி.டெக் கோவையிலும் எம்.டெக் சென்னையிலும் கம்ப்ளீட் பண்ணினேன்.”

“டிகிரி மேல் டிகிரி வாங்கியிருக்கீங்க. சினிமாவுல நடிப்பதற்கு வீட்ல க்ரீன் சிக்னல் கிடைத்ததா?”

“அப்பா, அம்மா சின்ன வயதிலேயே எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துதான் வளர்த்தாங்க. நான் என்ஜினியரிங் படிச்சதும் அப்படித்தான், நடிக்க வந்ததும் அப்படித்தான்.  நான் சினிமாவில் நடிக்க வந்தது ஒரு விபத்து மாதிரி. படிக்கும் போது நண்பர்கள் ஒரு குறும்படம் எடுத்தார்கள். ஆனால் அதில் நான் ஹீரோயின் இல்லை. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து பண்ணியதால் பெரிசா தடுக்கலை.

‘காதல் கண் கட்டுதே’ படத்தில் ஒர்க் பண்ணிய அனைவருமே ஃப்ரெண்ட்ஸ். இயக்குநர் சிவராஜ் உள்பட அதில் சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்ஸ் அனைவரும் நாலாபக்கமும் காசை புரட்டி சொந்தமா கேமரா உள்பட படப்பிடிப்புக் கருவிகள் வாங்கி படம் எடுத்தார்கள்.  என் பங்கிற்கு சம்பளம் வாங்காமல் நடித்தேன். ரிலீசுக்கு அப்புறம் அவங்களாவே சம்பளம் கொடுத்தார்கள். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், உன் இஷ்டப்படியே சினிமாவில் நடி என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள்.”

“இப்போ பண்ணிக்கிட்டிருக்க ‘ஏமாளி’ பத்திச் சொல்லுங்களேன்?”
“டைரக்டர் வி.இசட். துரை ‘காதல் கண் கட்டுதே’ பார்த்துவிட்டு அழைத்தார். ஆடிஷன் கூட பண்ணலை. டைரக்டா ஷூட்டிங் போயிட்டோம். ஆனால், முந்தைய படத்துடன் ஒப்பீடு செய்யும்போது இதில் நேர் எதிர் ரோல் பண்றேன். ஐடியில் வேலை பாக்குற பொண்ணு கேரக்டர். கொஞ்சம் மாடர்னா வருவேன். இதுக்கு மேல் என்னுடைய ரோல் பற்றி விரிவாக சொல்ல முடியாது.”

“சமுத்திரக்கனி பத்தி சொல்லுங்களேன்?”
“கனி சார் மிகப்பெரிய திறமைசாலி. செட்ல எப்பவும் ஜாலியா இருப்பார். ஒருத்தரை விடாமல் எல்லாரையும் கலாய்ப்பார். பெரிய நடிகர், இயக்குநர் என்ற பயம் இல்லாமல் பழக முடிந்தது. கூட நடிக்கிறவங்க நல்லா பண்ணினா ஸ்பாட்லயே பாராட்டுவார்.”
“தொடர்ந்து நடிக்கும் ஐடியா இருக்கா? இல்லைன்னா படிப்பை கன்டினியூ பண்ணுவீங்களா?”

“இனிமேல் படிக்கிற ஐடியா சுத்தமா இல்லை. ரொம்பவே படிச்சாச்சு. கொஞ்சமா நடிச்சாலும் நல்ல படங்கள் பண்ணணும்.”
“நிறைய படிச்சிட்டு நடிக்க வந்துட்டோமே என்று ஃபீல் பண்ணியிருக்கீங்களா?”
“எந்தத் துறையில் வேலை பார்த்து கிடைக்கிற அனுபவமா இருந்தாலும், அது நம்முடைய நாலெட்ஜ் டெவலப்புக்கு உதவும். அப்படித்தான் நான் சினிமாவைப்  பார்க்கிறேன். தனிப்பட்ட விதத்தில் என்னுடைய படிப்பு சில விஷயங்களை ஹேண்டில் பண்ண உதவியா இருக்கு.”
“பிடித்த ஹீரோ?”

“அஜித், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ்னு பெரிய லிஸ்ட். மற்றபடி இவர் கூட டூயட் பாடணும் அவர் கூட டூயட் பாடணும் என்ற ட்ரீம் எல்லாம் இல்லை. அது அது அப்பப்போ அதுவா அமையும்.”“காதல் அனுபவம்?”“பசங்க மீது வெறும் க்ரஷ்தான் உண்டு. என்னுடைய நட்பு வட்டாரம் ரொம்ப பெரிது.  ஐந்து பொண்ணுங்க, ஐந்து பசங்கன்னு நாங்க பெரிய கேங். அப்படி இருந்தாதான் எனக்கும் பிடிக்கும். காதல் மீது நம்பிக்கை உண்டு. ஆனால் அதுக்கான டைம் இன்னும் வரலை.”

“சினிமாவுல உங்களுக்கு ரோல் மாடல் யார்?”
“அப்படி யாரும் இல்லை. நயன்தாராவின் போல்ட்னஸ் பிடிக்கும். ஆனால் யாரையும் காப்பி அடிக்க பிடிக்காது. எனக்கு என்ன வருமோ அதை யூனிக்கா பண்ணுவேன்.”

“க்ளாமரா நடிப்பீங்களா?”

“எனக்கு ஹோம்லிதான் பிடிக்கும்.  ஆனால் ஹோம்லியா மட்டும் பண்ணினால் இங்கு வண்டி ஓட்ட முடியாதுன்னும் தெரியும். ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் காது கேளாத, ஊமைப் பெண்ணாகப் பண்ணியிருக்கிறேன்.  அந்த மாதிரி சேலஞ்சிங்கான ரோல் பண்ணணும். தட்ஸ் ஆல்.”

- சுரேஷ்ராஜா